Sri Lanka

மஹிந்த திடீர் குத்துக்கரணம் – கோவிட் நோயால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களைப் புதைக்க அவர் அனுமதி வழங்கவில்லையாம் – பிரதமர் அலுவலகம்


கோவிட் தொற்றினால் மரணமடைந்த முஸ்லிம்களின் உடல்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்குவதாக நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கவில்லை என அவரது அலுவலகத்திலுள்ள மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் உடல்களைப் புதைப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலளிக்கும்போது இம் மூத்த அதிகாரி தெரிவித்ததாவது ” சமாகி ஜன பலவேகய கட்சிப் பா.உ. வின் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ராஜபக்ச, ‘முஸ்லிம்களின் உடல்களைப் புதைப்பதற்கு அனுமதி உண்டு என்று சொன்னாரே தவிர கோவிட் நோயினால் இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கு அவர் அனுமதி வழங்குவதாகச் சொல்லவில்லை” எனத் தெரிவித்தார்.


மஹிந்த ராஜபக்சவின் இவ்வறிவித்தலைத் தொடர்ந்து பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு நன்றி தெரிவித்திருந்தனர் எனவும் பல உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் இச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன எனவும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. வெளிநாடுகளின் தலைவர்கள் பலர் இலங்கை அரசுக்கு வாழ்த்தும் தெரிவித்திருந்தனர்.

கோவிட் தொற்றினால் இறாந்தவர்களைப் புதைக்கும் விடயத்தில் அரசாங்கம் இன்னும் எந்தவிதமான முடிவையும் அறிவிக்கவில்லை என பிரதமர் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் நேற்றய அறிவிப்பைத் தொடர்ந்து, பல சிங்கள-பெளத்த கடும்தேசியக் குழுக்களும், சமூகவலைப் பதிவாளர்களும் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.



மஹிந்த ராஜபக்ச அவரது கட்சியால் ஓரங்கட்டப்படுகிறார் என்ற செய்தி கடந்த சில நாட்களாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தான் அப்ப்டி ஓரங்கட்டப்படவில்லை எனவும் சற்று ஓய்வெடுப்பதாகவும் டெய்லி மிரர் பத்திரிகைக்கு கூறியதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

மேற்கண்ட செய்தி விடயத்தில் கட்சிக்குள் இருக்கும் கடும் போக்காளர் அணி அவரது அறிவிப்பைத் திரிபு படுத்தி, பின்வாங்கச் செய்திருக்கிறார்களா என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.