Sri Lanka

தளபதி வசந்த கரன்னகொட உட்படப் 13 கடற்படையினர் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

ஜனவரி 24, 2020

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்தா கரன்னகொட

2008 – 2009 காலப்பகுதியில் 11 பேரைக் கடத்தித் , துன்புறுத்திப் பணம்பறிக்க முற்பட்டமை போன்ற காரணங்களுக்காக, முன்னாட் கடற்படைத் தளபதி வசந்தா கரன்னகொட உட்படப் 13 பேருக்கு நேற்றுக் குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் வசந்தா கரன்னகொட மட்டும், அறிவித்தல் கொடுக்கப்படாமையால், கொழும்பு உயர்நீதிமன்றத்தில் சமூகமளிக்கவில்லை.


ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ‘ஜனாதிபதி ஆணையம்’ விசாரணைகளை நிறைவு செய்யும்வரை குற்றப்பத்திரிகைகளை வழங்க வேண்டாமென குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கேட்டிருந்த போதிலும் நீதிமன்றம் அதற்கு இணங்கவில்லை.

ஆணையத்தின் அறிக்கையில் இருக்கலாம் எனக் கருதப்படக்கூடிய சில விடயங்கள் நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கலாமென்ற காரணத்தினால் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்த வேண்டாமென அவர்களின் சார்பாக வாதாடிய சட்டத்தரணி கேட்டிருந்தார்.

ஆயினும், உயர் நீதிமன்றம் ஜனாதிபதி ஆணையத்திற்குக் கட்டுப்பட்டதல்ல எனவும், ஜனாதிபதி ஆணையம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரேயே அட்டோர்னி ஜெனெரல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளைச் சமர்ப்பித்துவிட்டார் என்பதால் ‘ஆணையம் ‘ உயர் நீதிமன்றத்துக்கு கட்டளையிட முடியாது எனவும் கூறி, வழக்குத் தொடுகை சார்பாகத் தோற்றிய உதவி சொலிசிட்டர் ஜெனெரல் சரத் அமுனுகம, PC, மற்றும் ஜனக பண்டார ஆகியோர் குற்றவாளிகளின் சட்டத்தரணியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.

எனவே ட்ரயல் -ஆர்-பார் நீதிபதிகளைக் குற்றப்பத்திரிகைகளை வழங்கும்படி வழக்குத் தொடுநர் தரப்புக் கேட்டிருந்தது.

இதன் பிரகாரம், ட்ரயல்-ஆர்-பார் தலைவர் சம்பா ஜானகி ராஜரட்ண குற்றப்பத்திரிகைகளை வழங்கும்படி பணித்ததுடன் குற்றஞ்சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் பணப் பிணையாகத் தலா ரூ.500,000, சரீரப் பிணையாக தலா ரூ.2.5 மில்லியன் ஆகியவற்றில் செல்லலாமெனவும் உத்தரவிட்டார்.

அத்துடன், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கடவுச் சீட்டுகளைப் பறிமுதல் செய்ததோடு, அவர்களின் மனைவிமாரைச் சரீரப் பிணைக்குப் பொறுப்பாக இருக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றவாளிகளின் சார்பில் அனில் சில்வா,PC, அனுஜா பிரேமரத்ன, PC, நிரோஷன் பெரேரா ஆகியோரைக் கொண்ட சடடத்தரணிகள் குழு பிரதிநிதித்துவம் செய்திருந்தது. பாதிக்கப்பட்டவர்களை அஷால செனவிரத்ன பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தார்.

ட்ரயல் – அற் – பார் நீதிபதிகளாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா, நவரட்ண ராஜசிங்க ஆகியோர் கடமையாற்றினார்.

கடற்படை அதிகாரிகள் டி.கே.பி. தசநாயக்கா, சம்பத் முனசிங்க, சுமித் ரணசிங்க, டிலங்கா சேனாரட்ண , நாளின் பிரசன்னா விக்கிரமசூரிய, அன்ரன் பெர்னாண்டோ, ராஜபக்ச பத்திரான்னஹெலகே கிட்சிறி, அருணா துஷார மெண்டிஸ், கதிராச்சிலகே காமினி, சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, உபுல் சமிந்த, நந்தப்பிரியா ஹெட்டிஹெண்டி, சம்பத் ஜனககுமார மற்றும் கடற்படைத் தளபதி வசந்தா கரன்னகொட ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாவர்.

இவர்களினால் பாதிப்புக்குள்ளாவார்கள் என, எஸ்.ஏ. லியோன் ஸ்ரான்லி, ரொஷான் லியோன் ஸ்ரான்லி, ஜான் ரீட், தியாகராஜா ஜெகன், ராஜீவ் நாகநாதன், ராமலிங்கம் திலகேஸ்வரன், பிரதீப் விஸ்வநாதன், மொஹாமட் சாஜித், மொஹாமட் டிலான், கஸ்தூரி ஆராச்சிலகே அந்தோனி மற்றும் அன்வார் முபாரக் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வழக்கு பெப்ரவரி 7 ம் திகதிக்குப் பின்போடப்பட்டுள்ளது.