Science & Technology

சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த தனியார் விண்கலம்


தனியார் நிறுவனமான SpaceX இனால் நிர்மாணிக்கப்பட்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் கொள்முதல் செய்யப்பட்ட விண்கலத்தில் முதல் தடவையாக நான்கு விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ளனர்.

ரெஸ்லா மின் வாகன உற்பத்தி நிறுவனத்தின் ஸ்தாபகரான இலான் மஸ்க்கிற்குச் சொந்தமான SpaceX நிறுவனம் விண்வெளிப் பயணத்துக்கான ஏவுகணைகளையும் (rockets), விண்குமிழ்களையும் (capsules) தயாரிக்கிறது.


This NASA TV video grab shows SpaceX Crew-1 mission on board the SpaceX Crew Dragon as it approaches the International Space Station on November 16, 2020 [NASA TV/ AFP]
சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பயணிகளுடன் சென்றடைந்த ‘Resilience’ விண்குமிழ்.

‘Resilience’ எனப் பெயரிடப்பட்ட இவ் விண்கலத்தில் மூன்று அமெரிக்கர்களும் ஒரு யப்பானியரும் விண்வெளி நிலையத்துக்குச் சென்றிருக்கின்றனர். 27 மணித்தியாலப் பயணத்தின் பின், இன்று பின்னிரவு 11:01 மணிக்கு இவ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்து கொண்டது.

பல நாடுகளின் பங்களிப்போடும் உருவாக்கப்பட்ட இவ் விண்வெளி ஆய்வுகூடம் பூமியிலிருந்து 400 கி.மீ. (250 மைல்கள்) தொலைவில் உலகைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கிறது. இதில் பல சர்வதேச விஞ்ஞானிகள் அப்பப்போ தங்கியிருந்து தமது ஆராய்ச்சிகளைச் செய்கிறார்கள். இந்தத் தடவை சென்ற நால்வரும் அங்கு ஆறு மாதங்கள் தங்கியிருந்து தமது ஆய்வுகளை மேற்கொள்ளுவார்கள்.



றிசில்லியென்ஸில் பயணம் செய்தவர்கள்: கட்டளை அதிகாரி மைக் ஹொப்கின்ஸ், நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் பைலட் விக்டர் குளோவெர் மற்றும் விஞ்ஞானி ஷனொன் வால்க்கர், யப்பானிய விண்வெளி வீரர் சொய்ச்சி நொகுச்சி ஆகியோராவர். நொகுச்சிக்கு இது மூன்றாவது பயணமாகும்.

விண்வெளி நிலையத்தில் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரரும் ஏற்கெனவே கடமையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இலான் மஸ்க்கின் SpaceX நிறுவனத்திற்கு இது இரண்டாவது விண்பயணம். முதலாவது பயணம் இரண்டு மாதங்களுக்கு நீடித்தது. அவருக்கு கோவிட் தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டதால் இவ்விண்வெளிப் பயணத்திற்கு அவர் சமூகமளிக்கவில்லை.