றிசாட் பதியுதீனைப் பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் – சரத் வீரசேகரா
இது குறித்து ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ கருத்துக்கூற வேண்டும். அல்லாது போனால் எந்தவொரு எதிர்க்கட்சி அரசியல்வாதியையும் சந்தேகத்தில் கைதுசெய்துவிட்டு அவரது பாராளுமன்ற ஆசனத்தைப் பறித்துக்கொள்வதற்கு இச் சம்பவம் வழிசமைத்ததாக ஆகிவிடும்
சுமந்திரன்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் வவுனியா மாவட்ட பா.உ. றிசாட் பதியுதீனைப் பாராளுமன்றத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகாரா சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கும் எந்தவொரு உறுப்பினரையும் அவரது விசாரணைகள் முடிவுறும்வரை பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என அவர் கேட்டுள்ளார்.
“அவர்கள் தமது பாராளுமன்ற சலுகைகளைப் பாவித்து அங்கு தெரிவிக்கும் கருத்துக்கள் நடைபெறவிருக்கும் விசாரணைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும்” என அமைச்சர் வீரசேகரா தெரிவித்தார்.
இக்கோரிக்கைக்கு எதிர்க் கட்சிகள் சபையில் ஆட்சேபனை தெரிவித்தன.
இக் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக சபாநாயகர் யாபா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதே வேளை அமைச்சர் வீரசேகரவின் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.உ. எம்.ஏ.சுமந்திரன் மிகக் கடுமையாகச் சாடியூள்ளார்.
“நிர்வாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும், தண்டனை வழங்கப்படாத ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சபைக்குள் வருவதை அனுமதிக்க முடியாது என்னும் கோரிக்கை இச் சபையின் வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெறாத ஒன்று. மூந்று மாதங்கள் விசாரணை நடத்தப்படாவிட்டால் அவர் தனது பாராளுமன்ற ஆசனத்தை இழந்துவிடுவார். சட்ட பூர்வமாக ஒரு பா.உ. தண்டிக்கப்படாத வரைக்கும் பாராளுமன்ற நிகழ்வுகளில் பங்குபெற அவருக்கு உரிமையுண்டு.
இது குறித்து ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ கருத்துக்கூற வேண்டும். அல்லாது போனால் எந்தவொரு எதிர்க்கட்சி அரசியல்வாதியையும் சந்தேகத்தில் கைதுசெய்துவிட்டு அவரது பாராளுமன்ற ஆசனத்தைப் பறித்துக்கொள்வதற்கு இச் சம்பவம் வழிசமைத்ததாக ஆகிவிடும்” எனச் சபை நிகழ்வின்போது தெரிவித்தார் சுமந்திரன்.
றிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாட் ஆகியோர் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
