சிங்கள-பெளத்த அடையாளத்தைத் துறப்பதாக சம்பிக்க ரணவக்க அறிவிப்பு!
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் துறந்த பாட்டாளி சம்பிக்க ரணவக்க பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயவில் இணையப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுவரை அவர் தன்னை ஒரு தீவிர சிங்கள பெளத்த தீவிர்வாதியாகக் காட்டி வந்த அவர் இனிமேல் அந்த அடையாளத்தைத் துறந்து சகல தரப்பினரையும் இணைத்து செயற்படத் தீர்மானித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
55 வயதுடைய ரணவக்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறீசேன ஆகிய இரண்டு ஜனாதிபதிகளின் கீழும், இரண்டு தடவைகள் அமைச்சராகக் கடமையாற்றியுள்ளார்.
இன்று கொழும்பில் கூடிய ஜாதிக ஹெல உறுமய கூட்டத்தில் தனது பதவி விலகல் குறித்து பேசும்போது அவர் “எமது எதிர்காலத்தை வார்த்து வரும் இளைய சமுதாயத்திடம் தலைமைப் பதவியை விட்டுவிடத் தான் தீர்மானித்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
“கோதபாய ராஜபக்சவுக்காக சிறீலங்கா பொதுஜன எழுப்பிய பிம்பம் சிதறிப்போய் அவரைக் கடவுளாகச் சித்தரித்தது எல்லாம் இப்போது உடைந்து போய்விட்டது. மக்களின் நம்பிக்கை தகர்க்கப்படும்போது இத் தலைவர்களின் உண்மையான முகங்கள் தெரியவாரம்பிக்கின்றன. ஆளும் கட்சி (SLPP) திருடர்களாலும் ஏமாற்றுக்களாலும் உருவாக்கப்பட்ட கட்சி. இப்போது அது மண் திருடர்களினதும், கசிப்பு காய்ச்சுபவர்களினதும், போதை வஸ்து விற்பவர்களினதும், இதர குற்றவாளிக் கும்பல்களினதும் கட்டுப்பாட்டிலுள்ள கட்சி. இவர்களைப் புத்த பிக்குகள் ஆதரிப்பதைப் பார்க்கும்போது மனம் வெதும்புகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
“தற்போது ஆட்சியிலிருப்பவர்களை ஆதரிக்கும் புத்த பிக்குகள் தத்துவார்த்த ரீதியில் ஒழுகுவதில்லை. மாறாக, தன்னலக் குழுக்களை ஆதரிப்பவர்களாகவும், அரசியல் அபிலாட்சைகளைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் ‘குரல் வெட்டு சாதுக்கள்’ என்றழைக்கப்படுகிறார்கள்” என்றார் அவர்.
அரசாங்கம் பொருளாதாரத்தை முறையாக நிர்வகிக்காமையால் இலங்கை தனது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போய்விட்டது என அவர் ஆட்சியாளரைக் குற்றஞ்சாட்டினார்.
“சமீப காலங்களில் நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்தியை மேற்கொண்டு வருபவர்கள் புதிய தலைமுறையைச் சேர்ந்த கல்வியில் மேம்பட்ட வகுப்பினர், பழைய மேட்டுக்குடியினரல்லர்” என அவர் தெரிவித்தார்.
சமாகி ஜன பலவேகய புதிய ஐக்கிய தேசியக் கட்சியல்லவெனவும் அது ஒரு உண்மையான ஜனநாயக அமைப்பு எனவும் அதில் தான் பங்காளிக் கட்சியாக இல்லாது முழு அங்கத்தவராக இணையவுள்ளதாகவும் ரணவக்க தெரிவித்தார்.
1980 களில் ஜே.வி.பி. யினருடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சம்பிக்க ரணவக்க பின்னர் பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கத்தில் இணைந்து செயற்பட்டபோது ஒரு தமிழ் இன விரோதியாகப் பார்க்கப்பட்டார். தேசிய பாதுகாப்பு விவகாரத்தை தமிழ்ச் சிறுபான்மையினருக்கு எதிராகச் சிங்கள மக்களைத் திசை திருப்புவதற்கு இந்த இயக்கம் பேருதவி செய்திருந்தது.
