Analysis

முரண்பாடுகளைத் தீர்க்கும் அணுகுமுறைகள்


Dr. பாலா

Dr. பாலா

இன முரண்பாடுகளுக்கான தீர்வுகளை பேச்சுவார்தைகளின் மூலம் பெற்றுகொள்ளும் முயற்சிகள் வெற்றியளிக்க வேண்டுமாயின் அதற்கான அணுகுமுறைகள் நேர்த்தியாக கையாளப்படவேண்டும். பலவருட பகைமை முரண்பாடுகளை வலிமைப்படுத்தும் நடைமுறைகள் கதையாடல்கள் வன்முறைகள் என்பன பகைமையும் சந்தேகமும் நிறைந்த உந்தித்தள்ளும் உணர்வுகளால் நெறிபடுத்தும் இனக்குழுமம் சார்ந்த மனப்பக்குவ நிலையை (tribal effect mindset) ஏற்படுத்தியுள்ளது.

இம்மனநிலை என்னுடையது உன்னுடையது என்ற பெருப்பிக்கப்பட்ட விரோத மன உணர்வையும் (adversarial mindset) தனது நிலைப்பாடுகள் சரியானவை உயர்வானவை என்றும் அனைத்து பின்னடைவுகளுக்கும் எதிர்தரப்பே காரணமென்னும்
மனப்பான்மையையும் (self-righteous) இறுகிய மாற்றுக்கருத்துக்களை ஆராய இயலாத மூடப்பட்ட சிந்திக்கும்தன்மையையும் (closed mindset) முன்னிறுத்துகிறது. இத்தகைய இறுக்கமடைந்த உணர்வுகளைக் கொண்டுள்ள மனநிலையில்
கவனமின்றியிருப்பின எவரது செயல்களும் சொற்பிரயோகங்களும், சுமுகமான இணக்கப்பாடுகளை அடைவதற்கு தடைகற்களாக அமையக் கூடும்.


பாதிக்கப்பட்ட குழும மனநிலையில் (tribal mindset) வெறுப்பு கோபம் பயம் போன்ற காரணிகளால் அறிவு சார்ந்த தளத்திற்கப்பாலான ஆழ்மனதில் எமது உணர்வுகள நெறிப்படுத்தப்படுவதால் அதன் வினைவுகள் எம்மைத் தவறானமுடிவுகளுக்கு ஈர்த்துச் செல்லக் கூடும். இந்த ஈர்ப்புக் காரணிகளை ஆராய்ந்து ஜந்து வகையாக பிரித்துள்ளனர். (Five lures of tribal mind)

  1. தலை சுற்றல் -vertigo- எமது சக்தியை விரையப்படுத்தும் உணர்வு நிலை
  2. அடையாளப்படுத்தும் அரசியல் – identity politics- உள்ள அரசியல் வாய்ப்புகளை மேம்படுத்த திரிவுபடுத்தப்படும் அடையாளங்கள்
  3. மீளமுடியாமல் மீண்டுரைத்தல் – repetition compulsion – தம்மைத் தாமே தோல்வியடையச் செய்யும் அணுகுமுறையை மீண்டும் மீண்டும் தொடர்தல்
  4. புனிதங்களாக்கப்பட்டவைகள் மீதான தாக்குதல்கள் -assault on the sacred
  5. தீண்டத்தகாதவை –taboos- தடைசெய்யப்படும் உரைநடைகள் உறவுகள்


புனிதமாக்கப்பட்டவைகளின் மீதான தாக்குதல் -Assault on the Sacred

கடந்த சில நாட்களாக யாழில் நடைபெறும் சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருப்பதால் முதலில் புனிதமாக்கப்பட்டவைகளின் மீதான தாக்குதல் (assault on the sacred) குறித்து கவனத்திற் கொள்ள வேண்டியவை என்ன என்பதை அறிந்து கொள்ள முனைவோம் (ஆங்கிலத்தில் sacred எனும் பதத்தினால் விளங்கப்படும் சமயங்கள் சார்ந்தவைக்கும் அப்பாலான பரந்த அர்த்ததிலேயே புனிதமென்ற சொற்பதம் பயன்படுத்தப்படுகிறது).

