Health

முடி உதிர்பவர்களுக்கோர் நற் செய்தி!

முடி உதிர்வதனால் உலகில் பல கோடி மக்கள் மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள் என்கிறது புள்ளி விபரம். நமது சமூகங்களில் ‘இவ்வியாதி’ திருமணங்களையும் குழப்பிவிடுமளவுக்கு நாசகாரம் செய்கிறது. சிலர் பெரும் பணச் செலவில் சத்திர சிகிச்சை செய்திருக்கிறார்கள். சிலர் தெருவோர தைல விற்பனை ஏமாற்றுக்காரர்களிடம் பெரும் தொகையை இழந்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு தமிழ் யூ-ரியூப் விற்பன்னர் துருக்கியில் தனது மயிர்-நாட்டு-வைபவத்தை நேரடி வர்ணனை செய்திருந்தார். இறுதியில் இவர்களில் பெரும்பாலானோர் ‘விக்’ கியிடம் சரணடையவேண்டி ஏற்படுகிறது. ஆனால் விஞ்ஞான ரீதியாக இவ்வியாதிக்கு சிகிச்சையுண்டு என அமெரிக்காவின் வட கரோலினா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கின்றனர். இது வெற்றியளிக்கிறதோ இல்லையோ துருக்கிப் பயணத்தைக் கொஞ்சம் தள்ளிப்போட இது வழி வகுக்கலாம்.

Image Credit: Wikipedia

முடி பாலூட்டி உயிரினங்களில் மட்டுமே காணப்படும் உறுப்பு. சருமப் படையில் புதைந்திருக்கும் மயிர்ப்புடைப்பு அல்லது மயிர்க்கால் (hair follicle) எனப்படும் உறுப்பின் ஒரு பகுதியே சருமத்திற்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் நமது முடி. இம்மயிர்க்கால் மொத்தமாக 20 விசேட கலங்களினால் ஆனது. இக்கலங்களிலுள்ள ஒரு விசேட அம்சம் இவற்றின் கலப் பிரிவுகள் (cell divisions) துரித கதியில் நடைபெறுவது. உள்ளங்கைகள், பாதங்களைத் தவிர மீதி அனைத்து சருமத்திலும் இக்கலங்கள் உள்ளன. முடியை வளர்ப்பதும் உதிர்ப்பதும் இந்த மயிர்க்காலின் கடமை. இக்கடமையை ஒழுங்காகச் செய்வதற்கு மயிர்க்காலுக்கு மூன்று பேர் உதவிக்கு வரவேண்டும். 1). ஹோர்மோன்கள் 2). நியூரோ பெப்ரைட்ஸ் எனப்படும் ‘இரசாயன தூதர்கள்’ 3). நிர்ப்பீடனக் கலங்கள் அல்லது வெண்குருதித் துணிக்கைகள் (immune cells). உடலில் எந்த இடத்தில் எப்படியான முடி வளரவேண்டுமென்பதை இவை மூன்றும் தான் தீர்மானிக்கின்றன. ஐந்து வகையான படி நிலைகளில் முடி வளர்கிறது. 1). துடிப்போடு வளரும் காலம் 2). வளர்ச்சி சுருங்கும் காலம் 3). அமைதிக் காலம் 4). உதிரும் காலம் 5). புதிய முடி முளைக்கும் காலம்.


