Sri LankaTechnology & Science

Yarl IT Hub நடத்தும் வருடாந்த திறமைப் போட்டி (Yarl Geek Challenge)


ஜெகன் அருளையா / Lanka Business Online

ஜெகன் அருளையா
ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து, தனது இரண்டாவது வயதிலேயே பிரித்தானியாவுக்குத் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்த அவர் 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர். இரண்டு தசாப்தங்களாக தகவற்தொழில்நுட்பத்திலும், அதில் பாதிக் காலம் பிரித்தானிய நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரிக்கும் பணியில், கொழும்பிலும், கூர்கவோன் (இந்தியா) விலும் தங்கியிருந்தார். 2015 இல் அவர் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்து அங்கு சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். லங்கா பிசினஸ் ஒன்லைன் இணையத்திற்கு ஆங்கிலத்தில் எழுதிய இக் கட்டுரை அவரின் அனுமதி பெற்று ‘மறுமொழி’ இணைய சஞ்சிகையில் தமிழில் பிரசுரமாகிறது. மொழி மாற்றத்தில், மொழி பிசகினாலும் கருத்துப் பிசகு நேராமல் இருக்கவேண்டுமென முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது – ஆசிரியர்


யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கிவரும் Yarl IT Hub, தனது வருடாந்த Yarl Geek Challenge (YGC) போட்டியை, கோவிட்-19 காரணமாக இந்த வருடம் தொலைத் தொடர்பு சாதனங்களுடன் சற்று வித்தியாசமாக நடத்துகிறார்கள்.

Yarl Geek Challenge (YGC)

கணனி மற்றும் விஞ்ஞான விடயங்களில் மரபுக்கு மாறாகச் சிந்திக்கும், வளர்ந்துவரும் தலைமுறையை Geek என அழைக்கும் வழக்கம் மேற்கில் ஆரம்பித்தது. அதி வேகமாகச் செயற்படும் மூளைகள் சிலவேளைகளில் அற்புதமான கண்டுபிடிப்புக்களையும் நிகழ்த்தி விடுகின்றன. இலங்கையின் வடக்கில் வாழும் இப்படியான இளையவர்களை இனம் கண்டு அவர்களுள் பொதிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதே Yarl Geek Challenge (YGC).

Yarl Geek Challenge (YGC), Yarl IT Hub (YIT) எனும் ஒரு அமைப்பின் உருவாக்கம்

போருக்குப் பின்னான வடக்கை ஒரு ‘சிலிக்கன் வலி’ (Silicon Valley) ஆக மாற்ற வேண்டும் எனும் வேட்கையோடு உலகெங்கும் வாழும் தகவற் தொழில்நுட்பத் துறை நிபுணர்களால் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் உருவாக்கப்பட்டதே Yarl IT Hub. பல்லாயிரக் கணக்கான அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டும் மேலும் பலர் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலைமையில் விடுவிக்கப்பட்டும் இருந்த நிலையில் YGC கருக்கொண்டது. போர் அனைத்து சமூகங்களிலிலும் உயிர்களைப் பறித்தும் அழிவுகளை நிகழ்த்தியும் இருந்தது.

இந்த வேளையில்தான் YIT தன் எண்ணத் தீயில் எண்ணையை ஊற்றியது. நாட்டிலுள்ள இளையவர்களின் கற்பனா வளங்களுக்கு பயிற்சிகளைக் கொடுத்து, புதிய தொழில்நுட்பப் பண்டங்களையும், சேவைகளையும் உருவாக்குவதில் அவர்களின் நாட்டங்களைக் குவியச் செய்யும் முயற்சிகளில் அது இறங்கியது. போரினால் சிதைக்கப்பட்ட பொருளாதாரத்தையும், சமூகத்தையும் மீட்டெடுக்க தன்னால் முடியும் என அது நம்பியது.

