தன்சானியா ஜனாதிபதி ஜோன் மகுஃபூலி கோவிட் தொற்றினால் மரணம்?
தன்சானியா நாட்டின் பிரபல ஜனாதிபதி ஜோன் மகுஃபூலி ̀கோவிட் தொற்றுக் காரணமாக மரணமடைந்துள்ளார். 61 வயதான அவர் தீவிர கோவிட் மறுப்பாளரும், கோவிட் தொற்றுக்கு மூலிகை வைத்தியத்தையும் கடவுள் வழிபாட்டையும் மேற்கொள்ளும்படி மக்களை வேண்டிக்கொண்டவர்.
இரண்டு வாரங்களுக்கு மேலாக அவர் இருதய நோய் காரணமாக டார் எஸ் சலாம் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தாரெனவும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (புதன்) மரணாமானார் எனவும் உதவி ஜனாதிபதி சாமியா சுலூஹு ஹசான் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக அவர் கோவிட்-19 நோயினால் பீடிக்கப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனரெனினும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆபிரிக்க கண்டத்தின் மிகத் தீவிரமான கொறோணாவைரஸ் மறுப்பாளராக அறியப்பட்டவர் மகுஃபூலி. வைரஸ் தொற்று வந்தவர்கள் மூலிகை ஆவி பிடிக்குபடியும் (வேதி) கடவுளைத் தொழும்படியும் அவர் கேட்டுவந்தார்.
அவரது மரணத்தை அனுஷ்டிக்க 14 நாட்கள் தேசிய அனுதாப தினங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தன்சானியாவின் அரசியலமைப்பின்படி அதன் உதவி ஜனாதிபதி ஜனாதிபதியின் பதவியை எடுத்துக்கொள்ளலாம். ஐந்து வருடங்கள் தவணையைக் கொண்ட மகுஃபூலியின் ஆட்சியில் இன்னும் நான்கு வருடங்கள் மீதமிருக்கிறது.
கொறோணாவைரஸ் தொற்றுக்காக மகுஃபூலி கென்யாவில் சிகிச்சை பெற்று வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ருண்டு லிஸ்ஸு கூறியதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
