ColumnsJekhan Aruliah

‘ட்றாகன்’ படகுகள் யாழ்ப்பாணம் வருகின்றன….!

வளரும் வடக்கு – 03

ஜெகன் அருளையா

{இக் கட்டுரை லங்கா பிசினஸ் ஒன்லைன் இணையத்தளத்தில் ஆங்கிலத்தில் பிரசுரமாகியிருந்தது. ஆசிரியருடன் அனுமதியுடன் இங்கு தமிழில் மீண்டும் பிரசுரமாகிறது. தமிழாக்கம் சிவதாசன்)

ஜெகன் அருளையா
ஜெகன்அருளையா

வட மாகாணத்தில் விளையாட்டு மற்றும் பலதரப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் ‘நோர்த்விண்ட் புறொஜெக்ட்ஸ்’ என்னும் குழு யாழ்ப்பாணத்தில் முதன முதலாக ‘ட்றாகன்’ படகுப் போட்டியொன்றை (dragon boat racing) அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படை, வடமாகாணசபை கல்வி, கலாச்சார, விளையாட்டு மற்றும் இளையோர் விவகாரங்களுக்கான அமைச்சு, யாழ் மாவட்ட மீனவர் கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளனம் ஆகியவற்றின் ஆதரவோடு ட்றகன் படகுப் போட்டிகள், ஓடப் பயிற்சி (canoeing), பாதுகாப்புக்கான நீச்சல் (Swim for Safety) ஆகிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இ-வ: சுகந்தன் சண்முகநாதன் (நோர்த்விண்ட்) றெயர் அட்மிரல் பிரியந்தா பெரேரா, ஜெகன் அருளையா (நோர்த்விண்ட்), கப்டன் அருணா வீரசிங்க

இப் போட்டிகளில் பங்கு கொள்பவர்களைப் பயிற்றுவிப்பதற்காக, ஓடங்களையும் அவற்றின் பயிற்சியாளர்களையும், சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின்கீழ், இலங்கை கடற்படையின் வடபகுதிக்கான கட்டளைத் தளபதி றெயர் அட்மிரல் பிரியந்தா பெரேரா தருவித்திருக்கிறார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த, பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி, ஆகஸ்ட் 1 முதல் 14ம் திகதிவரை கடற்படையினால் வழங்கப்பட்டிருந்தது. இப் பயிற்சியில் கலந்துகொள்பவர்களைக் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக காரைநகரில் அமைந்திருக்கும் ஹம்மேனியேல் கோட்டையில் ‘நெருக்கக் குமிழ் ‘ (bio bubble) உருவாக்கப்பட்டிருந்தது. இப் பயிற்சியில் சம்பந்தப்பட்ட கடற்படைப் பயிற்றுனர்களும், யாழ்ப்பாணப் பயிற்சியாளர்களும் தொற்றுப் பரிசோதனைகளைச் செய்துகொண்டதன் பின்னர் இரண்டு வாரங்கள் இக் குமிழில் (கோட்டையில்) தங்கியிருந்து, பரஸ்பரம் உறவாடுவதன் மூலம் தங்களுக்குள் நோய்த்தொற்று ஏற்படவில்லை எனபதை உறுதிசெய்துகொண்டனர். இவர்களுக்கான உணவு, உறைவிடம் ஆகியவற்றை காரைநகர் கடற்படை எலாரா கப்பல் கட்டுப்பாட்டு அதிகாரி, கப்டன் அருணா வீரசிங்க ஒழுங்கு செய்திருந்தார்.

உடற்பயிற்சிக் கல்விப் பணிப்பாளர் திரு ராஜசீலனின் உதவியுடன், வடமாகாணசபையின் கல்வி, விளையாட்டு, கலாச்சார அமைச்சின் செயலாளர் திரு எல். இளங்கோவன், யாழ்ப்பாணத்திலுள்ள ஏழு முன்னணிப் பாடசாலைகளிலுள்ள மாணவர்களை இப் போட்டிக்காகப் பயிற்றுவிப்பதற்கு ஒழுங்குகளைச் செய்து வருகிறார். இப் பாடசாலைகளைச் சேர்ந்த ஐந்து உடற்பயிற்சி ஆசிரியர்கள் இந்த இரண்டுவாரப் பயிற்சியில் கலந்துகொண்டிருந்தநர். யாழ் மீனவர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் திரு அன்னலிங்கம் அன்னராசா, ஆறு மீனவ சங்கங்களிலிருந்து போட்டியாளர்களைக் கொண்டுவந்து பயிற்றுவிக்க முன்வந்துள்ளார். அவரது சார்பிலும் ஒருவர் முகாமில் நடைபெற்ற இருவாரப் பயிற்சியில் கலந்துகொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்துக்கு வந்திறங்கிய ‘ட்றாகன்’ படகு

