முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் – சம்பிக்க ரணவக்க
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சுதந்திரமாகத் திரியும்போது அவ்வமைப்பின் உறுப்பினர்களைத் தொடர்ந்தும் சிறையில் வைத்திருக்காது அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது பற்றி அரசாங்கம் யோசனை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி பா.உ. பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
“12 வருடங்களுக்கு முன்னர் முடிவுற்ற போரை மறந்துவிட்டு நாடு முன்னேறுவதைப் பார்க்க வேண்டும்” என அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
“குமரன் பத்மநாதன், விநாயகமூர்த்தி முரளீதரன் போன்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு வழங்கப்படாமலோ அல்லது நீதிமன்றங்களால் விடுவிக்கப்படாமலோ சுதந்திரமாக இயங்குகிறார்கள். அவர்கள் மீது சட்டம் பிரயோகிக்கப்படவில்லை. அப்படியிருக்க முன்னாள் உறுப்பினர்களைத் தொடர்ந்தும் சிறைகளில் பூட்டிவைத்திருப்பதற்கு எந்தவித நியாயமும் இல்லை” என ரணவக்க தெரிவித்தார்.
“நாடு சுதந்திரமடைந்த நாளான இன்று, 12 வருடங்களுக்கு முன்னர் முடிவுற்ற போரைப்பற்றிய விளக்கங்களை ஆழ்ந்து ஆராய்ந்துகொண்டிருக்காமல், அதைப் பின்னே போட்டுவிட்டு, முன்னாட் போராளிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பை வழங்கிவிட்டு நாம் தொடர்ந்தும் முன்னேறுவதைப் பார்க்கவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் ஐ.நா.மனித உரிமைகள் சபை கூட்டத்தொடர் பற்றி ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே ரணவக்க இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் பாதுகாப்ப்பு படைகள் வெளிநாட்டு நீதிமன்றமொன்றில் விசாரிக்கப்படுவதைத் தனது கட்சி (SJB) எதிர்க்கிறது என்றும் ஆனால் ஒருவர் தனது பிரத்தியேக ரீதியில் குற்றம் புரிந்திருந்தாரானால் அவர் இலங்கையின் எல்லைகளுக்குள் உள்ள நீதிமன்றமொன்றில் விசாரிக்கப்படவேண்டும் என அது நம்புகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
