தலைநகரில் திருவிழா | அமெரிக்காவின் ‘துரும்பர்’ நாடகம் – ஒரு (மாதிரியான) பார்வை
சிவதாசன்
அப்பாடா, ஒருவாறு முடிந்துவிட்டது. ‘கலவரம் செய்வது எப்படி’ என அமெரிக்க அரசியல்வாதிகள் கொடுத்த இணையவழிக் கல்வி ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. இனித் தான் பரீட்சை.
ஏற்கெனவே விடுதலையாக மார்-அ-லாகோ வில் பந்தை உருட்டிக்கொண்டு திரியும் துரும்பரை செனட்டர்கள் மீண்டும் ஒரு தடவை ‘விடுதலை’ செய்திருக்கிறார்கள். தீர்ப்பு இப்படித்தான் இருக்கப் போகிறது என்பது தமிழ்ப் படக் கமராக் கொப்பி போல் ஏற்கெனவே வெளிவந்துவிட்டது, எனவே துரும்பருக்கு அது அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே moment தான்.
பரீட்சை 2024 இல் தான் நடைபெறும். துரும்பர் recharge செய்யப் போதுமான காலம் இருக்கிறது. நம்ம ஊரு துரும்பர் (நந்தசேன கோதாபயர் 69 இலட்சம்) மாதிரி 75 மில்லியன் வாய்ப்பாட்டை அவர் பாராயணம் செய்து மேலும் பக்தர்களைக் கூட்டிக்கொள்ள அது போதும்.
துரும்பரைக் குற்றவாளியாக்கியிருந்தால் என்ன, ஆக்காமலிருந்தாலென்ன ஜனநாயகக் கட்சிக்கு அதனால் பெரிதாக இலாபமெதுவுமில்லை. காங்கிரஸ் அவர்கள் கையில். பேசாமல் நான்கு வருடங்களை ஓட்டி விடலாம். எனவே இந் நாடகத்தை அரங்கேற்றியதன் பின்னால் இருக்கும் அரசியல் குடியரசுக் கட்சியை மேலும் பலவீனப்படுத்துவது தான். உடைந்துபோகும் நிலையிலிருக்கும் அதைத் துரிதப்படுத்துவது தான். பைடனுக்கு இதில் உடன்பாடு இருக்காவிட்டாலும் இதுவே establishment இன் திட்டம்.
இவ் வழக்கின்போது ஒரு விடயம் நடந்தது. ஆரம்பத்தில் திட்டமிட்டபடி வாக்கெடுப்புக்கு முன்னர் சாட்சிகளைக் கொண்டுவருவதாக இருந்தது. கலவரத்தின்போது பாதிக்கப்பட்ட, காயப்பட்ட காவலர்கள் பலர் அதில் சாட்சியமளிக்க இருந்தார்கள். கலவரத்தின்போது ஒரு காவலர் கொல்லப்பட்டதும், ஒரு வாரத்தின் பின்னர் மேலும் இருவர் தற்கொலை செய்துகொண்டதும் சபையில் ஒப்புவிக்கப்படும்போது மேலும் சில மனச்சாட்சியுள்ள குடியரசுக் கட்சி செனட்டர்கள் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து வாக்களித்திருக்கலாம். ஏற்கெனவே மக்கள் பார்த்திராத கலவரக் காணொளிகள் மக்களை மட்டுமல்ல பல குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தன. ஆனால் அச் சாட்சிகளைக் கொண்டுவர இறுதி நேரத்தில் வழக்கு முகாமைத்துவம் மறுத்துவிட்டது. இருப்பினும், சாட்சிகள் இல்லாமலேயே வழக்கை முடித்துக்கொள்ள இரண்டு பகுதியினரும் இணங்கி ஒருவாறு முடித்துக்கொண்டார்கள். இதன் பின்னாலான அரசியலுக்கு வேறு பரிமாணங்களுண்டு. இதிலிருந்து நான் உய்த்துணர்வதொன்று மட்டுமே. துரும்பரைக் குற்றவாளியாக்காமல் விடுவதால் ஜனநாயகக் கட்சிக்கு இலாபங்கள் அதிகம்.
