கலாநிதி ஜயம்பதி, பா.உ. நாட்டைவிட்டுத் தப்பியோடினார்
. 19 வது திருத்தத்தின் பிதாமகர் உயிருக்கு அஞ்சி வெளிநாடு சென்றார்
. இடதுசாரி சமன் ரத்னப்பிரியா பா.உ. ஆக நியமனம்

சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த நியமன பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்தினா தன் பதவியைத் துறந்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவருடைய இடத்துக்கு இடதுசாரியும் செயற்பாட்டாளருமான ரத்னப்பிரியாவை ஐ.தே.கட்சி நியமனம் செய்திருக்கிறது. சமன் ரத்னப்பிரிய அரச தாதியர் சங்கத்தின் தலைவராவார்.
ஜயம்பதியின் பதவி விலகல் கடிதம் நேற்று (22) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இது பற்றி ஐ.தே.க. செயலாளர் அகில விராஜ் காரியவாசம் விரைவில் தேர்தல் ஆணையகத்துக்கு அறிவிப்பார் எனத் தெரிகிறது.
கலாநிதி விக்கிரமரத்தினா நாட்டின் சிறந்த அரசியலமைப்புச் சட்ட மேதை. இவரது முயற்சியில் தான் 2018 அரசியலமைப்பு மாற்றம், 19 வது திருத்தம் ஆகியன சாத்தியமாகியிருந்தன.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கோதாபய ராஜபக்சவின் வலது கையும், தற்போதய பாதுகாப்புச் செயலாளருமான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனெரல் கமல் குணரத்தின, 19 வது திருத்தத்தை வரைந்தவர்கள் தேசத் துரோகிகள், நாம் பதவிக்கு வந்தால் அவர்கள் தலைகளை நிமித்துவதற்கு நாம் அனுமதிக்கப் போவதில்லை எனப் பகிரங்கமாக மிரட்டியிருந்தார்.
கலாநிதி விக்கிரமரத்ந மட்டுமல்ல, ஜே.சீ. வெல்லமுன, P.C., உபுல் ஜயசூரிய, P.C. ஆகியோர் மீதும் கோதாபய அரசு கண் வைத்திருந்ததாகவும் செதிகள் கசிந்திருந்தன.
இவரைப் போலவே, முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனநாயக்கா, முன்னாள் ஊடகச் செயலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு ஓடித் தப்பியுள்ளனர்.
