Sri LankaWorld

ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க சர்வதேசம் முன்வரவேண்டும் – முன்னாள் ஐ.நா. அதிகாரிகள்


“இலங்கையின் அடிப்படையான பிரச்சினைகளைத் தீர்க்கத் தகுந்த அறிவார்ந்த தலைமை ஒன்றினால் மட்டுமே முடியும், அது தற்போது அங்கு இல்லை. இலங்கையில் மனித உரிமைகளை முன்னெடுக்கவும், நல்லாட்சியை நிலைநிறுத்தவும் வல்ல கருவிகளையும் நல் நோக்கத்தையும் கொண்டிருந்தும், அவற்றை நடைமுறைபடுத்தத் தேவையான துணிச்சல் ஐ.நா.விடம் இல்லை. எனவே அதை நம்பியிருநதால் ஏமாற்றமும் துன்பமுமே மிஞ்சும்” எனத் கூறுகிறார் முன்னாள் ஐ.நா. உதவி செயலாளர் நாயகமும், ‘இலங்கையில் ஐ.நா. வின் செயற்பாடுகள் மீதான செயலாளர் நாயகத்தின் மீளாய்வு அறிக்கை’யை எழுதியவருமான சார்ள்ஸ் பெட்றீ.

பெப்ரவரி 12, 2021 அன்று “இலங்கை: நீதி, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றுக்கான தேடல்” என்ற தலைப்பில் உலகத் தமிழர் பேரவை, நியூ யோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் மற்றும் உலக நீதிக்கான மையம், சமாதானத்துக்கும் நீதிக்குமான இயக்கம், கனடிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்களால் இணையவழிக் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


உலகம் முழுவதிலுமிருந்து 3000 பேர் வரையில் கலந்துகொண்ட இக் கருத்தரங்கில், முன்னாள் ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகம் சார்ள்ஸ் பெட்றீ, முன்னாள் ஐ.நா. விசேட விசாரணையாளர் பப்ளோ டி கிறீஃப், உலக குற்றவியல் நீதிக்கான அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் றாப், இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான பவானி ஃபொன்சேகா, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் அமீர் ஃபயஸ், இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், சமாதானம், பெண்ணுரிமைகள் செயற்பாட்டாளரான ஷ்றீன் சரூர் மற்றும் இலங்கை பா.உ. எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமது கருத்துக்களைப் பரிமாறியிருந்தார்கள்.

இவர்களின் பேச்சுக்களைத் தொடர்ந்து இணையவழியாகக் கலந்துகொண்டவர்களிடமிருந்து முன்வைக்கப்பட்ட கேள்விகளை, இலங்கை சமாதானத்துக்கும் நீதிக்குமான இயக்கத்தைச் சேர்ந்த மெலிஸா ட்றிங் நெறிப்படுத்தியிருந்தார்.

இக் கருத்தரங்கத்தை மீண்டும் பார்க்க விரும்புவர்களுக்காக இக்கருத்தரங்கின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.



கருத்தரங்கின் காணொளிப் பதிவு

இக் கருத்தரங்கு தொடர்பாக அதை ஒழுங்கு செய்த அமைப்புக்களின் சார்பாக உலகத் தமிழர் பேரவை விடுத்த ஊடக அறிக்கையைத் தரவிறக்க, கீழேயுள்ள தொடுப்பை அழுத்தவும்.