ஞானசார தேரரை ஏன் கைதுசெய்யவில்லை ? – றிஷாட் பதியுதீனின் மனைவி கேள்வி!
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பாக, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகமான கலகொட அத்தெ ஞானசார தேரரை எண் கைது செய்யவில்லை எனக் கேட்டு, பா.உ. றிசாட் பதியுதீனின் மனைவி அயீஷா றிஷாட், ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுடன் ஞானசார தேரர் தொடர்புடையவரென ஜனாதிபதி விசாரணை ஆணையம் தீர்ப்பளித்திருந்தும் அவரும் அவரைப் போல மேலும் பலரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதை ஆயிஷா றிஷாட் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தனது கணவர் குண்டு வெடிப்புக்களுடன் சம்பந்தப்படவில்லை எனவும் அப்படியிருந்த்தும் நீதிமன்ற ஆணை எதுவுமில்லாது அவர் அவமானப்படுத்தும் வகையில் கைதுசெய்யப்பட்டார் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு எழுதிய நீண்ட கடிதத்தில், தனது கணவனை விடுதலை செய்யும்படி சட்டமா அதிபருக்கு உத்தரவிடும்படி அவர் கேட்டுள்ளார்.
விசாரணைகளென்று வரும்போது, தனது கணவரும் அவரது சகோதரரும் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் எனவும் அதற்கு தான் உத்தரவாதம் தருவதாகவும் அக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏப்ரல் 24 அன்று கைது செய்யப்பட்ட றிசாட் மற்றும் றியாட் பதியுதீன் சகோதரர்களை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ், 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கும்படியான ஆணையை ஏரல் 27 அன்று பொலிஸ் பெற்றிருந்தது. இதன் பிரகாரம் சகோதரர்கள் இருவரும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். (கொலொம்பொ கசெட்)
