யாழ். கலாச்சார மையம் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறது!
இந்தியாவின் உதவியுடன், ரூ.2,000 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட யாழ். கலாச்சார மையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசு, இலங்கை அரசு, யாழ். மாநகர சபை ஆகியவற்றின் முத்தரப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் நிர்மாணிக்கப்பட்ட இம் மையம் கடந்த 6 மாதங்களாகப் பாவனைக்குத் தயாராகவிருந்த போதிலும், நிர்வாகத்துக்கான (பணியாளர், தொலைபேசி போன்றவை) பணம் இல்லாமையால் இயங்க முடியாத நிலைமையில் இருந்ததாகக் கூறி இலங்கை அரசு அதஹிப் பூட்டி வைத்திருந்தது. தற்போது அதை இயக்குவதற்கான பணம் கிடைத்துள்ளதாகக் கூறி நிர்வாகப் பொறுப்பை இலங்கை இராணுவத்தின் கைகளில் கொடுத்திருக்கிறது.
தேசிய பாரம்பரிய, அரங்க, கிராமிய கலைகளுக்கான ராஜாங்க அமைச்சரின் செயலாளர் எஸ்.டி.கொடிகார, ஜனவரி 26, 2021 அன்று, புத்த சாசன, சமய, கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சரின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் ‘கலாச்சார மையத்தின் நிர்வாகத்தை யாழ் மாநகரசபை பொறுப்பேற்கும் வரை அதன் நிர்வாகத்தை நெலும் பொக்கண மஹிந்த ராஜபக்ச அரங்கின் முதன்மை நிர்வாகி, பிரிகேடியர் சுஜித் பாலச்சந்திரவிடம் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
இவ் விடயம் பற்றி இந்திய அரசு எதுவித கருத்தையும் தெரிவித்ததாக அறியப்படவில்லை. இலங்கைத் தமிழர்களினாலோ அல்லது இந்திய அதிகாரிகளினாலோ இலங்கையில் எந்தவொரு நிறுவனமும் நிர்வகிக்கப்படுவதை ராஜபக்ச அரசு படிப்படியாக நிறுத்தி வருகிறது. சென்ற வருடம் மிகுந்த ஆடம்பரத்துடன் திறந்து வைக்கப்பட்ட பலாலி விமான நிலையத்தை இலங்கை அரசு முற்றாக அகற்றித் தென்னிலங்கைக்குக்குக் கொண்டுசென்றிருந்தும் இந்தியா எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

