News & AnalysisSri Lanka

மேலுமொரு ஊடகவியலாளர் கைது – கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்தாராம்!

ஆயுதக் கும்பலால் கடத்தபட்டுத் துன்புறுத்தப்பட்டதாக பொலிசில் முறைப்பாடு செய்தமைக்காக சியரட்ட லங்கா ஊடகத்தைச் சேர்ந்த சுஜீவா கமகே என்பவர் நேற்று (புதன்) கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட கமகே காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காயங்களுக்காக அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டு தொடர்ச்சியாக மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டுள்ளார் என அவரது வழக்கறிஞர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


சுவிஸ் தூதரகப் பணியாளர் கார்ணியர் ஃப்ரான்சிஸ் கடத்தப்பட்ட சம்பவம் போன்றதே இது எனவும் ஃபிரான்சிஸைக் கடத்தியவர்கள் மீது இதுவரை விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல் அவர் மீதே வழக்குத் தொடரப்பட்டது போன்றதே கமகேயின் விடயமுமென ஊடகவியலாளர் மத்தியில் இது குறித்து அச்சம் எழுந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

ஃபிரான்ஸிஸ் விடயத்தில், தனது புதிய அரசாங்கத்தின்மீது அவப்பெயரைக் கொண்டுவருவதற்காக சுவிஸ் தூதரகப் பணியாளர் வேண்டுமென்றே கடத்தல் சம்பவத்தைச் சிருஷ்டித்திருந்தார் என கோதாபய ராஜபக்ச அப்போது கூறியிருந்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபை நடைபெற்றுக்கொண்டிருக்கையில், கமகே கடத்தப்பட்ட சம்பவம் இலங்கை அரசுக்கு அவப்பெயரைக் கொண்டுவந்துவிடும் என்பதற்காக இவ் விடயத்தை ஊடகங்கள் எதுவும் பிரசுரிக்காமல் செய்யப்படிருக்கலாமெனவும் சந்தேகம் கிளம்பியுள்ளது.

மார்ச் 10ம் திகதி நடைபெற்ற இச் சம்பவம் பெரிதாக தெரியப்படவில்லையாயினும் முன்னள் சபாநாயகர் கரு ஜயசூரியா தான் இவ் விடயத்தைத் தனது ருவீட் செய்தி மூலம் வெளிக்கொணர்ந்திருந்தார். “மார்ச் 10ம் திகதி கடத்தப்பட்டு, தாக்கப்பட்டு, பயமுறுத்தப்பட்ட இச் சம்பவம் 2015 ம் ஆண்டு காலத்தை ஞாபகப்படுத்துகிறது. சக ஊடகவியலாளர் ஒருவருக்கு நடைபெற்ற இந்த அநியாயத்துக்காகக் குரல்கொடுக்க சகோதர ஊடகர்கள் முன்வரவில்லை என்பது கவலை தருவதாக உள்ளது. குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு அதிகாரிகளின்மீது நம்பிக்கையை மீளவும் ஏற்படுத்தவேண்டும்” என ஜயசூரியாவின் ருவீட் செய்தி தெரிவிக்கிறது.

சமாகி ஜன பலவேகய பா.உ. ஹர்ஷா டி சில்வா அவர்களும் இவ்விடயம் பற்றித் தனது ருவீட் மூலம் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகளில் ஒருவரின் மனைவியான சேரா ஜஸ்மின் எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் அவர்களுடனான பேட்டியைக் கொண்ட pen drive எங்கே எனக் கேட்டு, கடத்தியவர்கள் தன்னைத் தாக்கியதாக ஊடகவியலாளர் சுஜீவா கமகே தெரிவித்துள்ளார்.

புலஸ்தினி ராஜேந்திரன், ஏப்ரல் 21, 2019 இல், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்ரியன் தேவாலயத்தில் வெடித்த குண்டுதாரி மொஹாமெட் ஹஷ்ட்டுனின் மனைவியாவார். ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளிவந்த நாளிலிருந்து புலஸ்தினி எங்கே என்ற விவாதம் அரசியல்வாதிகள் மட்டத்தில் நடந்துவரும் ஒன்று.

கடத்தியவர்கள் தனது தலையில் ஒரு பையைக் கட்டி தாகியபடியே விசாரித்தார்கள் எனவும் சூடாக்கப்பட்ட கத்தி ஒன்றினால் மிரட்டினார்கள் எனவும் கமகே ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து கமகே ஐந்து நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டி ஏற்பட்டது. மிகவும் பரபரப்பானதும் முக்கிய தகவல்களைக் கொண்டதுமான அந்த pen drive தற்போது கடத்தியவர்களால் அபகரிக்கப்பட்டுவிட்டது என கமகே கூறியுள்ளார்.

சுஜீவா கமகே முன்னாள் சட்டத்தரணிகள் சங்கத்தின் (Bar Association) செயலாளர் சஞ்சய கமகேயின் சகோதரரும் கவிஞர் பி.டி.எம். ஆரியதாசவின் மகனுமாவார்.

ஊடகவியலாளர் கமகே மீதான தாக்குதல் இந்நாட்டின் ஊடகவியலாளர் அனைவருக்கும் அச்சம் தரும் ஒரு விடயமாகும் எனவும் இவ் விடயத்தை உடனேயே விசாரித்து இதன் பின்னாலுள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டுமெனவும் இலங்கையின் ஃபிறீ மீடியா இயக்கத்தின் செயலாளர் லசந்தா டி சில்வா அரசாங்கத்தைக் கேட்டுள்ளார். “அந்த pen drive தேவையாகவிருந்தால் அதை சட்டபூர்வமாகப் பெற முயற்சிக்காமை குழப்பம் தருவதாக உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மீதான தாக்குதல் தொடர்பாகத் தாம் மிகவும் ஆழமான கரிசனையைக் கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐ.தே.கட்சியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுள்ளது. அதே வேளை பி.பி.சி. தமிழ் சேவையின் ஊடகவியலாளர் ரஞன் அருண் பிரசாத் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது தொடர்பாகவும் ஐ.தே.க. கேள்வி எழுப்பியுள்ளது. (Colombo Telegraph)