US & Canada

இந்திய பூர்வீக அரோரா அகான்ஷா ஐ.நா.செயலாளர் நாயகப் பதவிக்குப் போட்டி


ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மேற்பார்வை ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்துவரும் (Audit Coordinator) 34 வயதுடைய அரோரா அகான்ஷா, ஐ.நா. சபையின் செயலாளர் நாயகப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

தற்போதய செயலாளர் நாயகமான அன்ரோணியோ குத்தெரெஸின் பதவிக்காலம் இந்த வருட் இறுதியில் முடிவடைகிறது. ஜனவரி 2022 இல் ஆரம்பவிருக்கும் புதிய பதவிக் காலத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் அரோரா அகன்ஷா முதலாவது ஆளாகத் தன் அறிவிப்பைச் செய்திருக்கிறார். தற்போதைய செயலாளர் நாயகமான குத்தேரெஸ் தான் இரண்டாவது தவணையிலும் தொடர்ந்தும் பணியாற்ற விரும்புவதாக சென்ற வாரம் அறிவித்திருந்தார்.


போட்டியிடும் தனது எண்ணம் குறித்து தனது கருத்துக்களை காணொளி மூலம் அகன்ஷா வெளியிட்டுள்ளார்.

“கடந்த 75 வருடங்களாக ஐ.நா. தனது வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை – அகதிகள் பாதுகாக்கப்படவில்லை, மனிதாபிமான உதவிகள் மிக சொற்பமாகவே வழங்கப்பட்டுள்ளன, புதிய தொழில்நுட்பம் கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறது. முன்னேற்றத்தைத் தலைமைதாங்கும் ஒரு தலைவரே ஐ.நா.வுக்குத் தேவை. நான் ஒரு பார்வையளாராக இருக்க விரும்பவில்லை. இதுவே தான் ஐ.நா.வினால் அதிக பட்சம் செய்யக்கூடியது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதனால் தான் நான் இப்பதவிக்குப் போட்டியிடுகிறேன் ” என அவர் தனது காணொளியில் குறிப்பிடுகின்றார்.

ஜனவரி 1, 2017 இல் கடமையேற்ற குத்தேரெஸ், ஐ.நா.வின் 79 வது செயலாளர் நாயகமாவார். அதன் 75 வருடகால வரலாற்றில் ஒரு பெண்ணாவது செயலாளர் நாயகமாகக் கடமையாற்றியது இல்லை.



ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஆலோசனையின்பேரில், ஐ.நா. பொதுச் சபையால் செயலாளர் நாயகம் நியமிக்கப்படுகிறார். 15 அங்கத்தவர்களைக் கொண்ட பாதுகாப்புச் சபையில் 5 நிரந்தர அங்கத்தவர்களும் (அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஸ்யா, பிரான்ஸ்) 10 தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களும் உள்ளார்கள். இச் சபையின் தீர்மானங்களை வீட்டோ செய்யும் அதிகாரம் நிரந்தர அங்கத்தவர்களுக்கு மட்டுமே உண்டு.

பொதுவாக, இப் பதவிக்கான போட்டியளர்களை பொதுச்சபை அங்கத்தவ நாடுகளே முன்மொழிவதுண்டு. இதுவரை எந்தவொருநாட்டிடமிருந்தும் அப்படியான முன்மொழிவுகள் ஏதும் பொதுச்சபை நாடுகளின் தலைமை அலுவலகத்திற்கு கிடைக்கவில்லை என அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிறந்து, கனடிய குடியுரிமை பெற்ற அரோரா அகன்ஷா, ரொறோண்டோ யோர்க் பல்கலைக்கழகத்தில் நிர்வாகக் கல்வியில் பட்டம் பெற்ற பின்னர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொநிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். ஆனாலும் அவர் தன்னை முன்மொழியும்படி இந்த இரண்டு நாடுகளிடமும் கோரிக்கையை முன்வைக்கவில்லை.