வடக்கில் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் கோவிட்-19 நோயாளிகள் தடுப்பு நிலையங்கள்
மீள் பிரசுரம்
தம்பு கனகசபை LLM(Lon)
முன்னாள் சட்டவியற் பேராசிரியர், கொழும்பு பல்கலைக்கழகம்
இலங்கையில் தற்போது கோவிட்-19 தொற்றுள்ளவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 3,500 பேர் நாடெங்கிலுமுள்ள நோய்த் தடுப்பு நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 31 பேர் வெளிநாட்டுக்காரர். வடமாகாணத்தில் மட்டும் இப்படியான 32 நிலையங்கள் உள்ளன.
இக்கட்டுரை இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அதைச் சுருக்கித் தமிழில் இங்கு தரப்படுகிறது. – ஆசிரியர்
முதலாவது அறியப்பட்ட நோயாளியாக ஜனவரி 27, 2020 அன்று இலங்கைக்கு வந்த ஒரு சீன உல்லாசப் பயணி கருதப்படுகிறார். அன்றிலிருந்து இன்றுவரை, நாட்டில் 889 நோய்த் தொற்றுக்களும், 9 மரணங்களும் இடம்பெற்றுள்ளன என அரசாங்கம் கூறுகிறது. இவற்றில் பெரும்பாலானவர்கள் மேற்கு மாகாணத்தைக், குறிப்பாக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். வெலிசர கடற்படை முகாமில் மட்டும் 360 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதே வேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மொத்த தொற்று 24 என அறியப்படுகிறது.
வடக்கில் 7 இடங்களில் மொத்தம் 32 தடுப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, இராணுவத்தாற் கைப்பற்றப்பட்ட கல்லூரிகளிலும், பாடசாலைகளிலும் நிறுவப்பட்டுள்ளன. இங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் நோய்த்தொற்றுள்ளவர்களெனச் சந்தேகிக்கப்படும் பாதுகாப்புப் படையினர். இப்பாடசாலைகள் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அமைந்துள்ளன.
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 நோய்த் தடுப்பு நிலையங்கள்
- வடமராட்சி – 10
- முல்லைத்தீவு – 06
- வவுனியா – 05
- மன்னார் – 04
- சாவகச்சேரி – 03
- கிளிநொச்சி – 03
- மடு – 01
மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இந் நிலையங்கள் அமைக்கப்பட்டதன் பின்னால், கபட நோக்கம் உள்ளதாகவே எண்ண வேண்டியுள்ளது. இம் மாகாணத்தில் இயங்கும் ஆட்சியை முற்றாக உதாசீனம் செய்து இராணுவத்தின் உதவியுடன், சர்வாதிகார ஆட்சியை விஸ்தரித்து வரும் ஜனாதிபதி ராஜபக்சவின் இரகசிய திட்டங்களில் ஒன்றே இது. அரசாங்கத்தின் இப் பாரபட்சமான, ஈவிரக்கமற்ற, கொடுங்கோலாட்சி பல மனித உரிமை அமைப்புகளாலும் கண்டிக்கப்பட்டிருந்தாலும் அவற்றால் எந்தவித மாற்றங்களையும் கொண்டுவரமுடியவில்லை.
இந் நடவடிக்கைகள், ஐக்கியநாடுகள் சபையால் 1948 இல் உருவாக்கப்பட்ட இனப்படுகொலை வரைமுறைகளுக்குள் அடங்குமா என்பதுவே எம்மிடம் இப்போதுள்ள கேள்வி.
வடமாகாண சுகாதார அதிகாரிகளுடனோ அல்லது வேறெந்த உள்ளுர் அரசாங்க அதிகாரிகளுடனோ கலந்தாலோசிக்காது, பாடசாலைகளை அபகரித்து தமது எண்ணப்படி உபயோகிப்பது இராணுவமயப்படுத்துவதற்கு ஒப்பாகும். போர்க்குற்றவாளி எனக் குற்றம்சுமத்தப்பட்டிருக்கும் மேஜர் ஜெனெரல் ஷவேந்திர சில்வாவை கோவிட்-19 நிவாரணப்பணிகளுக்குப் பொறுப்பாக நியமித்திருப்பதும், வடக்கில் சில குறிப்பிட்ட பாடசல்லைகளைத் தேர்ந்தெடுத்து நோயாளிகளைத் தடுத்து வைத்திருப்பதுவும், அரசாங்கம் இனப்படுகொலை ஒன்றுக்குத் திட்டமிடுகிறது எனவே பார்க்கப்படவேண்டும்.
அரசாங்கத்தின் இந்நடவடிக்கைகளினால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் உடல், உள நோய்களுக்குள்ளாகி மரணமடைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்குக் காரணமாக அமையும் இராணுவமயமாக்கலும், நோயாளிகள் தடுப்பு நிலையங்களின் பிரசன்னமும் ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் (structural genocide) வரைவுகளுக்குள் அடங்கக்கூடியது. 2009 இலிருந்து, இராணுவத்தின் உதவியுடன் அரசு இதையேதான் செய்துகொண்டிருக்கிறது.
அத்தோடு நோய்க்கட்டுப்பாடு என்ற பெயரில் தற்போதைய ஆட்சியாளர், தமது அரசியல் இலாபங்களை விரிவுபடுத்தி வருவதும், இராணுவ ஆட்சியொன்றுக்கான தயாரிப்பில் இறங்கியிருப்பதும் கோவிட்-19 இன் இருண்ட மறுபக்கத்தைக் காட்டி நிற்கிறது.
ஆங்கிலத்தினாலான முழுமையான கட்டுரைக்குப் பின்வரும் தொடுப்பை அழுத்தவும்: https://sangam.org/the-dark-face-of-covid-19-in-sri-lanka/
Related posts:
- கோவிட்-19 | இழப்புக்களை மறைக்கும் இலங்கை அரசு
- இலங்கையில் ஒரு நாள் கோவிட்-19 தொற்று 865 – கொழும்பு, களுத்துறையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது!
- கிழக்கு மாகாணத்தில் பரவும் கோவிட் தொற்று – பேலியகொட மீன்சந்தை வர்த்தகர்கள் காரணம்
- இலங்கை | உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் சுகாதாரத்துறை முற்றாக முடக்கப்படும் ஆபத்துண்டு – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை!
