கனடாவில் தமிழ்நாட்டுப் பெண் கத்திக்குத்துக்கு இலக்கானார்!
ஜனவரி 24, 2020
23 வயதுடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் ரொறோண்டோவில் கத்திக்குத்துக்கு ஆளாகியுள்ளதாக ரொறோண்டோ காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராக்கேல் அல்பேர்ட் என்னும் பெயருள்ள இம் மாணவியின் நிலை மோசமாக உள்ளதாகவும், தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ராக்கேலின் பெற்றோர் தமிழ்நாட்டிலிருந்து கனடாவுக்கு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
ராக்கேல் ரொறோண்டோ, யோர்க் பல்கலைக் கழகத்தில் தனது முதுமாணிப் படிப்பை (Masters Degree) மேற்கொண்டிருந்தார் என அறியப்படுகிறது.
ராக்கேலைக் குத்தியவர் ஒரு ஆசியர் எனக் காவற்துறை தெரிவித்துள்ளது. இவர் ராக்கேலை அவரது சமூக ஊடகம் மூலம் தொந்தரவு செய்திருக்கலாமென ராக்கேலியின் பெற்றோர் நம்புவதாகத் தெரிகிறது.
ராக்கேலின் மாமனாரது ருவீட்டர் செய்தியைப் பார்த்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜயசங்கர், ராக்கேலின் பெற்றோருக்கு விசா வழங்குவதைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
