அமெரிக்காவிலிருந்து வெளிநாட்டு மாணவர்கள் திருப்பியனுப்பப்படமாட்டார்கள்!
தமது பல்கலைக்கழகக் கற்கைகளை 100% இணையவழியால் பெறும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என ட்றம்ப் நிர்வாகம் சென்ற வாரம் அறிவித்திருந்த திட்டத்தை இன்று மீளப்பெற்றுக்கொண்டுவிட்டது.
கோவிட்-19 தொற்றுக் காரணமாக பல பல்கலைக் கழகங்கள் தமது விரிவுரைகளை இணையவழியாகச் செய்வதர்க்குத் தீர்மானம் எடுத்திருந்ததை அடுத்து அப்படியான நிலையிலுள்ள வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளீயேறவேண்டுமென, ட்றம்ப் நிர்வாகம் கடந்த வாரம் திடீரென அறிக்கையொன்றை வெளியிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹார்வார்ட், MIT போன்ற பல்கலைக் கழகங்கள் ட்றம்ப் நிர்வாகத்தின் இம் முடிவுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தன.
இதன் பிரகாரம் இரண்டு பகுதியினரும் எடுத்த சமரச நடவடிக்கையின் பயனாக, ட்றம்ப் நிர்வாகம் தனது திட்டத்தை மீளப்பெறுவதாக அறிவித்திருக்கிறது.
பெருந்தொகையான வெளிநாட்டு மாணவர்கள் வருடம் தோறும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்குப் படிக்கச் செல்வதால், அவற்றுக்குப் பெருமளவு வருமானத்தை அது ஈட்டிக்கொடுக்கின்றது.
ஹார்வார்ட் மற்றும் MIT ஆகிய பல்கலைக்கழகங்கள், கொறோணாவைரஸ் தொற்றுக் காரணமாக, தமது வகுப்பறைக் கற்கைகளை நிறுத்திவிட்டு இணைய வழியில் கற்பிக்கப்போவதாகச் சமீபத்தில் அறிவித்திருந்தன. ஆனால் அரசாங்கம் தம்முடன் ஆலோசியாது இப்படியான் முடிவொன்றை எடுக்குமென அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
