IndiaNews & Analysis

ரஜிவ் காந்தி கொலைக்குற்றஞ் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும்படி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடையவர்களெனக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு கைதிகளினதும் தண்டனைகளை மீளப்பெற்று அவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின் அவர்கள் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு, செவ்வாயன்று (18) கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

“ராஜிவ் காந்தியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களெனக் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டு, மூந்று தசாப்தங்களாகச் சிறைகளில் துன்பத்தை அனுபவித்துவரும், திருமதி எஸ்.நளினி, திரு. முருகன், திரு சாந்தன், திரு ஏ.ஜி.பேரறிவாளன், திரு ஜெயக்குமார், திரு றொபேர்ட் பயஸ் மற்றும் திரு பி.ரவிச்சந்திரன் ஆகியோரது ஆயுள் தண்டனைகளை மீளப்பெற்று, அவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி தமிழக அரசு பரிந்துரைக்கும் இக் கோரிக்கையை ஜனாதிபதி அவர்கள் கருணை கூர்ந்து கவனத்திலெடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனக் கேட்டுக்கொள்கிறேன்” எந முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த ஏழு பேரும், ரஜிவ் காந்தியின் கொலையோடு சம்பந்தமுடையவர்கள் என 1991 இல் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுதலை செய்யும்படி தமிழ்நாடு அரசு பல தடவைகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்த போதிலும், மத்திய அரசு அதற்குத் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்து வருகிறது. நடந்து முடிந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல்களின்போது ‘ரஜிவ் காந்தியின் கொலையாளிகளை விடுதலை செய்வோம்’ என்பதைத் தி.மு.க. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு அம்சமாகச் சேர்த்திருந்தது.

“இக் கைதிகளை விடுதலை செய்யவேண்டுமென்பது தமிழ்நாட்டு மக்களின் விருப்பம். தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மையான கட்சிகள், மூன்று தசாப்தங்களாகச் சிறையில் வாடும் இக் கைதிகளின் தண்டனைகளை நீக்கி அவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி கேட்டுவருகின்றன” என ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஏழு கைதிகளினதும் குற்றங்களை மன்னித்து அவர்களை விடுதலை செய்யும்படி, செப்டம்பர் 9, 2018 இல் அப்போதைய மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதை மாநில ஆளுனரின் கவனத்திற்கு அனுப்பியிருந்தது. அப்படியிருந்தும் தமிழ்நாடு ஆளுனர் , இரண்டு வருடங்களாக அத்ன் மீதி எந்த நடவடிக்கையையும் எடுக்காமையால் கைதிகளில் ஒருவராகிய பேரறிவாளன், இது குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்திருந்தார். இவ்விடயத்தில் ஆளுனரின் இழுத்தடிப்பு ‘அசாதாரணமானது’ என உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்திருந்தது. பின்னர், பெப்ரவரி 2021 இல், சுகவீனம் காரணமாக பேரறிவாளனின் தற்காலிக விடுதலைக்கான விண்ணப்பம் செய்யப்பட்டபோது ஆளுனர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கான பொறுப்பை ஆளுனர் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திடம் விட்டு விட்டார். இந் நிலையிலேயே முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதிக்குத் தனது கடிதத்தை எழுதவேண்டி ஏற்பட்டது.

“இந்த ஏழு கைதிகளும் கடந்த மூந்று தசாப்தங்களாக சொல்லொணாத் துயரங்க்ளை அனுபவித்து விட்டார்கள். இந்நிலையில் கோவிட் பெருந்தொற்று காரணமாக சிறைகளில் கைதிகளின் நெரிசலைக் குறைப்பதன் மூலம் கைதிகள் தொற்றுக்குள்ளாவதைத் தவிர்த்துக் கொள்ளலாமென நீதிமன்றங்களும் பரிந்துரைக்கின்றன” என முதஹ்ல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.