இது நீதிபதிகளின் காலம்!
வடிவேலர் உலா
கிருஷ்ணானந்தா
“என்ன வடிவேலர், காலங்காலத்தால பொடி நடையில வாறீங்கள். சைக்கிளுக்கு என்ன நடந்தது? சைக்கிள் காரர் பறிச்சிட்டாங்களோ?”
“உனக்கடா கிரிசு அவங்களைக் கடிக்காம விடியாது. சுமந்திரனிட்ட காசு வாங்கீட்ட போல” வடிவேலர் இன்னும் கள்ளுக் கொட்டில் பக்கம் போகவில்லை என்று தெரிந்தது. அமைதியாக குரலை அடக்கிக்கொண்டு சொன்னார்.
“இல்ல அண்ணை வாற வருஷம் மாகாணசபைத் தேர்தல்கள் நடக்கும் எண்டு அரசாங்கம் அறிவித்துவிட்டுது. அதனால உங்க கனபேர் அறிக்கை விடத் துங்கீட்டினம். ஒரு ஆள் லண்டனில போய் அழுது குழறியிருக்குது”
“தெரியும் ஆரைச் சொல்லுறயெண்டு. அது சரி மாகாண சபைத் தேர்தல் நடக்குமெண்டு நீ நம்புறியோடா?”
” 9 மாகாணங்களில மேல் மாகாணத்தைத் தவிர மற்றதெல்லாம் ஒடுக்கப்பட்ட மாகாணங்கள் தானே. இவங்கள் எல்லாம் ஒற்றுமையாக அழுத்தம் கொடுத்தால் தேர்தலை வைக்கிறதுக்கு சந்தர்ப்பம் இருக்கு. ஆனால் இப்ப இருக்கிற அரசியலமைப்பின் பிரகாரம் இதனால அதிக பலனடையப் போற மாகாணம் வடக்கு எண்டு சிங்கள தேசீயம் நம்புது. தெற்கில சிங்களவரின்ர நலன்களைப் பிரதிபலிக்கிற ஜே.வி.பி., என்.பி.பி. எண்ட முற்போக்கு ஜனநாயக முகமூடியைப் போட்டுக்கொண்டு வடக்கு கிழக்குக்குள்ள ஊடுருவ முயற்சித்து வெற்றியும் கண்டு வருகிறாங்கள். அவங்களின்ர அமைச்சர் சந்திரசேகரன் கிட்டத்தட்ட வடக்கில ‘றெக்கி’ பாக்கிற ஒரு ஆள் தான். கள நிலவரம் என்.பி.பி. க்கு சாதகமாக வருகிறதெண்டு தெரிஞ்சா தேர்தலை வைப்பாங்கள். இல்ல சுமந்திரன்ர பக்கம் போகுமெண்டா அரசியலமைப்பை மாத்தி மாகாணசபையைப் பலவீனமாக்கினப் பிறகுதான் தேர்தல் வைப்பாங்கள்”
“என்ன இதுக்குள்ள சுமந்திரனை இழுக்கிற. அந்தாளில்லாம உனக்கு விடியாது போல..”
“அண்ணை, ஒழுங்கா இருந்த மாகாணசபையை அந்தப் பட்டை விக்கியர் வந்து நாசமாக்கிப் போட்டேர். சம்பந்தர் ஐயா வாழ்க்கையில செய்த மாபெரும் தவறு அது. இப்ப இருக்கிற ஆக்களில அரசியலமைப்புச் சட்டங்களைக் கரைச்சுக் குடிச்ச ஒரே ஆள் சுமந்திரன் தான். அது மட்டுமில்லாம மற்ற 8 மாகாண சபையளையும் ஒண்டாக் கொண்டுவந்து மத்திய அரசோட சண்டை பிடிக்கக்கூடின ஆளும் அவர் மட்டும் தான். வட மாகாண சபைக்கு அந்தாள் முதலமைச்சராகினா கதை வேற”
“அப்ப நீதிபதி நெடுஞ்செழியன்?”