இப்படிப் பார்ப்போம். துரும்பருக்கு ஆதரவாக 75 மில்லியன் மக்கள் வாக்களித்திருக்கலாம். ஆனால் தேர்தலுக்குப் பின்னான துரும்பரின் நடவடிக்கைகள் பல குடியரசுக்கட்சி ஆதரவாளர்களிடம் கசப்பை விதைத்திருக்கிறது. துரும்பர் தொடர்ந்தும் இருப்பது தமது கட்சிக்கு இழப்பைக் கொண்டுவருமெனப் பல அரசியல்வாதிகளும், ஆதரவாளர்களும் நம்புகிறார்கள். தலைநகர் கலவரக் காட்சிகள் மேலும் பல ஆதரவாளர்களைத் துரும்பரிடமிருந்து அன்னியப்படுத்தி வருகிறது.
இப்படியான துரும்பரைக் குற்றவாளியாக்கி அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்வதன் மூலம் ஜனநாயகக் கட்சிக்கு நட்டம் தான் அதிகம். அவர் அடுத்த தேர்தலில் போட்டியிட்டால் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் இலகுவாக ஜனதிபதியாகி விடலாம். எனவேதான் இந்த நாடகம். துரும்பரைக் குற்றவாளியாக்குவது ஜனநாயகக் கட்சியின் நோக்கமல்ல. மாறாக இச் சந்தர்ப்பத்தைப் பாவித்து அவரையும், குடியரசுக் கட்சியையும் பலவீனமாக்குவது மட்டுமே அவர்களது நோக்கம்.
இது உங்களுக்கே தெரிகிறது, ஆனானப்பட்ட குடியரசுக் கட்சியினருக்குப் புரியாமலிருக்குமா என நீங்கள் (நக்கலாகக்) கேட்பது புரிகிறது. சரி.. அவர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் துரும்பரின் பொறிக்குள் மாட்டுப்பட்டுள்ளார்கள். குடியரசுக் கட்சியினரும் சேர்ந்து வாக்களித்து துரும்பரைக் குற்றவாளியாக்கி அவர் 2024 தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தைப் பறித்துவிட்டால், அவரது ஆதரவாளர்களின் வாக்குகளை இழக்க வேண்டிவரும். 75 மில்லியன் வாக்குகளில் 10 மில்லியன் வாக்களிக்காமல் விட்டாலுமே வெற்றிபெற முடியாது. எனவே துரும்பரைக் குற்றவாளியாக்குவதில் குடியர்சுக் கட்சிக்கும் எந்தவித இலாபமுமில்லை.
துரும்பரின் வருகையால் அமெரிக்கா மட்டும் இரண்டாகப் பிளவுபடவில்லை, அமெரிக்க வெள்ளையர்களும் இரண்டாகப் பிளவடைந்துள்ளனர். குடியரசுக்கட்சியின் establishment பகுதியினர் (white collar whites) ஒரு பக்கமும், பாமர வெள்ளையர் (blue collar whites) மற்றப் பக்கமுமாக அப்பிளவு குடியரசுக் கட்சியினரைப் பாதித்திருக்கிறது. துரும்பர் உள்ளவரை இதைச் செப்பனிட முடியாது. தற்போதைக்கு அவர் எங்கும் போவதாகவுமில்லை. அவர் மீது எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் ( நம்ம நந்தசேனர் போல) அவருக்கு மேலும் ஆதரவாளரைக் கூட்டுமே தவிர குறைக்காது. அவரது ஆதரவாளரின் டிசைன் அப்படி. அது தொடருமானால் குடியரசுக்கட்சிக்கு ரணிலின் முடிவுதான் கிடைக்கும்
இச் சிக்கலிலிருந்து வெளிவர குறைந்தது இரண்டு தவணைகளாவது ஆட்சியைக் கைப்பற்றுவது பற்றி குடியரசுக் கட்சியினர் நினைத்துப்பார்க்கத் தேவையில்லை. (ரணிலும் தன் கட்சிக்காரருக்கு இதையேதான் சொல்கிறார்).
