India

தமிழ்நாடு | மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்குகிறார்


பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம்?

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி புதிய கட்சியொன்றைத் தொடங்கவிருப்பதாக அறியப்படுகிறது. இக் கட்சிக்கு ‘கலைஞர் தி.மு.க.’ (KDMK) எனப்பெயரிடப்படலாமெனவும் செய்திகள் கிடைத்துள்ளன. அழகிரியின் மகன் தயாநிதி புதிய கட்சி தொடங்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

முன்னாள் நடிகை குஷ்புவைத் தமது கட்சிக்குள் எடுத்துக்கொண்ட தமிழ்நாடு பா.ஜ.க. அணி 2021 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் வாக்குகளைப் பிரித்து தமிழ்நாட்டில் வேரூன்ற மேற்கொள்ளும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.


தமிழ்நாடு பாஜ.க. அணியிற்கும் அழகிரியின் அணியிற்குமிடையில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்ரு வருவதாகவும், சகலதும் திட்டமிட்டபடி நடைபெற்றால், நவம்பர் 21 இல் சென்னை வரவிருக்கும் உள்ளக அமைச்சர் அமித் ஷாவை அழகிரி சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சகோதரர்கள் இருவருக்குமிடையில் நீண்ட காலமாகப் பகை இருந்து வந்தது எனினும் 2014 இல் அழகிரியைக் கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் ஸ்டாலின் விலக்கியிருந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுமாகில் அழகிரியின் வியாபாரங்களுக்கு தி.மு.க.வினால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் அழகிரி இப்படியான நகர்வை எடுத்துள்ளதாக, தமிழ்நாடு பாஜ.க. அணித் தலைவர் எல்.முருகன் தெரிவித்ததாகப் பேசப்படுகிறது.

ஸ்டாலினி மகன் உதயநிதி தி.மு.க. இளைஞர் அணித் தலைவராக இருப்பதுபோல் க.தி.மு.க. வின் இளைஞர் அணிக்கு தயாநிதி தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அழகிரியின் இந்த நகர்வு பற்றி ஸ்டாலினுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது என்றும் ” அவர் பா.ஜ.க.விடம் போக விடுங்கள். ஆறு வருடங்கள் தொலைந்துபோயிருந்த அவரிடம் வாக்குகளோ, ஆதரவாளரோ, பணமோ இல்லை. இரண்டு நாட்கள் தலையங்கங்களில் வருவதைத் தவிர அவரால் தமிழ்நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது” என அவர் தெரிவித்ததாகவும் அறியப்படுகிறது.