Sri Lanka

சரணடைந்த விடுதலைப் புலிகளைக் கொன்றுவிட்டதாக கோதாபய ராஜபக்ச கூறவில்லை – மறுக்கும் ஜனாதிபதி அலுவலகம்


பெப்ரவரி 12 அன்று உலகத் தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட இணையவழிக் கருத்தரங்கில் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் றாப் தெரிவித்த கருத்துக்கள் இலங்கை ஆட்சியாளர் மத்தியில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இறுதிப் போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகள் பற்றி தூதுவர் றாப் அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான கோதாபய ராஜபக்சவுடன் பேசியபோது “அவர்களை நான் கொன்றுவிட்டேன்”, “அவர்களை நான் கொன்றுவிட்டேன்”, “அவர்களை நான் கொன்றுவிட்டேன்” எனக் கோதாபய கூறியதாக ஸ்டீபன் றாப் இக் கருத்தரங்கில் பேசியபோது குறிப்பிட்டிருந்தார்.


போர்க் குற்றங்கள் மற்றும் உலக குற்றவியல் நீதிக்கான அமெரிக்கத் தூதுவராக 2009 முதல் 2015 வரை ஸ்டீபன் றாப் பணியாற்றியிருந்தார். அப்போது பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோதாபய ராஜபக்சவுடன் கொழும்பில், சரணடைந்த விடுதலைப் புலிப் போராளிகள் பற்றிப் பேசியபோது, அவர்களைச் சட்டத்துக்கு முன் நிறுத்துவதில் தனக்கு நம்பிக்கை இல்லயெனவும் அது காலத்தை இழுத்தடிக்கும் செயல் மட்டுமல்லாது அதன் மூலம் அவர்கள் தப்பிவிடுவார்கள், அதனால் தான் அவர்களைக் கொன்றுவிட்டேன் என அவர் கூறியதாகவும் தூதுவர் இக் கருத்தரங்கில் தெரிவித்திருந்தார்.

தூதுவர் றாப் இக் கருத்தரங்கில் கூறிய விடயங்கள் பற்றி கொழும்பிலிருந்து வெளிவரும் ‘தி ஐலண்ட்’ பத்திரிகை ஜனாதிபதி அலுவலகத்திடம் கருத்துக் கேட்டபோது, “றாப்பின் கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லை. அவர் பதவி விலகி 7 வருடங்களுக்குப் பிறகு தற்போது இவற்றைக் கூறுவதன் நோக்கமென்னவெனத் தமக்குத் தெரியாது” எனத் தெரிவித்ததாக அப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.



இந்திய இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை ஐ.நா. விசாரிக்க முயற்சிகளை எடுக்கவில்லை என்பதற்காக இலங்கை ஐ.நா. மீது சந்தேகம் கொண்டிருந்ததாகவும், அதற்கு, ‘சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை விசாரணைக்குட்படுத்தியிருந்தால் இக்குற்றங்களை வெளிக்கொணர்ந்திருக்க முடியுமென’ ஸ்டீபன் றாப் வினவியபோது “வழக்குகள் நீண்டகாலம் எடுக்கும், அதனால் அவர்கள் தப்பிவிடுவார்கள். எனவே அவர்களைக் கொன்றுவிட்டேன்” என கோதாபய பதிலளித்ததாகவும் றாப் இக் கருத்தரங்கில் தெரிவித்திருந்தார்.

நம்பத்தகுந்த ஆதாரங்களின்படி வெளியே சொல்லப்பட்ட சரணடைந்த பின்னர் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை 360 எனக் கூறப்படுகிறது.