Arts & Entertainment

தமிழ்த் திரை | பெண்களை இழிவுபடுத்திய மன்சூர் அலிகான் – உயரப் பறக்கும் போர்க்கொடி

“லியோ படத்தில் நடிகை திரிஷாவுடன் தனக்கு ஒரு ‘வன்புணர்வுக்’ காட்சியில் நடிக்க சந்தர்ப்பம் கிடைக்காததது வருத்தம் தருவதாக் இருக்கிறது” என வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருந்தமை பலத்த எதிர்ப்பைக் கிளறிவிட்டிருக்கிறது.

“பழைய தலிழ்ப்படங்களில் நடிகைகள் குஷ்பு, ரோஜா போன்றோருடன் வன்புணர்வுக் காட்சிகளில் நடிக்கக் கிடைத்தமையைப் போல லியோ படத்திலும் திரிஷாவுடன் அப்படியான சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்” என சனிக்கிழமை (நவம்பர் 18) அன்று மன்சூர் அலிகான் ஊடகவியலாளர் மாநாடொன்றில் பேசும்போது குறிப்பிட்டிருந்தார். இக்கருத்துக்கள் தொடர்பாக லியோ இல்யக்குனர் லோகேஷ் கனகராஜ், திரிஷா, குஷ்பு, சின்மயீ போன்ற பல துறைசார் பிரபலங்கள் தமது கண்டனங்களை சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்த் திரையில் மட்டுமல்ல பெரும்பாலான இந்திய துணைக்கண்டத்தில் வெளியாகும் படங்களில் கலாச்சார முலாமைப் பூசி பெண்களை இழிவுபடுத்தும் முனைப்புகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. இவற்றுக்கு நடிகர்களை விட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களுமே பெரும் பொறுப்பை ஏற்கவேண்டும். குறிப்பாக லியோ போன்ற படங்களில் மித மிஞ்சிய வன்முறையையும் புகை பிடிப்பது போன்ற தீய பழக்கங்களையும் வருவாய்க்காகத் திணித்து ஏப்பம் விடும் இயக்குனர் கனகராஜ் போன்றவர்கள் இவ்விடயத்தில் திடீரென அறிவுரைகூறப் புறப்பட்டிருப்பது முட்டாள்தனம்.

திராவிட, தமிழ்த் தேசியக் காவலர்களாகக் காட்டப்பட்ட இயக்குனர் சேரன் போன்றோரின் படங்களில் கூட சமையற்காரி பாத்திரம் ஒரு கரிநிறமானவரான ‘காளியம்மா’ வுக்கும் தோட்டக்காரன் பாத்திரம் ‘முனியாண்டிக்கும்’ எஜமானி பாத்திரம் தங்கம் போல் மின்னும் ‘பானுவுக்கோ’ அல்லது ‘சாருவுக்கோ’ தான் வழங்கப்பட்டிருக்கும். இது குறித்த கருத்துக்கள் எதுவும் சமூகப் போராளிகளால் முன்னெடுக்கப்படுவது குறைவு.

ஒரு காலத்தில் குடும்பப் பெண் கணவரை ‘ஸுவாமி’ என்றழைத்தது பின்னர் ‘என்னங்க (இலங்கையில் ‘இஞ்சேருங்கோ’)’ ஆகி இப்போ ‘ஏண்டா’ என்றளவுக்கு பரிணாம மாற்றம் நடைபெற்றிருந்தாலும் பெண்ணை (மட்டும்) ‘கவர்ச்சிப் பொருளாகக்’ காட்டுவதில் நூறாண்டு காலமாக எந்த பரிணாம மாற்றமும் ஏற்படவில்லை. இவ்விடயத்தில் மன்சூர் அலிகான் போன் (றவற்றை) றோரை விரும்பினால் கூட ஒருபோதும் ‘கவர்ச்சிப் பொருளாக’ மாற்றவே முடியாது என்பது இன்னுமொரு விடயம்.

மன்சூர் அலிகான் போன்ற மேலும் பலர் தமது கருத்துக்களைப் பொதுவெளியில் தெரிவிக்காது பணம் மற்றும் அரசியல் அதிகாரங்களைக் கொண்டு காரியங்களைச் சாதித்துவிட்டுப் போவதும் அதற்கு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் துணைபோவதும் இந்தியத் திரையுலகில் சாதாரணமான நிகழ்வுகள். திரைப்படம் வெற்றிபெறவேண்டுமென்ற காரணங்களுக்காக மட்டுமே மிதமிஞ்சிய வன்முறை, படுக்கையறை, அரை நிர்வாணக்காட்சிகளைப் புகுத்தும் கனகராஜ் போன்ற இயக்குனர்களுக்கு அவசியமானவை. ரசிக கோடிகள் அதை விரும்புகிறார்களோ என்னவோ அப்போதையை விற்றுப் பணமாக்கிவிட நடிகர்கள் உட்பட அனைவருமே முனைகிறார்கள்.

மன்சூர் அலிகான் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்படவேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவற்றை முன்வைப்பவர்கள் போதிசத்துவர்களாக இல்லாமலிருப்பது வருந்தவேண்டிய விடயம்.

திரிஷாவுக்கு ஆழ்ந்த அனுதாபம்