World

ஜேர்மனி: தனியார் வீடுகளில் இரகசிய சோதனையை மேற்கொள்ள பொலிசாருக்கு அனுமதி

ஜேர்மனி நாட்டு மக்களின் தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் வீடுகளில் இரகசியமாகப் புகுந்து சோதனையிடவும் வீட்டுரிமையாலர்களின் கணனிகள், கைத்த்லைபேசிகள் ஆகியவற்றில் வேவு பார்க்கும் தொழில்நுட்பத்தைப் பொருத்தவுமான அதிகாரத்தை மத்திய பொலிசாருக்கு (BKA) வழங்க அரசாங்கம் உத்தேச வரைவு ஒன்றைத் தயார் செய்து வருகின்றது. அவசியம் எனக் கருதப்படும் பட்சத்தில் மட்டுமே இவ்வதிகாரம் பிரயோக்கிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும் இது பெரும்பாலும் குடிவரவாளரையும் இடதுசாரிகளையும் இலக்குவைத்துச் செய்யப்படுமொன்று என மனித உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் 13 ஆவது சரத்தின்படி “ஆபத்து நிச்சயம்” என்ற நிலையில் நீதிமன்ற ஆணையைப் பெற்று பொலிசார் சோதனையை மேற்கொள்ள முடியும். அதே வேளை சந்தேக நபருக்கு அவர் மேல் இருக்கும் சந்தேகம் என்ன என்பதையும் பொலிசார் தெரிவிக்க வேண்டும். ஆனால் புதிய வரைவு சட்டமாக்கப்படும் பட்சத்தில் நீதிமன்ற ஆணை எதுவுமின்றி ஒருவர் சந்தேக நபரென்று காணப்பட்டால் அவரது வீட்டை எந்த நேரமும் சோதனையிடலாம் என்பதோடு அவர் மீதான குற்றச்சாட்டு என்ன என்பதைத் தெரிவிக்கவும் தேவையில்லை.


இச்சட்டம் அமுலுக்கு வந்தால் ஊடகவியலாளர்களும் அவர்களுக்கு இரகசியத் தகவல்களைத் தருபவர்களும் பொலிசாரால் குறிவைக்கப்பட்டு பாதுகாப்பு என்ற போர்வையில் அரசுக்கு எதிரான கருத்துக்களை முற்கூட்டியே முடக்கிவிட முடியுமெனக் கருதுவதால் ஊடகவியலாளர் சங்கம் இச்சட்டத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்களின் வீடுகள் இரகசியமாக உடைக்கப்பட்டு பொலிசார் வேவுக் கருவிகளை பொருத்தக்கூடும் எனவும் இது உலகில் இருக்கும் இதர சர்வாதிகார நாடுகளைப் போல் ஜேர்மனியும் மாறுவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இப்படியான அசாதாரண காலங்களில் பொலிசாருக்கு அதிகப்படியான அதிகாரங்கள் தேவை என பசுமைக் கட்சியும் இவ்வரைவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.