விளையாட்டு | கைல் லெளறி ரொறோண்டோ றப்ரேர்ஸ் கழகத்திலிருந்து விலகுகிறார்?
ரொறோண்டோ றப்ரேர்ஸ் கூடைப்பந்து விளையாட்டுக் கழகத்தின் முன்னணி விளையாட்டு வீரர் கைல் லெளறியின் ரொறோண்டோ வீடு விற்பனைக்கு வந்திருக்கிறது. 34 வயதை எட்டும் கைல் லெளறியின், றப்ரேர்ஸில் விளையாடும் ஆட்டத்திற்கு இதுவே கடைசி சீசனாகவும் இருக்கலாம்.
$31 மில்லியன் / 10 வருட ஒப்பந்தத்தில் றப்ரேஸில் இணைந்த கைல் லெளறியின் கடிசி வருடம் 2019. ஆனால் தேசிய கூடைப்பந்துக் கழகத்தின் (வட அமெரிக்கா) 2019 கிண்ணத்தைத் தட்டிக்கொண்டதைத் தொடர்ந்து அவரது ஒப்பந்தம் மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டிருந்தது.
மிகவும் ஒழுக்கமும், மரியாதையையைப் பேணும் ஒருவராகவும் அறியப்பட்ட 34 வயதுடைய கைல் லெளறி தனது ஆட்டத்தில் சளைத்ததாகத் தெரியவில்லை. ஒரு ஆட்டத்தில் சராசரியாக 17 புள்ளிகளையும். 6.7 உதவிகளையும் பெற்று வருகிறார்.
கோவிட் பெர்ந்தொற்றுக் காரணமாக கடந்த பெப்ரவரி 29, 2020 இலிருந்து, றப்ரேர்ஸ் தங்கள் சொந்த ஆடுகளமான ரொறோண்டோவில் ஒரு ஆட்டத்தையும்கூட ஆடவில்லை. இது விளையாட்டு வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் இவ்வாட்டங்களை நம்பியிருக்கும் வியாபார நிறுவனங்களுக்கும் பெருத்த ஏமாற்றமாக இருந்து வருகிறது. இன்னும் 13 ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், இந்த சீசனின் பிற்பகுதியிலாவது அவர்கள் ரொறோண்டோவில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் சந்தர்ப்பங்கள் அதற்குத் துணைபுரிவதாக இல்லை.
இந்த நிலையில், கைல் லெளறியின் வீடு விற்பனைக்கு போடப்பட்ட விடயம் ரொறோண்டோ றப்ரேர்ஸுடன் அவரது நாட்கள் எண்ணப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மனதில் தோற்றியுள்ளது.
