Sri Lanka

‘சனல் 4 புலம் பெயர் தமிழருக்கு ஆதரவானது’ – நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச

“பிரித்தானிய தொலைக்காட்சி ‘சனல் 4’ ஒரு புலம் பெயர் தமிழரின் ஊதுகுழலாகச் செயற்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்புகள் தொடர்பாக அது வெளியிட்ட தகவல்களில் எனக்கு நம்பிக்கை இல்லையெனினும் ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமெனின் இலங்கை அதற்கு எப்போதுமே தயாராக இருக்கிறது” என நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.

“ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வுகளுக்கு முன்னால் இலங்கை அரசு, இராணுவம் பற்றிய பிரச்சினைகள் பற்றிய காணொளிகளை புலம் பெயர் தமிழர்கள் வெளியிடுவது வழக்கமானதே. புலம் பெயர் தமிழருக்கு ஆதரவாக இயங்கும் ‘சனல் 4’ குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமென்பதற்காகப் பாடுபடுவதில்லை” என நீதி அமைச்சின் வளாகத்தில் வைத்து ஊடகவியலாளருக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் ராஜபக்ச தெரிவித்தார்.

இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றிப் பேசும்போது “ஐஸிஸ்’ இலங்கையில் இளைஞர்களைப் பயங்கரவாதத்துக்குப் பயிற்சியளிக்கிறது மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு 29 மாதங்களுக்கு முன்னரே நான் பாராளுமன்றத்தில் பேசியிருந்தேன். அப்போது இன ஒற்றுமையைக் குலைக்க நான் முற்படுகிறேன் எனக் குற்றஞ்சாட்டப்பட்டேன். நான் சொன்ன விடயங்கள் எவர் காதுகளிலும் விழவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.