News & AnalysisSri Lanka

துறைமுக நகரச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது – ஆதரவாக 149 வாக்குகள், எதிராக 58 வாக்குகள்

  • றிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 2 (அலி சப்றி, இஷாக் ரஹுமான்) பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
  • ராவுஃப் ஹக்கீம் எதிர்த்து வாக்களிக்கவில்லை
  • பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்
  • ஆணைய உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள்
  • ஆணைய உறுப்பினர்களின் பெரும்பான்மையினர் இலஙகையர்களாகவிருப்பர்

பலரும் எதிர்பார்த்ததைப்போல், சீனாவினால் நிர்வகிக்கப்படவுள்ள விசேட பொருளாதார வலையத்துக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் வழங்கும் நிகழ்வு நேற்று (20) நிறைவேறியது. துறைமுக நகரச் சட்டம் பாராளுமன்றத்தில் 91 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற (150) இரண்டு வாக்குகள் போதாமற் போயிருக்கிறது. இருப்பினும் தற்போதைக்கு, அரசாங்கத்திற்கு இது ஒரு பாரிய வெற்றி

இச் சட்டவரைவின் மீதான மூன்றாவது வாசிப்பின்போது எதிர்க்கட்சி, சமாகி ஜன பலவேஹய உறுப்பினர்கள் முன் மொழிந்த சில திருத்தங்களை அரசாங்கக் கட்சி நிராகரித்துவிட்டது. துறைமுக நகர ஆணையத்தைப் பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அரச கூட்டுத்தாபனமாக வைத்திருக்க வேண்டும் என்ற திருத்தத்தை ஹர்ஷா டி சில்வா முன்மொழிந்திருந்தார். அத்தோடு, துறைமுக ஆணையத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுபவர்களாக இருக்குமென்பதை மாற்றவேண்டுமெனவும் எதிர்க்கட்சி அங்கத்த்வர்கள் பிரேரித்திருந்தனர். ஆனாலும் அரசாங்கக் கட்சி அங்கத்தவர்கள் இப் பிரேரணைகளை முறியதிது விட்டனர். அதே வேளை, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்ததுபோல் இவ்வங்கத்தவர்களில் பெரும்பான்மையினர் இலங்கையர்களாக இருப்பர் என திருத்தம் செய்யப்பட்டதென அறிவிக்கப்பட்டது.


உச்சநீதிமன்றத்தின் 63 பக்கத் தீர்ப்பின் பிரகாரம், சட்ட வரைவின் 26 அம்சங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை எனக் கூறப்பட்டிருந்தது. அதே நிலையில், மாற்றங்கள் ஏதுமின்றி நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவும், சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்களின் ஆதரவும் பெறப்படவேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதைத் தவிர்க்க, அரசு, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தவாறு மாற்றங்களைச் செய்ய இணங்கியிருந்தது.

இதே வேளை, துறைமுக நகரம் 15 பில்லியன் டாலர்கள் முதலீடுகளைக் கொண்டுவருமெனவும், வருடாந்தம் 12 பில்லியன் டாலர்கள் நாட்டின் பொருளாதரத்துக்கு வளம் சேர்ப்பதாக இருக்குமெனவும் நிதி மற்றும் முதலீட்டுச் சந்தைகள் ராஜாங்க அமைச்சர் கப்ரால் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம், துபாய், சிங்கப்பூர் மாதிரி நகரமாக இருக்குமெனவும் அங்கு பாவிக்கப்படும் நாணயம் டொலராக இருக்கலாமெனவும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நகரத்தில் நிலமும், குடியிருப்பு மனைகளும் தனியாருக்கு விற்கப்படுமெனவும் அதற்கான கிராக்கி அதிகமிருக்கிறது எனவும் அமைச்சர் கப்ரால் தெரிவித்துள்ளார்.