Technology & Science

‘வட்ஸப்’புக்கு மாற்றுத் தளங்கள் – பாகம் 2


சிவதாசன்

வட்ஸப், ரெலிகிராம், சிக்னல் ஆகிய செயலிகளைப் பாவிப்பவர்கள் ஏன் Security Settings ஐ மாற்றிக்கொள்ள வேண்டும்?… தொடர்ச்சி

இலவசமாக உங்களுக்குக் கிடைக்கும் செயலிகள் அனைத்துமே உங்களின் உப-தரவுகளை (metadata) வை உருவிக்கொள்வதற்கே அவற்றை இலவசமாகத் தருகின்றன எனப் பகுதி 1 இல் பார்த்தோம். நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களில் என்ன விடயம் அடங்கியிருக்கிறது என்பது மட்டும் பாதுகாப்பாக இருக்குமென அவர்கள் உத்தரவாதம் தருகிறார்கள். அது உண்மை. ஆனால் அதை அனுப்புபவரோ அல்லது பெறுபவரோ எங்கு வாழ்கிறீர்கள், என்ன விடயங்களில் உங்கள் இச்சைகள் இருக்கின்றன, உங்கள் address list இல் யார் யார் இருக்கிறார்கள் என்பது போன்ற இன்னோரன்ன விடயங்களை அவர்கள் உங்கள் ஃபோன்களிலிருந்தும், கணனிகளிலிருந்தும் பிடுங்கிக் கொள்கிறார்கள். இதில் முக்கியமானது முகநூல். அதுவேதான் வட்ஸப், இன்ஸ்ராகிராம் ஆகியவற்றின் சொந்தக்காரனும். இவை எல்லாவற்றிலும் இருக்கும் ஒரு பொது அம்சம் “உங்கள் contact list, photos போன்றவை சேகரிக்கப்பட்டிருக்கும் பெட்டகத்தைத் திறந்து பார்க்க அனுமதி கேட்பது”. நீங்கள் அதைக் கொடுக்காவிட்டால் அவர்களது சகல இலவச சலுகைகளும் உங்களுக்குக் கிடைக்காமல் போய்விடலாம். எனவே எஹோ ஒரு வகையில் நீஙகள் அவர்களிடம் மாட்டிக் கொள்வீர்கள்.


ஆனால் பிரச்சினை என்னவென்றால், இச் செயலிகளை நீங்கள் தரவிறக்கும்போது உங்கள் பெட்ட்கங்களைத் திறந்துவிடும் அனுமதியை உங்களுக்குத் தெரியாமலேயே கொடுத்து விடும் வகையில் அவர்கள் தமது செயலிகளை வடிவமைத்திருக்கிறார்கள். விருப்பமில்லாவிட்டால் ‘Settings’ இற்குப் போய் ‘இன்ன விடயத்தை off’ செய்து கொள்ளவும் எனக் குட்டி எழுத்துக்களில் வாசிப்பதற்குச் சிரமமான வகையில் அதை எங்கோ மூலையில் வைத்திருப்பார்கள். விடயம் விளங்காத பலர் இதை off செய்துகொள்வதில்லை. வட்ஸப் நிறுவனத்தை ஆரம்பித்தவர்கள் இந்த ‘சுவிட்சை’ off இல் வைத்திருந்தார்கள். முகநூல் இந் நிறுவனத்தை வாங்கியதும் தன்னைப் போலவே வட்ஸப்பையும் ஒரு தகவல் சேகரிக்கும் நிலையமாகப் படிப்படியாக மாற்றி வருகிறது. இதனால் தான் கடந்த சில வாரங்களில் பல மில்லியன் வாடிக்கையாளர்கள் ‘சிக்னல்’, ‘ரெலிகிராம்’ ஆகிய செயலிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.



ரெலிகிராம் (Telegram)

ரெலிகிராம் செயலியை முதலில் தரவிறக்கி, இணைக்கும்போது அவர்கள் ஒரு உறுதிபடுத்தும் இலக்கத்தை (confirmation number) உங்கள் கைத்தொலைபேசிக்கு அனுப்புவார்கள். (இவ் வழக்கம் தற்போது பல நிறுவனங்களாலும் கைக்கொள்ளப்படுகிறது) இந்த இலக்கத்தை யாராவது திருடினால் உங்கள் கணக்கினுள் அத் திருடன் நுழைந்து உங்கள் தகவல்களை அறியமுடியும். இதிலிருந்து தப்புவதற்கு நீங்கள் பின்வரும் முறைகளைக் கடைப்பிடிக்கலாம்:

