Obituariesஈழப் போராட்டத்தில் சில சாட்சியங்கள்

துயர் பகிர்வு: அருட்தந்தை (குட்டி) சேவியர்

1980 களின் நடுப்பகுதியில் மொன்றியால் நகரில் நான் அவரை முதன் முதலாகச் சந்தித்தேன். 1982 முதல் மொன்றியாலில் நிறுவப்பட்டிருந்த ‘கியூபெக் ஈழத்தமிழர் ஒன்றியத்தில்’ அவர் இணைந்தபோதே இச்சந்திப்பு ஏற்பட்டது. தென்னமெரிக்காவில் ஜெசூட் பாதிரிகள் அவர்களது மக்களின் விடுதலைக்காக உழைத்தது போல ஈழ விடுதலைக்கெனப் பல கிறிஸ்தவ, கத்தோலிக்க அருட்தந்தைகள் தமது உயிர்களைக் கொடுத்துவந்த காலமது.

தகுந்த கட்டிடமொன்று இல்லாது நண்பர்களின் அப்பார்ட்மெண்டுகளில் இயங்கி வந்த ஈழத்தமிழர் ஒன்றியத்திற்கு நகரமத்தியில், அட்வாட்டார் சதுக்கத்திற்கு வெகு அருகாமையில் ஒரு இடத்தை, அதுவும் வாடகை ஏதுமின்றிப் பெறுவதற்கு ஏதுவாக இருந்தவர் அருட்தந்தை சேவியர். புனித போல் அங்கிலிக்க தேவாலயத்தின் பாவனையற்றுக் கிடந்த நிலக்கீழறையை ‘ஒன்றியத்தின்’ அலுவலகமாக மாற்றி அகதிகளாக வரும் தமிழர்க்குத் தொண்டாற்ற காரணமாக இருந்தவர் அருட்தந்தை சேவியர் அவர்கள்.

இடத்தைப் பரோபகாரமாகத் தந்த தேவாலயத்துக்கு நாங்கள் வேறு வகைகளில் தொண்டுகள் செய்தும், நிதி சேகரித்துக் கொடுத்தும் கடன் செலுத்தினாலும் அருட் தந்தை சேவியரின் தொடர்பினால் ‘ஒன்றியம்’ அடைந்த நன்மைகள் பல. அகதிகளுக்கு வரவேற்பளித்து தங்குமிடங்களைத் தேடிக்கொடுப்பது முதல் அவர்களைத் தொண்டு நிறுவனங்களுடன் இணைத்து வாழ்வாதாரங்களைப் பெற்றுக்கொடுப்பது வரை; வழக்கறிஞர்களது சேவைகளைப் பெற்றுக்கொடுப்பது முதல் அகதிக்கோரிக்கை வழக்குகளைத் தயாரிப்பது, மொழிபெயர்ப்பு சேவைகளைச் செய்து கொடுப்பது வரை ‘ஒன்றியமே’ எல்லாம். அங்கத்தவர்களின் மாதம் $10.00 அன்பளிப்புகளைக் கொண்டு ஒருவரைச் சம்பளத்திற்கு அமர்த்தி வாசகசாலை ஒன்றை வாரம் ஏழு நாட்களும் நடத்தினோம். நாட்டிலிருந்தும் சென்னையிலிருந்தும் கிடைக்கும் செய்திகளைப் பரிமாறும் தொலைபேசிச் செய்திச் சேவை ஒன்றையும் நடத்தினோம். அருட் தந்தை சேவியர் மூலம் மொன்றியால் கசெட் போன்ற பத்திரிகைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஈழப் போராட்டத்தை கனடிய பெரும் சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் பணியையும் ‘ஒன்றியம்’ செய்தது. வருமானம் குறைந்த தமிழ் அகதிக் குடும்பங்களுக்கு அருட் தந்தை சேவியர் தனது மதஸ்தாபனத் தொடர்புகளின் உதவியுடன் நத்தார் காலத்தில் உணவுப் பொதிகளைப் பெற்றுக்கொடுத்தார்.

இக்காலத்தில் ‘ஒன்றியத்தின்’ தலைவராக திரு சிவானுவும் , செயலாளராக திரு பொன்னுச்சாமியும் பணியாற்றினார்கள். பின்னர் மறைந்த திரு சபா நடேசன் தலைவராக இருந்தார். 1984, 1985 ஆம் ஆண்டுகளில் பல கலாச்சார நிகழ்வுகளையும் ஒன்றியம் நடத்தியது. இதற்கு அரசியல்வாதிகளை அழைத்து தமிழ்ச் சமூகத்தின் பலத்தை அவர்களுக்குக் காட்டி அதன் மூலம் தமிழ் அகதிகளுக்கு அப்போது இல்லாதிருந்த மருத்துவ அட்டைகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் அருட் தந்தை சேவியர் பெரும்பங்காற்றியிருந்தார். ஒட்டாவா தலை நகரில் அரசியல்வாதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதில் மத ஸ்தாபனங்களின் பங்கு முக்கியமாக இருந்தது. தலைநகரில் எமது போராட்டத்திற்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட பல ஊர்வலங்களை ஒழுங்கு செய்வதில் அருட்தந்தை சேவியரின் பங்கு முக்கியமாக இருந்தது..

1987 இல் நான் ரொறோண்டோவுக்கு இடம்பெயர்ந்த பின்னர் அவருக்கும் எனக்குமிடையேயான நேறடித் தொடர்பு அறுபட்டுப் போனது. ஆங்காங்கே நடைபெறும் பொது நிகழ்வுகளில் கண்டாலுண்டு. அவர் எப்போது ரொறோண்டோவுக்குக் குடிபெயர்ந்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இங்கு அரச உதவியுடன் அகதிகளைக் குடியமர்த்தும் சேவைகளையும், உளவள சேவைகளையும் செய்துவந்த தமிழ் ஈழம் சொசையெட்டி ஒஃப் கனடா என்ற அமைப்பில் பணிபுரிந்ததாகக் கேள்வி.

சுமார் 40 வருடங்களுக்கு மேல் கனடாவில் தமிழர்களுக்குப் பணிபுரிந்துவிட்டு ஏப்றில் 02, 2025 அன்று தனது 96 ஆவது வயதில் அவர் இவ்வுலகை விட்டுச் சென்றிருக்கிறார். அவரது பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், தமிழீழ மக்கள் அனைவருக்கும் மறுமொழி சார்பில் அஞ்சலிகள்!