ஓவ்வொரு சமூகமும் தமது இனம், கலாச்சாரம், பாரம்பரியம், சமய வழிபாடு சார்ந்து பல்வேறு சம்பிரதாயங்களை, சடங்குகளை, சின்னங்களை, கட்டிடங்களை, தலைவர்களைப் பெரும் மதிப்புக்குரியவையாக புனிதத்தன்மையுடையனவாக சிருஷ்டித்துக் கொள்கிறது. இவை அவமதிக்கப்படும் போது அல்லது அவமதிக்கபடுவதாக உணரும் போது கொந்தளிக்கும் உணர்வுகளை ஏற்படுத்துகிறது. ஏனைய தரப்பினர்க்கு இது மிகைப்படுத்தப்பட்டதாகவும் அர்த்தமற்றதாகவும் நாடகத்தன்மையுடையதாகவும் தோற்றமளிக்கக் கூடும். ஆனால் இவை சமூகத்தின் அடையாளத்துக்கான முக்கிய தூண்களாக சிருஷ்டிக்கப்படுவதால் இவற்றின் மீதான தாக்குதல்கள் அவமானப்படுத்துவையாக முரண்பாடுகளை வளர்த்து வன்முறைகளைக் தூண்டுகின்றன.

புனித தன்மையுடனாதும் பெரும் மதிப்புக்குரியன என்றும் கருதப்படுபவை உள்ளார்ந்த தன்மையைப் பெற்றனவாகவும் (intrinsic), நீடித்த நிலையான விலைமதிபற்றதாகவும் (infinite), ஒரு பகுதியேனும் மறுதலிக்கமுடியாததும் (inviolable) ஆன குணாம்சங்களை கொண்டிருக்கும்.

அகத்தில் உள்ளார்ந்த தன்மை (intrinsic): ஒரு சிலர் அதனை புனிதமாக கருதுகிறார்கள் என்பதற்கு அப்பால் அதற்கெனவே தனித்துவமான முக்கியத்துவம், பாரம்பரிய பண்பாடுகளினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணம் தாய், தாலி தேசியக்கொடி.

நீடித்த நிலையான விலைமதிப்பற்ற அளவற்ற தன்மை (infinite): தாய் தனது பிள்ளைகள் மீது வைத்துள்ள பாசம் போன்றது. இதற்கு அளவுகோல் இல்லை. அளவிடும் தன்மையிலான வாதங்கள் இவ்வுணர்வை துன்புறுத்துவதாகவே அமையும்

ஒரு பகுதியேனும் மறுதலிக்க முடியாதவை (inviolable): புனித புத்தகங்களை எரிப்பதோ அல்லது புனித உருவங்களைப் பொருத்தமற்ற இடங்களில் பயன்படுத்துவதோ சிறிய குற்றச்செயல்களாக கணிக்கப்படாது அதனை முழுவதுமாகக் கீழ்நிலைப்படுத்தப்படுவதாகக் கருதப்படும்

இவ்வாறான புனிதத் தன்மையுடையனவாக கருதப்படுவன் மீதான நிலைப்பாடு ஒருவருக்கொருவர் மாறுபடினும் அதன்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களில் பெரும்பான்மையோர் இதய சுத்தியுடனும் ஒருமித்த மனதுடனுமே இவற்றை
நம்புகிறார்கள்.



இவ்வாறு புனிதமாக நம்பப்படுபவையும் புனிதமானதான நம்பவைக்கப்பட்டுள்ளவையும் மீதான நடவடிக்கைகள், உரையாடல்கள் பாதகமானவையாக தாக்குதல்களாக மாறாதிருக்க வேன்டுமானால் இவை ஏற்படுத்தக் கூடிய தடங்கல்கள் பற்றிய தெளிவு தேவை.
தடங்கல்களாவன:
1) புனிதத்தன்மையுடையனவாக கருதப்படுவன பற்றிய அறிவின்மை
2) புனிதத்தன்மையுடைமைக்கும் முக்கிய தன்மையுடமைக்குமான வேறுபாட்டினை உணராதிருத்தல்
3) புனிதத்தன்மையுடையனவற்றிக்குரிய மரியாதையை அளிக்காதிருத்தல்
4) புனிதத்தன்மையுடையனவாக கருதுபவவை பரஸ்பரம் விட்டுக்கொடுக்க முடியாமை

இத்தடங்கல்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை தடுப்பது எப்படி?

