மஹாராஜாவின் சிரச ஊடகத்தின் மீது கோதாபய மீண்டும் பாய்ச்சல்
மஹாராஜா குழுமத்தின் மீதும், அதன் உரிமையாளர் கிளி ராஜமகேந்திரன் மீதும் மீண்டுமொருதடவை தனது எச்சரிக்கையை விடுத்திருக்கிறார் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச. மகாராஜாவின் குழுமத்துக்கு மட்டுமல்ல அரசாங்கத்தை விமர்சிக்கும் அனைத்து ஊடகங்களுக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
“இவர்களுக்கு எப்படிப் பாடம் புகட்டுவதென எனக்குத் தெரியும்” என அவர் அப் பேச்சின்போது தெரிவித்திருக்கிறார்.
‘கிராமங்களுடன் உரையாடல்’ எனும் நிகழ்வின் மூலம் அவர் மக்களை நேரில் சந்தித்து அளவளாவுவது வழக்கம். அவ்விதம் வெள்ளியன்று வால்பனேயில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ஊடகங்கள் மீதான தனது அச்சுறுத்தலை வெளியிட்டார். குறிப்பாக மஹாராஜா குழுமத்தின்மீது இலக்குவைக்கப்பட்ட இப் பேச்சின்போது “சில ஊடகங்கள் இந் நாட்டைச் சீரழிக்கப் பெரும்பாடு படுகின்றன. எங்கள் நாட்டில் அரசர்கள் எவருமில்லை, மஹாராஜாக்களும் இல்லை. இந்த ஊடகங்கள் அரசாங்கங்களையும், ஆட்சியாளர்களையும் கட்டுப்படுத்த விரும்புகின்றன. அது என்னிடம் வேலை செய்யப்போவதில்லை. தேவையானால் அவர்களுக்கு எப்படிப் பாடம் கற்பிப்பதென்று எனக்குத் தெரியும்” என பலத்த கரகோசத்தின் மத்தியில் அவர் தெரிவித்தார்.
“கடந்த 14 மாத கால ஆட்சியில் நான் எவர் மீதும் அல்லது எந்த ஊடகத்தின் மீதும் அழுத்தத்தைப் பிரயோகித்தவனல்ல. ஆனால் அவர்கள் ஊடக சுதந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டால், அதைக் கவனிக்கச் சட்டங்கள் உண்டு. அவற்றை மேற்கொள்ள வழிகளுண்டு. நான் அவற்றை மேற்கொள்வேன்” என கோதாபய கூறினார்.
அச்சத்தை உருவாக்கும் இந்த எச்சரிக்கை பொதுவாக அரசாங்கத்தை விமர்சிக்கும் அனைத்து ஊடகங்களுக்கு விடப்பட்டிருந்தாலும், அது மகாராஜா குழுமத்தையும், அதன் நிர்வாகி ராஜமகேந்திரனையும் குறிவைத்தே விடப்பட்டதாகப் பேசப்படுகிறது.
மகாராஜா நிறுவனத்தின் மீதான தாக்குதல் இதுவே முதலல்ல. 2005 முதல் 2015 வரை ராஜபக்ச அரசு ஆட்சியில் இருந்தபோது இந் நிறுவனத்தின் மீது பல தடவைகள் தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் மிக மோசமானது ஜனவரி 6, 2009 இல் நடந்தது. டெபனம பன்னிப்பிட்டியவில் இருந்த சிரச ஊடகத்தின் அதி நவீன ஸ்ரூடியோ 20 ஆயுததாரிகளால் தாக்கப்பட்டது. ஸ்ரூடியோவுக்கு உள்ளே கிளெமோர் கண்ணி வெடியொன்றையும் அவர்கள் வெடிப்பதற்கு முயற்சித்தார்கள் எனவும் அது வெற்றிபெறவில்லை எனவும் கூறப்பட்டது. அது வெடித்திருந்தால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்.
இத் தாக்குதலைத் தொடர்ந்து அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவினால் பல எச்சரிக்கைகள் இந் நிறுவனத்துக்கு விடப்பட்டிருந்தன. இத் தாக்குதல் நடைபெற்று மூன்று மாதங்களுக்குப் பின்னர் ITN செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றில், “இந் நிறுவனம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அதன் குரலாகச் செயற்படுகின்றது” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார். சிரச ஸ்ரூடியோ தாக்குதலுக்கு 3 நாட்களுக்குப் பின்னர் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கா கொலை செய்யப்பட்டார். அவரது கடைசியான நேர்காணல் சிரச ஸ்ரூடியோவில் ஜனவரி 6, 2009 இல் பதிவுசெய்யப்பட்டிருந்தது. சிரச மீதான தாக்குதல் ஒரு பயங்கரவாத நடவடிக்கை என விக்கிரமதுங்க கண்டித்திருந்தார். (மூலம்: Colombo Telegraph)
