Sri Lanka

P2P | கொழும்பு ஊடகங்கள் ஏன் செய்திகளைப் பிரசுரிக்கவில்லை? – அமெரிக்கத் தூதுவர் ரெப்ளிட்ஸ் விசனம்!


கொழும்பைத் தளமாகக் கொண்ட ஊடகங்கள் வடக்குக் கிழக்கில் நடைபெற்று முடிந்த முக்கியமான கவனயீர்ப்பு பேரணி (P2P) பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அமெரிக்கத் தூதுவர் விசனம் தெரிவித்துள்ளார்.

“தங்களது குறைகளை எடுத்துக்காட்டி, தமிழ் மக்கள் கடந்த வாரம் பாரிய ஊர்வலமொன்றை முன்னெடுத்திருந்தார்கள். பொத்துவிலிலிருந்து பருத்தித்துறை வரை நடந்து சென்ற இவ்வூர்வலம் பற்றிய செய்திகளைத் தமிழ் ஊடகங்கள் பரவலாக வெளிக்கொண்ர்ந்திருந்தன. கொழும்பைத் தளமாகக் கொண்ட ஊடகங்கள் ஏன் அதைச் செய்யவில்லை என்பது ஆச்சரியமாகவுள்ளது


“அமைதியாக எதிர்ப்புத் தெரிவிப்பது ஜனநாயகத்தில் காணப்படும் முக்கியமானதொரு உரிமை. அவர்களது நியாயமான கோரிக்கைகளைக் கேட்பது அவசியமானது” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்ளிட்ஸ் தனது ருவீட் மூலம் தெரிவித்திருக்கிறார்.

வடக்கு கிழக்கு, மலையகம், முஸ்லிம் தரப்பு அரசியல்வாதிகள், குடிமைச்சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள் ஆகியோர் இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம், உலக அவதானத்தைத் திருப்பிய பாரியதொரு வெற்றிகரமான நிகழ்வாக அமைந்திருந்தது.



பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சட்ட நடவடிக்கை

பலத்த பொலிஸ், இராணுவ கெடுபிடிகள், தடைகளையும் மீறிக்கொண்டு பொத்துவிலில் ஆரம்பித்த இவ்வூர்வலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன, எம்.ஏ.சுமந்திரன ஆகியோரின் துணிச்சலான நெறிப்படுத்தலினால் பெருந்திரளான மக்கள் உற்சாகத்தோடு கலந்துகொண்டு சிறப்பிக்க வகை செய்திருந்தது.

இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெறும்போது இவ்வூர்வலத்துக்கு கொழும்பைத் தளமாகக் கொண்ட ஊடகங்கள் அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கவில்லை. அத்தோடு, இன்னும் சில வாரங்களில் ஜெனிவாவில் அரங்கேறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபை நிகழ்வுகளில் இலங்கை அரசு பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கவிருக்கும்போது இவ்வூர்வலம் அரசுக்கு மேலும் இடர்களைத் தந்திருக்கக்கூடும்.

தற்போது, இவ்வூர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா எச்சரித்திருக்கிறார். இவ்வூர்வலத்தில் பங்கேற்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

சுமந்திரனின் விசேட பாதுகாப்பு நீக்கப்படுகிறது

பா.உ. சுமந்திரன் மீது கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டுவந்த விசேட பாதுபாப்பை மீளப் பெறும்படி அமைச்சர் வீரசேகரா உத்தரவிட்டுள்ளார்.