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வரலாற்றிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் அறிந்து கொண்டவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அங்கு தொன்மை வாய்ந்தவையும் பாதுகாக்கப்பட்டதும் சேமடைந்ததுமான புராதன பொக்கிஷங்களும் பெருமைக்குரியதும் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதுமான அழியா நினைவு சின்னங்களும் ஏதோ ஒரு வகையில் ஒழுங்கமைக்கபட்டு பாதுகாக்கப்படுகிறது

புனிதத் தன்மையுடையன பற்றிய புரிந்துணர்வு கொள்ளல்:

ஒரு சமூகத்தில் அடிப்படையான தனித்துவ அடையாளங்களை (core identities) உறுதிபடுத்தும் தூண்களாக இருக்கும் பின்வரும் காரணிகளில் அவர்களால் கடைப்பிடிக்கப்படும் அல்லது கருத்து ரீதியாக அவர்கள் மீது திணிக்கப்படும் புனிதமான
அம்சங்களை அறிந்து கொள்வது முக்கியமானதாகும்.

சமூக சமய கலாச்சார நம்பிக்கைகள் (beliefs)

அர்த்தமுள்ளதாக கருதப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் (rituals)

தமக்கான முன்னோடிகளாக அல்லது வழிகாட்டுதலுக்குக்காக ஏற்றுக்கொள்ளும் அல்லது பின்பற்றும் தலைவர்கள், நண்பர்கள், மூதாதையர் (allegiance)

ஏற்றுக்கொண்டு ஒழுக விரும்பும் சுதந்திரம் நீதி மற்றும் மனிதநேயம் போன்ற விழுமியங்கள் (values)

மற்றும், மனதில் நீங்காது நினைவு கொள்ள விரும்பும் இறந்த கால அனுபவங்கள், சம்பவங்கள் (experience) (brave என்று இலகுவில் நினைவில் வைத்திருக்கலாம்).

இதில் எந்த அடிப்படைத் தூண்கள் சார்ந்ததாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் புனிதத் தன்மை உடையனவையாகக் கருதப்படும் விடயங்கள் அமைந்திருக்கிறது என்ற தெளிவு இவற்றைக் கையாள்வதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள உதவும். இதனால்
அவமதிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தும் வகையிலான உரையாடல்களை நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்வதும் சாத்தியமாகலாம்.



புனிததன்மையுடைமைக்கும் பொது முக்கிய தன்மையுடமைக்கும் வேறுபாட்டினை உணர்தல்:

சமூகத்தில் அடிப்படைத் தூண்கள் சார்ந்த புனிதத்தன்மையுடையனவாக கருதக்கூடியன அதன் பரிமாணங்களில் வெவ்வேறு அளவுடையதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். இதனை நான்கு வகையாக கணிப்பீடு செய்யலாம்.

அதியுயர் புனிதமுனையவை- (sacred sacred)

புனிதமுடையவை (sacred)

மறைமுகமான புனிதமுடையவை (pseudo sacred)

முக்கியத்துவமடையவை (important)

மேற்கூறிய வரிசையிலேயே இவற்றின் முக்கியவத்தும் சமூகத்தினால் உணரப்படும். இவற்றிக்கிடையே உள்ள உறவுகளையம் கவனத்திற் கொள்ள வேண்டும். உதாரணமாக யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு சிலை இந்த அளவுகோலில் எங்கு மக்களாலும் அவர்களைப் பிரதிநிதித்துவபடுத்தம் ஊடகங்களாலும் கணிக்கப்படுகிறது என்பதைச் சரிவர அனுமானித்து செயல்படுவது முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கு அவசியமானது.

புனிதத்தன்மையுடையனவற்றிக்குரிய மரியாதையை அளித்தல்:

