உயிகுர் முஸ்லிம்கள் தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா சீனா மீது தடை நடவடிக்கை
சீனாவில் சிறுபானமையினரான உயிகுர் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து கனடா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து சில சீன அதிகாரிகள் மீது பயணத் தடையை பிரயோகித்துள்ளன.
சீனாவின் வட மேற்குப் பகுதியிலுள்ள சின்ஜியாங் மாகாணத்தில் வாழும், அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுபான்மை இனமான உயிகுர்கள் மதம், மொழி, கலாச்சார ரீதியில் சீனர்களிடமிருந்து வேறுபடுபவர்கள். எட்டாம் நூற்றாணடில் மொங்கோலியர்களால் பலாத்காரமாக சீனாவுடன் இணைக்கப்பட்டது இப் பிரதேசம். ஆரம்பத்தில் இங்கு 12.3 மில்லியன் உயிகுர்கள் வாழ்ந்தார்கள். 80 வீதமான உயிகுர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் சீனாவின் இனவழிப்பு நடவடிக்கையினால் அங்கு இப்போது ஹான் இனத்தவர் குடியேற்றப்பட்டு, உயிகுர்கள் 40% மாக்கப்பட்டுவிட்டனர். 1 மில்லியன் உயிகுர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
சீனாவின் தொடரும் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் பலநாடுகள் குரல்கொடுத்திருந்தாலும் அதன் வல்லரசு ஸ்தானத்தால் அதன் மீது எந்த நடவடிக்கைகளையும் எடுக்க பலமான மேற்கு நாடுகள் முன்வரவில்லை.
சீனாவின் மீது பொருளாதாரத் தடைகளைப் பிரயோகிக்கும்படி கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி நீண்டகாலமாகக் குரலெழுப்பி வருகிறது. கடந்த வாரம் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் ஒரெ ஒரு லிபரல் உறுப்பினரே தடைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
இதே வேளை, ‘இரண்டு மைக்கேல்கள்’ என அழைக்கப்படும் கனடாவின் இரண்டு பிரஜைகள் துப்பற்ந்தார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாகச் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மீதான வழக்கு, கடந்த வாரம், சீன அரசினால் மூடிய அறைகளில் நடத்தப்பட்டது. தீர்ப்பு எதுவும் கொடுக்கப்படாமலே மீண்டும் இவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். இன்னுமொரு சீனப் பெண்மணியின் கைதுக்காக பழிக்குப் பழி வாங்கும் முறையில் ‘இரண்டு மைக்கேல்கள்’ கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களது விடுதலையைச் சுமுகமாகப் பெறுவதற்காகவே கனடா இதுவரை சீனா மீது தடை நடவடிக்கைகளில் இறங்கவில்லை. அது சரிவராது என்ற நிலையில் தற்போது மேற்கு நாடுகளின் துணையுடன் தடை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இருப்பினும் ‘இரண்டு மைக்கேல்களுக்கும்’ தடைகளுக்கும் சம்பந்தமில்லை எனவும் உயிகுர் சிறுபான்மையினர் மீது தொடரும் மனித உரிமை மீறல்களுக்காகவே தடகளை விதிக்கிறோம் என கனடியப் பிரதமர் ட்றூடோ கூறிவருகிறார்.
இத் தடைகள் சில சீன அதிகாரிகள் மீது பயணத் தடைகள் மற்றும் அவர்களது வெளிநாடுகளிலுள்ள சொத்து முடக்கம் போன்றவற்றைப் பிரயோகிக்கலாம். அதைவிட அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு மேற்கு நாடுகள் வியாபாரம் செய்வதற்கான தடைகளையும் விதிக்கலாம்.
சீனாவும் இவ்விடயத்தில் மிகவும் கடும்போக்கையும் நீதியற்ற வழிகளையும் கையாள்கிறது. இத் தடைகளை அறிவித்த உடனேயே அது ஐரோப்பிய ஒன்றியத்தின் சில அதிகாரிகள் மீது தடைகளை விதித்துள்ளது. “மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்ற நாடுகளுக்கு வகுப்பெடுக்க முடியாது. நாங்கள் இதையும்விட மோசமான நடவடிக்கைகளை எடுப்போம்” என சீனா எச்சரித்துள்ளது.
கனடா, அமெரிக்கா, பிரித்தானியா பற்றி சீனா எதையும் சொல்லவில்லை.
Related posts:
- இண்டர்போலினால் தேடப்படும் 14 இலங்கையர்கள்
- பலோச்சிஸ்தான் பிரிவினைவாதி கரீமா மெஹ்ராப் ரொறோண்டோவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் மீது சந்தேகம்
- சுமந்திரன், மனோ கணேசன், ஏ.எம்.பாயிஸ் கலந்துகொள்ளும் இணையரங்க கலந்துரையாடல் பற்றிய அறிவித்தல்
- கனடாவுக்குத் தடுப்பு மருந்துகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியது!