இதேவேளை, கோவிட்-19 தொற்று நிலைமை சாதகமாக இருந்து, சுகாதார அதிகாரிகள் அனுமதித்தால் மட்டுமே, மீனவர் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் கடற்படை முகாமில் பயிற்சிகளை மேற்கொள்ளத் தேவையான ட்றாகன் படகுகள், ஓடங்கள், தெப்பங்கள் (காயாக்) ஆகியன, 40 அடி நீளமான கொள்கலனொன்றில் கடற்படையினால் தருவிக்கப்பட்டிருந்தன. அதே வேளை பயிற்சிக்குத் தேவையான இரு நீச்சல் பயிற்றுனர்கள், ஒரு வைத்தியர் ஆகியோரும் தென்னிலங்கையிலிருந்து கடற்படையினால் தருவிக்கப்பட்டிருந்தனர்.

சான்றிதழ்

ஆகஸ்ட் 14 நடந்து முடிந்த பயிற்சியின் பின்னர், பயிற்சி முடித்தவர்களுக்கு கோட்டையில் நடைபெற்ற வைபமொன்றில் வைத்து பயிற்சிச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்ததும், ஏழு பாடசாலைகள் மற்றும் ஆறு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு பயிற்றுனர்கள் பயிற்சிகளை வழங்குவார்கள். பாட்சாலைகளில் 14 வயதுக்குக் குறைவானவர்களது குழுக்களும், மீனவர்களிடையே 24 வயதுக்குக் குறைவானவர்களது குழுக்களும் பயிற்சிகளைப் பெறுவார்கள். முதலாவது போட்டிக்கான இப் பயிற்சி 6 வாரங்கள் வரை நீடிக்கும். இதைத் தொடர்ந்து இப் பயிற்சிகள் மாகாண ரீதியாக விஸ்தரிக்கப்பட்டு தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்குபெற வழிசெய்யப்படும்.

பங்குபற்றுவோரின் உற்சாகமான பங்களிப்புடன் இத்திட்டம் மிகத் துரிதமாக நிறைவேறி வருவது குறித்து, நோர்த்விண்ட் திட்டங்கள் அமைப்பைச் சேந்த திரு ஜெகன் அருளையா மற்றும் திரு சுகந்தன் சண்முகநாதன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

“இந் நிகழ்வை ஒரு வருடாந்த விழாவாக நோர்த்விண்ட் திட்டங்கள் அமைப்பு நடைமுறைப்படுத்தும். இவ்விழாவில் பங்காளிகளாக, சிறீலங்கா படகுச் சங்கம் (Yachting Association of Sri Lanka), ஓடம் மற்றும் தெப்பப் பாவனையாளர்களின் தேசிய சங்கம் (National Association of Canoeing and Kayaking) மற்றும் சிறீலங்கா உயிர் பாதுகாப்பு அமைப்பு (Sri Lanka Life Saving) ஆகிய அமைப்புக்களை இணைத்துக்கொள்ள நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பல விளையாட்டுச் சங்கங்கள், விளையாட்டு அமைச்சு, சுற்றுலா அமைச்சு, தேசிய ஒலிம்பிக் குழு ஆகியவற்றுக்கு விளையாட்டு நிர்வாகியாகப் பணிபுரிந்துவரும் திரு சுபேர்ம் டி சில்வா, நாடுதழுவிய ரீதியில் விளையாட்டுச் சுற்றுலாவை ஊக்கப்படுத்துவதற்காக நோர்த்விண்ட் திட்டத்துடன் பணிபுரிய இணங்கியுள்ளமை குறித்து நாம் பெருமையடைகிறோம்” என நோர்த்விண்ட் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினருடன் யாழ்ப்பாணப் பயிற்றுவிப்பாளர்கள்

( — இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் பிரித்தானியாவிற்குத் தனது பெற்றோருடன் இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தஙகளுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக இலஙகையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனஙகளில் பணியாற்றியவர். 2015 இல் ஜெகன் யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்து வடக்கின் சமூக, பொருளாதார அபிவிருத்தி நிலைமைகள் பற்றி எழுதி வருகிறார். jekhan@btinternet.com )