இந்த சமூகங்களின் அடிப்படைத் தூண்கள் சார்ந்த புனிதத்தனமையுடையனவாக கருதப்படுவன பற்றிய புரிதலும் அவற்றிக்குரிய அங்கீகாரமும் மரியாதையும் அளிக்கப்படும் பட்சத்திலேயே இவற்றினால் உருவாகும் சமூகநலன்சாராத அம்சங்கள் குறித்து உரையாட முடியும். முரண்பாடுகளைக் குறைக்கவும் வளர்க்காதிருக்கவும இயலுமானதாகும். சிலவற்றை சீர்படுத்தும் முறைகளைக் கண்டுகொள்ளவும் முடியும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வரலாற்றிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் அறிந்து கொண்டவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அங்கு தொன்மை வாய்ந்தவையும் பாதுகாக்கப்பட்டதும்
சேமடைந்ததுமான புராதன பொக்கிஷங்களும் பெருமைக்குரியதும் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதுமான அழியா நினைவு சின்னங்களும் ஏதோ ஒரு வகையில் ஒழுங்கமைக்கபட்டு பாதுகாக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவை சிதைப்படுத்தபடாமல் வேதனைப்படுத்தும் வழிகளைத் தவிர்த்து அவற்றை மாற்றி புனரமைக்கும் சிரமமான பணியினை மேற்கொள்ள முடியும்.



புனிதத்தன்மையுடையனவாக கருதுபவவை பரஸ்பரம் விட்டுக்கொடுக்க முனைதல்:

புனித தன்மையுடையனவாக கருதப்படும் விடயங்களில்; மிகுதியான உணர்வுரீதியான பற்றுணர்வும் ஈடுபாடும் காணப்படுவதினால் இதில் ஏற்படும் முரண்பாடான கருத்துநிலைகளில் விட்டுக்கொடுப்புகள் கடினமானவை. சமூக அடையாளங்களாக அனுசரிக்கப்படுபவை அசைக்க முடியாத நிலைப்பாட்டில் (fixed) அல்லது நிலைமைகளுக்கேற்ப மாற்றத்தை ஏற்றுக்கொள்க் கூடிய அசைக்கக் கூடிய நிலைப்பாட்டில் (fluid) அல்லது காலத்திற்கேற்ப இரண்டு நிலைகளிலும்( fixed
and fluid) காணப்படுமெனக் கருதப்படுகிறது. இப்பரிமாணம் ஒரு சமூகத்தினுடைய அடையாள பரிமாணம் (sphere of identity) என்றழைக்கப்படுகிறது. பொதுவாக இப்பரிமாணம் மக்களிடத்தில் நான்கு வகையான மனநிலைகளில் உள்ளதாக கருதப்படுகிறது

அடிப்படைவாத மனநிலை (fundamental mindset) – தமது நிலைப்பாடு மாற்றமுடியாத தன்மையுடையதாக கருதுவது. இம்மனநிலையில் புனிதத்தன்மையில் எத்தகைய மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மாற்றியமைக்கக்கூடிய மனநிலை (constructive mindset)-புனிதத்தன்மையுடையனவாக இருப்பினும் நிலைமைகளுக்கேற்ப எத்தகைய மாற்றங்களையும் அங்கீகரிக்கும் மனநிலை.

நிலையற்றது எனும் மனநிலை (anattist mindset) – இந்த பொருளுலகில் அனைத்தும் நிலையற்றவை என கருதுதல். அடையாளங்களின் நிலைப்பாடுகள் அனைத்தும் தற்காலிகமானவை நிலையற்றவை.

தொகுப்பு மனநிலை- (quantumnist mindset)- நிலையானதும் நிலையற்றதுமான தன்மைகள் இரண்டையும் தன்னகத்தே கொண்டுள்ளதாக கருதும் மனநிலை.

முரண்பாடுகளைத் சமூகமாக தீர்க்க விரும்புவர்கள் அவை குறித்துத் தம் நிலைப்பாடுகளில் அடிப்படைவாத மனநிலையிலிருப்பின் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை ஏற்றுக்கொள் முடியாதவர்களாக இருப்பார்கள். புனிதமான விடயங்களில் தீங்கிழைக்கப்படும்போது அது பாரிய அச்சுறுத்தலாக உணரப்படும். எனவே இவ்விடயங்கள் மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள்வதும் புனிதத்தன்மைக்கு அதற்குரிய மதிப்பும் அக்கறையும் வழங்கப்படுதலும் அவசியமானது. எமதும், மற்றவர்களினதும் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களை அடிப்படைவாத மனநிலையிலிருந்து ஏனைய மனநிலைகளுக்கு மாற்றக்கூடிய வகையில் உரையாடல்களையும் செயல்வடிவங்களையும் உறுதிப்படுத்துவதன் மூலமே சமாதான முயற்சிகளில் முன்னேற்றம் காண முடியும்.