குடியரசுக்கட்சியின் மிதவாத, புதிய தலைமுறையின் யோசனை புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவேண்டுமென்பது. குடியரசுக் கட்சியின் பழமைவாதக் கொள்கைகள் நவீன உலகுக்குக் பொருந்தாதவை. அதை மாற்றுவதற்கு ஆதரவாளர்கள் தயாராகவில்லை. எனவே புதிய மிதவாதக் கட்சியொன்றை ஆரம்பிக்கலாமென்று ஒரு பகுதி தயாராகி வருகிறது. அப்படி நடந்தால் அது தன்னைக் கட்டியெழுப்ப இரண்டு தவணைகள் வேண்டும்.
மாறாக அடுத்த தடவையும் துரும்பரையே தேர்தலில் (nomination கிடைத்தால்) இறக்கித் தோற்றாலும் அதன் பின்னரான குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமென எதிர்பார்க்கலாம்.
அதே வேளை, ஜோ பைடனின் ஆட்சி அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் உலக அரங்கில் இழந்த மரியாதையையும் மீட்டெடுத்து விடுமானால் கமலா ஹரிஸுக்கு அடுத்த தடவை ஜனாதிபதியாகும் சந்தர்ப்பமுண்டு. அதைச் சாதிக்க ஜோ பைடன் தனது தீவிர இடதுசாரிக் கொள்கைகளிலிருந்து கொஞ்சம் வலதுபக்கம் நகர வேண்டும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அமெரிக்காவை முதன்மைப்படுத்தும் கொள்கை ஒரு winning formula என்பதைத் துரும்பர் காட்டிவிட்டார். எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்வதுபோல் வீரரைப் பார்த்து வீரம் கொள்ளும் மரபு எல்லோருக்கும் உண்டு.
இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னால் வந்த ஜனாதிபதிகளில் பைடன் மிகச் சிறந்தவரென வரலாறு குறித்துக்கொள்ளுமென நான் நம்புகிறேன். அவரது அமைச்சரவைத் தெரிவுகளில் சமகால அமெரிக்கா புலப்படுகிறது. வெளியுறவுக் கொள்கையில் காரமும், சுவையும் கலந்திருப்பதுவும் தெரிகிறது. பழிவாங்கல், நடிப்பு, எகத்தாளம் அவரது குணங்களில் காணப்படவில்லை. மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்த ஒரு நல்ல மனிதனாகத் தெரிகிறார். ஜிம்மி கார்ட்டரும் இப்படித்தான் இருந்தார். அவரிடமில்லாத துணிச்சல் பைடனிடம் இருக்கிறது.
அமெரிக்கா ஜனநாயகத்தின் இருப்பிடம். கம்யூனிச சித்தாந்தத்தைப் பாராயணம் பண்ணுபவர்கள்கூட அதைச் சுதந்திரமாகச் செய்வதற்காக அமெரிக்காவிற்குத்தான் வரவேண்டியிருந்தது. வந்தாரை வாழவைக்கும் அந்நாடு வாழவேண்டும். கிளின்ரன், புஷ் காலத்தில் திசைமாறிச் சென்ற அதை, ஒரு correction process இற்கு உள்ளாக்கியது துரும்பர். இது தவிர்க்க முடியாதும் அவசியமானதுமான ஒன்று. The Great Reset. இப்படி இலங்கையிலும் நடைபெறவேண்டுமென்பதே அவா. நந்தசேனர் அதைச் செவ்வனே செய்துமுடிப்பார் என நம்புகிறேன்.
