Sri Lanka

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உயர்மட்ட கூட்டத்தில் இலங்கை தனது கருத்தை முன்வைக்கும் – தினேஷ் குணவர்த்தன


பெப்ரவரி 22 முதல் மார்ச் 23 வரை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 வது கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் இலங்கை தனது கருத்துக்களை முன்வைக்கும் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா தெரிவித்துள்ளார்.

46 வது அமர்வின் ஆரம்ப நாட்களில் நடைபெறும் உயர்மட்ட கூட்டங்களில் பொதுவாக நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள். 2021 ம் ஆண்டில் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மேலும் இரண்டு அமர்வுகளும் (47 & 48) நடைபெறவுள்ளன.


மைய நாடுகளான கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, மொண்டிநீக்ரோ, வட மகெடோனியா ஆகியவற்றின் சார்பாக பிரித்தானியாவின் வதிவிடப் பிரதிநிதி ஜூலியன் பிரெய்த்வெயிட் இலங்கை மீதான ந்நாடுகளின் அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.

இலங்கையின் முன்மொழிவுடன் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை மேற்கொண்ட பதில் நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை (country report) அடிப்படையாகக் கொண்டு ஆணையாளர் தயாரித்த அறிக்கையும் இவ்வமர்வில் சமர்ப்பிக்கப்படும். இவ்வறிக்கைகள் மூலம் பலத்த குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவிக்க இது ஒரு தருணமாகும் எனினும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவுக்கு இது மிகவும் சவால் நிறைந்த நாட்களாக இருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உயர்மட்டக் கூட்டத்தில் கருத்துக்களைத் தெரிவிக்கவிருக்கும் இதர நாடுகளின் பிரதிநிதிகள் தரப்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜயசங்கர், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அந்தனி பிளிங்கென் மற்றும் சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி ஆகியோர் அடங்குவர்.



மைய நாடுகளால் (இணைத்தலைமை) முன்வைக்கப்படும் புதிய தீர்மானம், ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் (30/1 – 40/1) மீது இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியே இருக்கும். ஆனால் இலங்கையின் புதிய ஆட்சியாளர் முந்தைய இணைத் தீர்மானத்திலிருந்து தன்னிச்சையாக விலகிவிட்டதால் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் விடயத்தில் புதிய ஆலோசனைகளை இவ்வமர்வில் சமர்ப்பிக்கலாம்.

ஏற்கெனவே பல தடவைகள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கியும் இலங்கை, தீர்மானத்தில் குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்றாதது மட்டுமல்ல அதைவிட மேலும் மீறல்களையும் செய்து வருவதால், இலங்கையின் புதிய ஆலோசனைகளுக்கு சபை இணங்கிப் போகுமென எதிர்பார்க்க முடியாது.

கடந்த காலங்களில் இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாகவும், தமிழர் தரப்பின் இணக்கம் காரணமாகவும், பல தடவைகள் முந்தைய அரசுக்கு கால அவகாசங்கள் பெறுவதற்கு வாய்ப்பிருந்தது. தற்போது நிலவி வரும் இலங்கை – இந்திய முறுகல் நிலை காரணமாக இந்தியாவின் நிலைப்பாடு சற்றுக் கடினமாக இருக்குமெனவே எதிர்பார்க்கலாம். அதே வேளை, அமெரிக்க நிர்வாக மாற்றம், இலங்கையில் சீனாவின் அளவுக்கு மீறிய பிரசன்னம் ஆகியன இந்தத் தடவை ஐ.நா.வின் இலங்கை பற்றிய நிலைப்பாட்டில் பாரிய மாற்றத்தை வெளிப்படுத்துமெனெவும் எதிர்பார்க்கலாம்.

இவற்றில், இலங்கை ஆட்சியாளர் மீதான குறி வைக்கப்பட்ட சர்வதேச நடவடிக்கைகள் (targeted actions), சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கான பரிந்துரைப்பு, சர்வதேச சட்டவரம்புத் தத்துவத்தின் பிரயோகம் ஆகியனவும் அடங்கலாம். அத்தோடு இலங்கையை மிகவும் கூர்ந்து அவதானிக்கும்படியும், அதன்மீது கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் மேலும் நிலைமை மோசமடையாமல் தடுப்பதற்கான முன்னெடுப்புக்களையும் சபை பரிந்துரைக்கலாம்.

இவை எவ்வளவு காத்திரமாக இருக்கப்போகின்றன என்பது இந்தியா எடுக்கும் நிலைப்பாட்டிலேயே தங்கியிருக்கப் போகிறது. புதிய தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படாமல் வாக்கெடுப்புக்கு விடப்படுமானால், இலங்கைக்குச் சாதகமாக அது நிறைவேறுவதற்கே சாத்தியம் அதிகமுண்டு. அப்படி நடைபெறும் பட்சத்தில் சர்வதேச சட்டவரம்புத் தத்துவத்தின் பிரகாரம் போர்க்குற்றங்களைப் புரிந்தவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்ட இலங்கையின் முந்நாள் இராணுவத்தினர் மீது புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புண்டு. பயணத் தடைகள், சொத்துக்கள் முடக்கப்படுதல், பாதிக்கப்பட்டோரால் வெளிநாடுகளில் பதியப்படும் வழக்குகள் எனப் பலவழிகளிலும் இவை மேற்கொள்ளப்படலாம்.