“பாவம் அந்தாள். இப்பிடித்தான் விக்கியரும் புலம் பெயர்ந்த நாடுகளுக்குப் போய் தன்னை வித்துக் காசாக்கிக் கொண்டு வந்தது. அவரின்ர சொந்தக்காரர், அவர்தான் அவுஸ்திரேலியாவில இருக்கிறவரை மனேச்சராப் போட்டு மனிசன் காசைச் சேர்த்துது. அவர் என்ன சைசில வீபூதிப் பட்டை, குங்குமப் பொட்டு வைக்கோணும் எண்டது வரைக்கும் புலம்பெயர்ந்தவங்களின்ர கட்டளையில தான் நடந்தது. இப்ப பாத்தா நெடுஞ்செழியனும் லண்டனில அழுது கொட்டுது. அந்தாளையும் இந்த புலன்பெயர்ந்தவங்கள் கெடுத்துப் போடுவாங்கள். பப்பாவில ஏத்திட்டாங்கள். விழுகிறதெண்டாலும் மேலால மட்டும் தான் விழுவியள், கீழ விழவே மாட்டியள் எண்டு வகுப்பெடுத்திருப்பாங்கள். பாவம் அந்தாள்”
“ஏன் அந்தாளில உனக்கு இந்தக் கடுப்பு. அந்தாள் இறங்கினா சுமந்திரன் அடிபட்டுப்போவேர் எண்டதனாலோ?. அந்தாள் தமிழ் ஆக்களுக்குச் சாதகமா எத்தினை தீர்ப்புகளைச் செய்திருக்குது. விக்கியரை விட அந்தாளுக்குச் சட்டம் தெரியும்”
“அண்ணை நல்ல காலம் நீங்க வெளிநாட்டுப் பிராணியாக இருக்கேல்லை. இருந்திருந்தா நீங்கதான் நெடுஞ்செழியனை மனேஜ் பண்ணியிருப்பீங்க. காசு கொட்டோ கொட்டெண்டு கொட்டியிருக்கும்”
“ஏன் இப்ப மட்டும் எனக்கென்ன குறைவே. அதுசரி அந்தாளில அப்பிடி என்ன குறை?”
“அண்ணை, நீதிதேவதை ஏன் கண்களைத் துணியால கட்டி வைச்சிருக்கு தெரியுமே?”
“தராசு எந்தப்பக்கம் சாயுது எண்டதைப் பார்க்கக்கூடாது எண்டிறதுக்காக”
“இல்லை அண்ணை. வாதியையும் பிரதிவாதியையும் பார்க்கிறதினால அதன் தீர்ப்பில் சாய்வு இருந்திடக்கூடாது என்பதற்காக”
“சரி அதை விடு. என்ர தமிழ் வாத்திக்கு அது தெரியாது போல. அதுக்கும் நெடுஞ்செழியனுக்கும் என்ன சம்பந்தம்?”
“அண்ண, எந்த நீதிபதியும் சட்டத்தின் பிரகாரம் தான் தீர்ப்பளிக்க வேணும். சமூகம், இனம், சுற்றுச் சூழல் ஆகியவற்றுக்கு நன்மை பயக்க வேணுமெண்ட காரணத்துக்காக தீர்ப்பளிக்க கூடாது. சட்டம் பிழையானதாக இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவன் அதை மீறவில்லை எண்டால் நீதிபதி அதன்படிதான் தீர்ப்பளிக்க வேணும். நீதிபதி இளஞ்செழியனின்ர பல தீர்ப்புகள் சமூகத்தின் நன்மையை முன்வைத்து வழங்கப்பட்டவை. அதனால் சமூகத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. இப்போ அவர் தேர்தலில நிக்கப் போறார் எண்டால்… இப்போ அவர் இலண்டனில வைச்சு அரசாங்கம் தன்னைப் பழிவாங்கிவிட்டுது எண்டு சொல்லுறார் எண்டால்… கூட்டிக் கழிச்சுப் பாருங்கோண்ணை. சோழியன் குடுமி…”
“நீயும் அப்பிடித்தான். சுமந்திரன் தான் சரியான ஆளெண்டு நீ ஏற்கெனவே முடிவெடுத்திட்ட. அதனால தான் நீதிபதி நெடுஞ்செழியன் மேல உனக்கு இந்தக் கடுப்பு”
“அண்ண நீங்க லோயராப் படிச்சிருக்க வேண்டியவர்”
“கள்ளுக் கொட்டிலிலயும் எல்லாரும் இப்பிடித்தான் சொல்லுவினம். சரி அதை விடு. அப்ப நெடுஞ்செழியன் எலெக்ஷன் கேக்கக்கூடாது எண்டுறியோ?”
“ஞாபகமிருக்கே அந்த குருந்தூர் மலைக் கேசில நீதி வழங்க முயற்சிச்ச தமிழ் நீதிபதி அனியாயம் நடக்குது எண்டு தெரிஞ்ச உடனே நாட்டை விட்டு ஓடி விட்டுது. அதுக்குப் பிறகு அந்தாள் மூச்சுப் பேச்சில்லை. அரசையும் குறை சொல்லேல்ல. எலக்ஷனிலையும் நிக்கேல்ல. தானும் தன்ரபாடெண்டும் இருக்குது. அது தான் ஒரு நீதிபதிக்கு அழகு. நீதிபதி நெடுஞ்செழியன் ஏற்கெனவே வாயைத் திறந்து ஒப்பாரி வைச்சதோட அவரின்ர மரியாதையை இழந்து அரசியல்வாதியின்ர ஸ்தானத்தை எட்டிவிட்டேர். இனி ‘இளஞ்செழியனாக’ அவர் தேர்தலில நிக்கலாம். அதுக்குரிய தகைமையை அவர் பெற்றிட்டேர். ஆமை பிடிப்பார் மல்லாத்துவார். விளங்கும் தானே அண்ணே?”
“அது சரி சுமந்திரனுக்கு நீ தான் மனேச்சராம்….”
“அடி செருப்பாலை…”