அப்போ உங்களில் சிலருக்கு இருக்கக்கூடிய பிரச்சினை 5 ஆவது பருவம் பொய்த்துப் போவது. சிலருக்கு இது பரம்பரையில் வரும் குணாதிசயமாக இருப்பதுண்டு. சிலருக்கு ஹோர்மோன் மாற்றங்களினாலும் சிலருக்கு மன அழுத்தம் காரணமாகவும் சிலருக்கு சிறு வயதில் ஏற்படும் தன்னியக்க நோயெதிர்ப்பு வியாதியினால் (auto immune dicease) சடுதியாக உடலிலுள்ள அனைத்து முடியும் உதிர்ந்து போவதுமுண்டு. புற்றுநோய் போன்ற சில நோய்களுக்கு அளிக்கப்படும் ‘கீமோ தெறாப்பி’ எனப்படும் சிகிச்சையின்போது பாவிக்கப்படும் மருந்து ‘துரித கதியில் பிரிவடையும்’ கலங்களை இலக்கு வைத்து அழிப்பதற்கெனத் தயாரிக்கப்படுவது. புற்று நோய்க் கலங்கள் இப்படி துரித கதியில் பிரிவடையும் குணாதிசயம் கொண்டதால் இம்மருந்து இப்படியான கலங்களை அழித்து விடுகிறது. மயிக்கால் கலங்களும் துரிதமாகப் பிரிவடைவதனால் இம்மருந்து அவற்றை புற்றுநோய்க்கலங்களென நினைத்து அழித்து விடுகிறது. இம்மருந்து நிறுத்தப்பட்டதும் மயிர்க்கால் மீண்டும் புத்துணர்வு பெறுகிறது. இதை விட சில வகையான பூஞ்சணத் தொற்றுக்கள் (fungus) மற்றும் தீவிர மன அழுத்தம் (stress) போன்ற காரணங்களினாலும் இம்மயிர்க்கால்களின் புத்துருவாக்கம் பாதிக்கப்படுகிறது. ஆனால் இதில் நம்பிக்கை தரும் விடயம் என்னவென்றால் இம்மயிக்கால்கள் சுருக்கமடைவது வழக்கமே தவிர நிரந்தரமாக இறந்து போவது அரிது. இதை வைத்துத் தான் வடகரோலினா ஆராய்ச்சியாளர்கள் தமது கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர்.

அவர்கள் கண்டு பிடித்தது இது தான். இந்த மயிர்க்காலின் புத்துருவாக்கத்திற்குக் காரணமான மூலக்கூற்றை இவர்கள் கண்டறிந்துவிட்டார்கள். அதற்குப் பெயர் microRNA (miR-218-5p). மயிக்காலின் அடியிலுள்ள dermal papilla (DP) என்னும் அங்கமே மயிர்க்காலின் புத்துயிர்ப்பைக் கட்டுப்படுத்துகிறது. இந்தா ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்த இந்த சிகிச்சை முறையின் மூலம் DP யின் உள்ளே நுழைவதற்கான பாதையைத் திறக்கும் வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அநேகமான மருந்துகளும் சிகிச்சை முறைகளும் தமது மருந்துகளை எப்படி மனிதக் கலங்களுக்குள் கொண்டு சேர்ப்பது என்பதைக் கண்டறிவதன் மூலமே வெற்றியை ஈட்டுகின்றன.

வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான கே செங்க் இந்த DP கலங்களை ஆய்வுகூடத்தில் வளர்த்து அவற்றை microRNA மூலக்கூறுகளால் ‘ஏமாற்றுவதன்’ மூலம் மீண்டும் புத்தாக்கம் பெற தூண்டினார். எலிகளில் இம்முறை பரீட்சிக்கப்பட்டபோது 15-20 நாட்களில் 90% மான முடி மீள வளர்ந்துவிட்டதாக செங்க் கூறுகிறார். microRNA யின் அளவை அதிகரிக்க முடியிந் வளர்ச்சி துரிதமாகவும், அளவைக் குறைக்க வளர்ச்சி சுருக்கமடைந்து முற்றாக நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். இந்த microRNA மூலக்கூறுகளை எண்ணை அல்லது தைலம் போன்ற வடிவங்களில் தலையில் தேய்த்துக்கொள்வதன் மூலம் இதன் பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் செங்க் கூறுகிறார்.

தற்போது சந்தையில் பெறக்கூடிய ‘மினொக்ஸிடில்’ (Minoxidil) மற்றும் ‘ஃபினாஸ்றெறைட் (Finasteride) போன்ற மருந்துகள் முடி உதிர்வதைத் தாமதப்படுத்துவதாக அறியப்படுகிறது. எனினும் உதிர்ந்த முடியை மீள வளர்த்தெடுக்கும் சிகிச்சை முறைகள் இதுவரை அறியப்படவில்லை. சத்திர சிகிச்சை மூலம் சிலர் வெற்றிகரமாக மயிர்க்கால் நாற்றுகளை நட்டிருக்கிறார்கள். இருப்பினும் இதன் மூலம் நோய்த் தொற்று சருமம் காயப்படுதல் போன்ற ஆபத்துக்களுமுண்டு. (Image Courtesy: Photo by Angshu Purkait on Unsplash)