நறுக்குச் செய்திகள்: ஆகஸ்ட் 14, 2024
“காசா பாடசாலைப் படுகொலை நியாயமானது” – ஜேர்மனி


காசாவில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை மீதான குண்டுத்தக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டமை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தும்கூட “இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொண்ட இத்தாக்குதலை நாங்கள் நியாயமானதெனவே கருதுகிறோம்” என ஜேர்மனியின் அரசாங்க துணைப் பேச்சாளர் நோல்ஃப்காங் பூச்னர் தெரிவித்துள்ளார். “ஹமாஸ் எப்போதும் பாடசாலைகளையும், மருத்துவமனைகளையும், குழந்தைப் பள்ளிகளையும் தமது கட்டளைத் தளங்களாகப் பாவிக்கின்றனர். எனவே இத்தாக்குதல்கள் நியாயமானவை” என அவர் திங்களன்று ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார். ஜேர்மனி எப்போதுமே வரலாற்றின் தவறான பக்கமே இருந்து வருகிறது என்பது மீண்டுமொருதடவை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதே வேளை இரணைக் குழந்தைகளைப் பெற்ற ஒரு பாலஸ்தீனிய தந்தை தனது பிள்ளைகளின் பிறப்பைப் பதிவு செய்யச் சென்றிருந்தபோது பிள்ளைகளும் தாயும் இஸ்ரேலிய குண்டுத்தக்குதலினால் இறந்து போனார்கள். சமூக வலைபதிவில் வந்த இச்செய்தியை இஸ்ரேலியர்கள் கொண்டாடுகிறார்கள்.
This man’s twin sons were killed by the IDF while he was at the hospital registering their births People on Israeli telegram channels finds this hilarious
செஞ்சோலை நினைவு நாள்

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஆகஸ்ட் 14, 2006 அன்று வல்லிபுனத்தில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட குண்டுத்தக்குதலில் 54 அனாதை மாணவிகளும், 7 ஆசிரியர்களுமுட்பட 61 பேர் பலியானார்கள். நாடு 18 வருடங்களைத் தாண்டியும் இவர்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படவுமில்லை அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டதாகவுமில்லை. வழக்கம் போல இந்த வருடமும் உறவுகளும் சில நல்லுள்ளங்களும் இறந்தவர்களை நினைவுகூர்ந்திருக்கிறார்கள்.
அரியநேத்திரன் பொது வேட்பாளராகத் தெரிவு

செப்டம்பர் 21 நடக்கவிருக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் உதிரித் தமிழ்க் கட்சிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பா.உ.பா.அரியநேத்திரன் களமிறக்கப்படுகிறார். ஜூலை 22 அன்று சில தமிழ்க் கட்சிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் கூடி தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதாகத் தீர்மானித்திருந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இதில் பங்கேற்கவில்லை. உதிரிக் கட்சிகளின் சார்பில் மூன்று பேர் முன்மொழியப்பட்டிருப்பினும் தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளோட், தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆகியன பா.அரியநேத்திரனை ஆதரித்திருந்தன. பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவது தோல்வியைக் காணப்போவது மாத்திரமல்ல அது தமிழ் மக்களுக்குப் பாதகமாகவே அமையுமென தமிழர்சுக்கட்சியின் யாழ் மாவட்ட பா.உ. திரு சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதே வேளை பொது வேட்பாளர் பெறும் வாக்குகளைக் கொண்டு தமிழரின் பலத்தை நிரூபித்துக் காட்டமுடியுமென திரு விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இத் தேர்தலை தமிழ் மக்கள் முற்றாகப் பகிஷ்கரிக்க வேண்டுமெனக் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பா.உ. செல்வராஜா கஜேந்திரன் பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருகிறார்.
பாய்ச்சல் வீரர்கள்

‘மொட்டு’ கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ச வேபாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை 100 ற்கு மேற்பட்ட அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் கப்பலுக்குப் பாய்ந்திருக்கிறார்கள். இப்பாய்ச்சல் போட்டியின் இரண்டாம் கட்டமாக சஜித் பிரேமதாச கட்சியிலிருந்து வீரர்கள் பாய்வதற்கு அணிதிரண்டுகொண்டிருக்கிறார்கள் எனவும் அவர்களில் முன்னணி வீரராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாநாயக்கா அவர்கள் எனப்படுகிறது. “சஜித்தை நான் மிகவும் நேசிக்கிறேன் ஆனாலும் அவரைவிட என் தாய்நாட்டை அதிகமாக நேசிக்கிறேன் என அவர் பாய்ச்சலின் பின்னான ஊடக சந்திப்பில் கூறியிருக்கிறார். இதற்கு முன்னர் ஆச்சரியம் தரும் வகையில் ராஜபக்ச குடும்பத்திற்கு மிக நெருக்கமானவரும், மொட்டு கட்சியின் தனாதிகாரியும், முன்னாள் சுகாதார அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சி அவர்களாவார். தனது தொகுதி மக்கள், நண்பர்கள், கற்றோர்கள் ஆகியோருடன் ஆலோசித்த பின்னரே தான் இந்த முடிவை எடுத்ததாகவும் இருப்பினும் தனது கட்சி அங்கத்துவத்தைத் தான் தொடர்ந்து பேணுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதே வேளை மொட்டு கட்சியைச் சேர்ந்த ‘சண்டியன்’ அபயகுணவர்த்தனா “2019 தேர்தலில் கோதாபயவிற்கு வாக்களிக்காமல் நீ வீட்டுக்கு வர முடியாது” எனத் தாயார் கூறியதாகவும் இப்போது அதே தாயார் “ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்காமல் நீ வீட்டுக்கு வரமுடியாது” எனக் கூறியதால் தான் பாயவேண்டி ஏற்பட்டது எனவும் கூறியிருக்கிறார். இவர்களெல்லோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீரர்களிடமிருந்து இப் பாய்ச்சல் விளையாட்டைக் கற்றுக்கொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
