இலங்கைத் தமிழருக்கு தொடர்ந்தும் ஆதரவு தருவோம் – சென்னையில் இந்தியப் பிரதமர் மோடி
“இலங்கைத் தமிழர் சமத்துவம், சமாதானம், நீதி, கண்ணியத்துடன் வாழவேண்டுமென்பதில் இந்தியா எப்போதுமே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்திருக்கிறது” என தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருக்கும் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நேற்று (14), தமிழ்நாட்டில் பல பொருளாதார, சமூக, பாதுகாப்புத் துறைத் திட்டங்களை அறிவித்துப் பேசுகையில், பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இலங்கைத் தமிழர் உரிமைகள் பற்றிய விவகாரங்கள் எழும்போது இலங்கையின் தலைவர்களிடம் தனது அரசாங்கம் தொடர்ச்சியாக அவைபற்றி எடுத்துப் பேசி வருகின்றது. அவர்களின் நலன்களில் நாம் எப்போதுமே அக்கறை கொண்டுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
வீடமைப்பு, சுகாதார வசதிகள் போன்ற விடயங்களில் எனது சகோதரர்களான இலங்கைத் தமிழர் நலன்களை மேம்படுத்தும் பல திட்டங்களைத் தனது அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும், யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த (2015) முதலாவது இந்தியப் பிரதமர் தானே எனவும் அவர் தெரிவித்தார்.
இடம்பெயர்க்கப்பட்ட தமிழர்களின் மீள்குடியேற்றத்துக்காக 50,000 வீடுகளையும், மலையகத் தமிழர்களுக்காக மேலும் 4,000 வீடுகளையும் தமது அரசு கட்டிக்கொடுத்துள்ளது எனவும் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையம் விரைவில் திறக்கப்படவுள்ளதாகவும், யாழ்-மன்னார் ரயில்வே சேவை, சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை ஆகிய திட்டங்களை நிறைவேற்ற இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தமது உரையின்போது சுட்டிக்காட்டினார்.
