Sri Lanka

முஸ்லிம்கள் உடல்களைப் புதைக்க அனுமதி வழங்கப்படும் – மஹிந்த ராஜபக்ச


கோவிட் தொற்றினால் மரணமடைந்த முஸ்லிம்களின் உடல்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கோவிட் உடல்களைப் புதைப்பதன் மூலம் வைரஸ் நிலக்கீழ் நீர் மூலம் பரவலடையாது என இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்சினி பெர்ணாண்டோபிள்ளை நேற்று (09), பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று சமாகி ஜன பலவேகய பா.உ. எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது பிரதமர் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.


முஸ்லிம்களின் உடல்களைக் கட்டாயத் தகனம் செய்யும் விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள், குடிமைச் சமூகங்கள், மனித உரிமை அமைப்புக்கள், ஐ.நா. மனித உரிமைகள் சபை, பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில், பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் ஆகியன தமது எதிர்ப்பைத் தொடர்ந்தும் தெரிவித்துக்கொண்டு வருகின்றன.

பெப்ரவரி 22 இல் இலங்கைக்கு வருகைதரவிருக்கும் பாகிஸ்தானிய பிரதமருக்கும் இவ் விடயம் சங்கடம் தருமொன்றாக இருப்பதால் அவரது வருகைக்கு முன்னர் அரசாங்கம் இம் முடிவை எடுக்கத் தள்ளப்பட்டிருக்கிறது எனவும், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகளைத் திரட்டுவதற்கு இது பிரயோசனமாகவிருக்கும் எனவும் நம்பப்படுகிறது.