Sri Lanka

“காணாமலாக்கப்பட்டவர்கள் இறந்துபோய்விட்டார்கள்” என ஜனாதிபதி கூறமுடியாது – பா.உ. சிறிதரன்

ஜனவரி 21, 2020

பா.உ. சிறிதரன்

போரின் போதும், போர் முடிந்த பின்னரும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாகச் சமீபத்தில் ஜனாதிபதி ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.


காணாமற் போனவர்களில் பலர் போரின் இறுதி நாட்களில் ஆயுதப்படைகளிடம் சரணடைந்தவர்கள் என்ற வகையில் அவர்களின் இருப்பு பற்றிய பொறுப்புக்கூறலும், நீதி வழங்கலும் அரசாங்கத்திற்குள்ள கடமைகள் என அவர் பாராளுமன்றத்தில் பேசும்போது தெர்வித்தார்.

போரின் போது காணாமற் போனதாகக் கூறப்பட்டவர்கள் இறந்துபோய் விட்டனர் எனவும், அவர்களில் பலர் விடுதலைப் புலிகளால் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டுப் போராடுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் எனவும் ஜனாதிபதி ராஜபக்ச சென்ற வாரம் தெரிவித்திருந்தார்.

“காணாமற் போனவர்களுக்கு என்ன நடைபெற்றது என்பது அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாமையினால் அவர்கள் ‘காணாமற் போய்விட்டார்களெனக் கூறி வருகிறார்கள்” அவர் மேலும் தெரிவித்தார்.

அதே வேளை, இலங்கைக்கான ஐ.நா. வின் ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர் அவர்களுடனான சந்திப்பின்போது, காணாமற் போனவர்கள் விடயம் தொடர்பாக, ஜனாதிபதி ராஜபக்ச தான் எடுக்கவிருக்கும் முயற்சிகள் பற்றி அவருக்கு எடுத்துரைத்ததாக ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்திருந்தது.

காணாமற் போனவர்களில் பலர் இராணுவத்திடம் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் உண்டெனவும், இவ் விடயங்களை வெளிநாட்டு ஊடகவியலாளரும், அமைப்புக்களும் பதிவு செய்துள்ளனரெனவும் பா.உ. சிறிதரன் பாராளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார்.

தேவையான விசாரணைகள் முடிவு பெற்றதும், காணாமற் போனவர்களுக்கான இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுமெனவும் அவர்களது குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடரத் தேவையான ஆதாரங்கள் வழங்கப்படுமெனவும் ஜனாதிபதி கூறினார்.