யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கொலை | கணவர் கைது?
ஜனவரி 22, 2020

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இறுதி வருட மருத்துவ பீட மாணவியான பேருவலவைச் சேர்ந்த றோஷினி என்ற மாணவியின் கழுத்தை வெட்டிக் கொலை செய்ததாக, பரந்தன் படைமுகாமைச் சேர்ந்த அவரது கணவரான சிங்கள இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்ணைக் கடற்கரையில் இன்று சம்பவம் நடைபெற்றுள்ளது.
இன்று பிற்பகல் (இலங்கை நேரம் பி.ப. 2:30 மணி) கொலை செய்யப்பட்ட றோஷினி முப்பது வயது மதிக்கத்தக்க இராணுவத்தினர் ஒருவருடன் பண்ணைக் கடற்கரையில், குடையின் கீழ் இருந்துகொண்டிருந்தபோது அவரது உடல் திடீரெனக் கடலினுள் விழுந்ததாகவும் அதன்பின் தப்பியோட முயற்சித்த அந்த இராணுவத்தினரை மக்கள் தடுத்துவிட்டனர் எனவும் கொழும்பு ரெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை இராணுவத்தின் விசேட படையணியும் காவற்துறையும் அழைத்துச் சென்றுள்ளனர்.
றோஷினியின் கழுத்தும், கைகளும் வெட்டப்பட்டுள்ளனவென அறியப்படுகிறது.
சம்பந்தப்பட்ட இருவரும் பேருவலவைச் சேர்ந்தவர்களென்றும், 2015 இல் இருவரும் திருமணம் செய்துகொண்டார்களென்றும், கணவரிடமிருந்து விவாகரத்துக்கோரி றோஷினி வழக்குப் பதிந்திருந்ததாக ‘ஹிரு நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
