US & Canada

ஹார்வார்ட் பல்கலைக்கழகம்: 6,800 வெளிநாட்டு மாணவர்களுக்கு உடனடி விசா நிறுத்த உத்தரவு?

மே 22, 2025 அன்று உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்களத்தின் செயலாளர் நொயெம் பல்கலைக்கழகத்தின் தலைவர் அலன் கார்பர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின்படி SEVP (Student and Exchange Visitor Program) என்னும் திட்டத்தின் கீழ் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் புதிதாக வெளிநாட்டு மாணவர்கள் எவரையும் உள்வாங்க முடியாது என்பதோடு அமெரிக்க குடிவரவு அந்தஸ்து எதுவுமில்லாது (non-immigrant) F, J விசாக்களுடன் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தற்போது கல்வி கற்கும் மாணவர்கள் உடனடியாக வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறிக்கொள்ள வேண்டும் அல்லாது போனால் அவர்களது விசாக்கள் ரத்து செய்யப்பட்டுவிடும் எனக் கூறப்படுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்ட பெரும்பாலானோர் வெளிநாட்டு மாணவர்கள் எனவும் இவர்களால் அக்கல்லூரியில் பயிலும் யூத மாணவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதுவுமே. இக்கட்டளை முறையற்றது எனக்கூறிப் பல்கலைக்கழக நிர்வாகம் மத்திய நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி இக்கட்டளை மீது தற்காலிக தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். மே 29 ஆம் திகதி இவ்வழக்கு மீளவும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.

ட்றம்ப் நிர்வாகம் பதவியேற்பதற்கு முன்னரே ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கும் அமெரிக்க யூதர்களின் அமைப்புகளுக்குமிடையே பாலஸ்தீனியர் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்பாக இழுபறிகள் இருந்து வருகின்றன. அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களிலும் பாலஸ்தீன ஆதரவுப்போராட்டங்கள் இடம்பெற்று வந்தாலும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் கணிசமான யூத மாணவர்கள் கல்வி கற்பதாலும் அதே வேளை இப்பல்கலைக்கழகத்திற்கு, பில் அக்மான் போன்ற பல யூத தனவந்தர்கள் பெருந்தொகையான நன்கொடைகளை அள்ளி வழங்குவதாலும் இங்கு பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்கள் நடைபெறுவதை அவர்கள் விரும்பவில்லை. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் முதலாவது திருத்தத்தின் பிரகாரம் அமெரிக்க பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட பேச்சு சுதந்த்திரத்தை உதாரணமாகக் காட்டி பல்கலைக்கழக நிர்வாகம் இம்மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்திருந்தது. இதனைத் தொடர்ந்து பல யூதர்களும் அவர்களது அமைப்புகளும் இப்பல்கலைக்கழகத்திற்கு நன்கொடைகள் வழங்குவதை நிறுத்தியதோடு இம்மாணவர்களைப் பல்கலைக்கழகத்திலிருந்து விலக்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ட்றம்ப் எப்போதுமே யூதர்களுக்கு ஆதரவானவர் என்பதால் அவர் பதவிக்கு வந்ததும் பல்கலைகழகங்கள் மீதான கெடுபிடிகளை அதிகாரபூர்வமாக முன்னெடுத்து வருகிறார்.


இதற்கு முன்னர், ஏப்ரல் 16 அன்று, உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு இன்னுமொரு கட்டளையையும் அனுப்பியிருந்தது. அதில் அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திணைக்களத்திற்கு வழங்காவிட்டால் இப்பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை இனிமேல் உள்வாங்க முடியாது தடைசெய்து விடுவோம் என எச்சரித்திருந்தது. அத்தோடு இப்பல்கலைக்கழகம் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய உறவைப் பேணிவருகிறது என ஆதாரமற்ற குற்றச்சாட்டையும் சுமத்தியதோடு இப்பல்கலைகழகத்திற்கு அரசு வழங்கும் மானியத்தையும் நிறுத்திவிட்டது. பல்கலைகழகத்தில் யூத மாணவர்களுக்கெதிரான நவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த பல்கலைக்கழக நிர்வாகம் தவறிவிட்டதெனக் குற்றஞ்சாட்டி அதற்கு வழங்கி வந்த மத்திய அரசின் $2.3 பில்லியன் மானியத்தையும் தடுத்து வைத்திருக்கிறது.

ட்றம்ப் நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் த்ற்போது கல்வி பயிலும் சுமார் 6,800 வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இது அப்பல்கலைகழகத்தின் மொத்த மாணவர்களின் 27%. 2024 கணக்கெடுப்பின்படி 146 நாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கிறார்கள். இவர்களில் கனடிய, சீன, இந்திய மாணவர்களே பெரும்பங்கினர். F1 விசாவில் வந்து கல்வி கற்பவர்கள் கல்வியை முடித்து 60 நாட்களிலும் J1 விசாவில் கல்வி கற்பவர்கள் 30 நாட்களிலும் நாட்டை விட்டுப் போய்விட வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் திடீர்க் கட்டளையை நீதிமன்றம் அங்கீகரிக்குமானால் இம்மாணவர்கள் உடனடியாக வெளியேறும்படி நிர்ப்பந்திக்கப்படலாம். அல்லது அவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறிக்கொள்ள வேண்டும்.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வருடம் US$59,320 ஐ கட்டணமாகவோ அல்லது புலமைப்பரிசாகவோ செலுத்துகிறார்கள். உணவு தங்குமிடம், இதர செலவுகளுக்கு வருடம் US$ 27,606 செலவாகிறது. வெளிநாட்டு மாணவ்ர்களால் அமெரிக்க பொருளாதாரம் ஈட்டும் இலாபம் வருடமொன்றுக்கு US$ 43.8 பில்லியன் என்பது ட்றம்ப் நிர்வாகத்திற்குப் புரிவதாகவில்லை.

ட்றம்ப் நிர்வாகத்தின் பழிவாங்கலை எதிர்கொள்வதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் சட்ட நிபுணர்கள் கொண்ட குழுவொன்றை நியமித்திருக்கிறது. அதே வேளை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆலோசனை வளங்களையும் ஒழுங்கு செதிருக்கிறது.