  • இரண்டு படிமுறை உறுதிப்படுத்தல் (Two Step verification (2FA): முதலில் Settings இற்குப் போய் ‘privacy and security’ என்னும் இடத்தில் உங்கள் password ஐப் பதிவுசெய்யுஙகள்.
  • உங்கள் privacy settings ஐ மாற்றிவிடுங்கள்: Privacy பகுதிக்குள் சென்று “உங்கள் நட்பு வட்டம் மட்டுமே உங்களைத் தொடர்பு கொள்ளலாம், வேறு எவராலும் முடியாது” என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
  • ‘Profile’ ஐ யார் பார்க்கலாம் என்பதைத் தெரிவு செய்யுங்கள்: உங்கள் profile ஐ யார் யார் பார்க்கமுடியுமென்பதையும், எவரெவர் உங்களைத் தங்கள் குழுமத்தில் இணைத்துக்கொள்வது என்பவற்றை நீங்களே தெரிவு செய்துகொள்ள முடியும்.
  • ‘Lock Code’ ஒன்றைப் பாவியுங்கள்: அநேகமான ஃபோன்கள் (operating systems) தற்போது ‘screen lock’ வசதிகளுடன் வருகின்றன. இதை ஈடுபடுத்துவது பாதுகாப்பானது.
  • ‘Secret Chats’ ஐத் தெரிவு செய்யுங்கள்: ஒரு ஃபோனிலிருந்து இன்னொன்றுடன் பேசுவதற்குத் தனியாக ‘secret chats’ – E2E (End to End Encryption) வசதிகளுடன் – Telegram இல் உண்டு: இது குழுமங்களிடையே பேசுவதற்கு இல்லை. இதைச் செய்வதற்கு, ஆண்ட்றோயிட்டில் ‘மூன்று புள்ளிகளை’ அழுத்துவதன் மூலமோ அல்லது iOS இல ‘more’ ஐ அழுத்துவதன் மூலமோ ‘start secret chat’ என்னும் பொத்தானை அழுத்துவதன் மூலம் செயற்படுத்திக் கொள்ளலாம்.
  • சுயமாக அழித்துவிடும் வசதி: Telegram செயலியிலுள்ள இன்னுமொரு நல்ல விடயம், நீங்கள் chat செய்து அது பார்வையிடப்பட்டவுடன் அது தானாகவே அழிந்துவிடக்கூடியாத நீங்கள் செய்து கொள்ள முடியும். Settings இல் இதற்கான தேர்வு இருக்கிறது.


சிக்னல் (Signal)

இது பெரும்பாலும் Telegram செயலியைப் போன்றது. இதிலும் நீங்கள் settings இற்குப் போய் சில மாற்றங்களைச் செய்வது நல்லது.

  • ‘Registry Lock’ ஐ செயற்படுத்துங்கள்: உங்கள் கணக்கை யாராவது திருடிவிட்டாலோ அல்லது உங்களை யாராவது கடத்திக்கொண்டு போனாலோ (உங்களைக் கடத்துவதால் அவர்களுக்கு என்ன பிரயோசனம் என்று நினைக்கிறீர்கள்…) அவர்கள் உங்கள் chat history யைப் பார்க்க முடியாதவாறு இந்த lock பாதுகாக்கிறது.
  • Screen Lock வசதியைப் பாவியுங்கள்: விரலடையாளம் அல்லது passcode ஐப் பாவிப்பது நல்லது.
  • Previews ஐ’off’ செய்துவிடுங்கள்: இதன் மூலம் தகவல்கள் ஃபோனின் முன் தளத்தில் வந்து உங்களை எச்சரிக்க மாட்டா.
  • இதை உங்கள் ஆஸ்தான SMS Messaging App ஆக (default) மாற்றிவிடுங்கள்: இதன் மூலம் அனுப்பும் தகவல்கள் பாதுகாப்பாகச் சென்றடையும்.

மொத்தத்தில்….

Telegram, iMessage ஆகியவற்றோடு ஒப்பிடும்போது WhatsApp உங்களிடமிருந்து பல தகவல்களைச் சேகரிக்கிறது. ஆனால் Facebook, Messenger, Google, Instagram, Snapchat, TikTok ஆகியன WhatsApp ஐ விட மோசமான திருட்டுக் கும்பல்கள். எனவே இவற்றை நீங்கள் பாவிப்பவரானால் WhatsApp ஒரு ஜுஜுப்பி.

விரைவில் WhatsApp, Facebook, Instagram ஆகியவற்றை இணைத்து ஒரு இடைவழங்கல் தளத்தை (interoperable platform) உருவாக்கும் திட்டமுண்டு எனப் பேசிக்கொள்கிறார்கள். அப்போது தனியார் சுதந்திரம் பெரிதாகப் பாதிக்குமென எச்சரிக்கிறார்கள். பார்ப்போம்.

எதற்கும் ‘privacy update’ என தகவல்கள் திரையில் வந்து விழுந்தால் கவனமாகப் பார்த்துச் செயற்படுங்கள்.