LIFENews & AnalysisUncategorizedWorld

பில், மெலிண்டா கேற்ஸ் திருமணம் முறிகிறது

உலகத்தின் நான்காவது பெரிய பணக்காரராகிய மைக்றோசொஃப்ட் ஸ்தாபனத்தின் ஸ்தாபகர் பில் கேற்ஸ் மற்றும் அவரது வாழ்க்கைத் துணைவியார் மெலிண்டா கேற்ஸ், தமது திருமண ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

மூந்று பிள்ளைகளுக்குப் பெற்றோர்களான இருவரும் 27 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்திருந்தார்கள். திங்களன்று (03) இருவரும் ருவிட்டர் மூலம் தமது மண முறிவை உலகுக்கு அறிவித்துள்ளார்கள்.

மைக்றோசொஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றும்போது மெலிண்டா-பில் காதல் ஆரம்பமாகி 1994 இல் திருமணத்தில் முடிந்தது. ஹவாய் தீவொன்றில் நடைபெற்ற அவர்களது திருமணத்தின்போது தங்கள் பிரத்தியேகத்தைக் காப்பாற்றுவதற்காக அருகிலுள்ள அனைத்து தீவுகளிலுமிருந்த உலங்குவானூர்திகளைத் தாங்களே வாடகைக்கு அமர்த்திக் கொண்டிருந்தார்கள்.

பில்-மெலிண்டா தம்பதிகளுக்கு 25 வயதில் ஒரு மகள், 21 வயதில் ஒரு மகன் மற்றும் 18 வயதில் ஒரு மகள் உண்டு.

பிரிவிற்கான நீதிமன்றப் பத்திரங்களை, திங்களன்று (03) மெலின்டா கேற்ஸ் தாக்கல் செய்ததாக அறியப்படுகிறது.

இருவரும் இணைந்து உலகம் பூராவும் பல சமூக நலத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 2000 ஆம் ஆண்டில் இருவரும் இணைந்து ஆரம்பித்த ‘பில் & மெலிண்டா கேற்ஸ் ஃபவுண்டேசன்’ தற்போது $40 பில்லியன் பெறுமதியான தொண்டு நிறுவனமாகும்.

பிரிவிற்குப் பின்னரும் தம்பதிகள் இருவரும் இத் தொண்டு நிறுவன நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இருவரும் இணந்து பல சொத்துக்களையும் வாங்கி வைத்துள்ளனர். அவற்றில் ஒன்று மெடினா, வாஷிங்டனில் அமைந்திருக்கும் 66,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட மாளிகை. சென்ற வருடம் அதனது பெறுமதி $130.88 மில்லியன் டாலர்கள். இதைவிட கடந்த ஏப்ரல் (2020) மாதம் டெல் மார், கலிபோர்ணியாவில் $43 மில்லியன் டாலர்களுக்கு இன்னுமொரு மாளிகையையும் தம்பதிகள் வாங்கியிருந்தார்கள். இதை விட ஃபுளோறிடா, மத்திய அமெரிக்கா ஆகிய இடங்களிலும் அவர்களுக்கு சொத்துக்கள் உண்டு.

2014 இல் மைக்றோசொஃப்ட் நிறுவனத்திலிருந்து தன்னை விலத்திக் கொண்டார். இருப்பினும் அந்நிறுவனத்தில் 1.34% உரிமையை அவர் தனக்கெனெ வைத்துக்கொண்டிருக்கிறார். மைக்றோசொஃப்ட் நிறுவனத்திலிருந்து விலகிக்கொண்டாலும் பில் கேற்ஸ் வேறு பல நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்துள்ளார்.

சொத்துக்களைப் பிரித்துக்கொள்வதற்கு இருவரும் தாமாகவே ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், தனக்கு வாழ்வாதாரம் எதையும் பில் கேற்ஸ் தரத் தேவையில்லை எனவும் மண முறிவை நீதிமன்றம் உத்தரவாதப்படுத்தினால் மட்டும் போதுமானது எனவும் மெலிண்டா கேற்ஸ் அறிவித்திருப்பதாகத் தெரிகிறது.

“மீளிணைய முடியாத அளவுக்குத் திருமணம் முறிந்துவிட்டது” என மெலிண்டா கேற்ஸ் தனது நீதிமன்றப் பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகிறது. (நன்றி: பீப்பிள்ஸ் மகசின்)