இந்த வருடம் YGC இற்கு 9 வயது. இதற்கு முந்திய வருடங்களில் இந் நிகழ்வு யாழ்ப்பாண நகரில் 3 நாட்கள் நடைபெற்று வந்தது. இந்த தடவை கோவிட்-19 காரணமாக இணைய வழியாக (ZOOM) நடைபெறவிருக்கிறது. மூன்று நிகழ்வுப் போட்டிகளுடன் (3 phases) கோலாகலமான இறுதிநாள் நிகழ்வுடன் இந்த வருடத்துக்கான நிகழ்வு நடைபெறும். உங்களிடம் புதிய பண்டம் (product), அல்லது சேவை (service), செயலி (app), IoT, என ஏதாவது ஒன்றிற்கான திட்டம் இருந்தால், இதுவே உங்களது சரியான மேடை.பங்குபற்றுவது எப்படி?

YGC 2020 போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் முதலில் இணையவழியாக உங்கள் விண்ணப்பத்தை, செப்டம்பர் 6ம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும். அதற்கான விண்ணப்பத்தைப் பெற இங்கே அழுத்தவும்.

PHASE 1: செப்டம்பர் 12 & 13 ஆம் திகதிகளில் நடைபெறும் இணையவழித் துவக்க முகாமில் உங்கள் கருத்துருவாக்கத்தை எப்படிக் கவர்ச்சிகரமாகவும் வலிந்தீர்க்கக்கூடியதாகவும் கட்டமைப்பது, காட்சிப்படுத்துவது (presentation), எனக் காட்டிக் கொடுக்கப்படும். அத்தோடு வியாபார ரீதியாகவும், நிதி ரீதியாகவும் மாதிரிகளுடன் (modelling) செயற்பாட்டு விளக்கங்கள் கொடுக்கப்படும். இதன் பிறகு PHASE 2 இற்குப் போவதற்கு முதல் இரண்டு வாரங்கள் உங்கள் திட்டத்தில் செயற்பட உங்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

PHASE 2: அக்டோபர் 3 & 4ம் திகதிகளில் (வார விடுமுறை) உலகம் பூராவுமிருந்து நிபுணர்கள் தமது நேரத்தையும், திறமைகளையும் அர்ப்பணித்து, போட்டியாளர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குவர். தொழில்நுட்பம், பண்ட வடிவமைப்பு (product design), சந்தப்படுத்தல், நிதிவளம் ஆகிய துறைகளில் இவர்களது உதவிகள் இருக்கும். அடுத்த இரு வாரங்களில் Phase 3 நிகழ்வு வரும் வரை இவ்வழிகாட்டல்கள் மீது போட்டியாளர்கள் தமது கவனத்தைச் செலுத்தலாம்.

PHASE 3: அக்டோபர் 17 & 18 ம் திகதிகளில் நடைபெறும் நிகழ்வில் போட்டியாளர்கள் தமது பண்டங்களை அல்லது திட்டங்களை அல்லது கருத்துருவாக்கங்களை நடுவர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் முன்னிலையில் காட்சிப் படுத்துவார்கள்.

GRAND FINALE: மாபெரும் இறுதி நிகழ்வு, அக்க்டோபர் 31 ம்மற்றும் நவம்பர் 1 ம் திகதி நடைபெறும். Phase 3 நிகழ்வில் கடமையாற்றிய நடுவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவர்களைத் தெரிவுசெய்வார்கள். இவர்கள் தமது ‘பண்டங்களை’ தொழில்நுட்பம், தொழில் முனைவோர், முதலீட்டாளர் ஆகியோர் முன்னிலையில் காட்சிபடுத்தி அவற்றை வெற்றிகரமாக நுகர்வோர் பாவனைக்கு அறிமுகப்படுத்தத் (finished product) தம்மாலியன்ற முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

நிகழ்வுக்கான கால நிரல்கோவிட்-19 ம் ZOOM தொழில்நுட்பமும் இணந்து ஒரு மகத்தான சந்தர்ப்பத்தை உலகுக்கு வழங்கியிருக்கிறது. போட்டியாளர்கள், தங்களையும், தமது எண்ணங்களையும் உலக மகாசனங்களுக்கு விற்பனை செய்யலாம். இலங்கையின் இளைய விற்பன்னர்கள் யார் என்பதை அறிய உலகப் பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இவர்கள் வழிகாட்டிகளோ, நடுவர்களோ அல்ல. இவர்களுக்கும் YGC இற்கும் எதுவித சம்பந்தமுமில்லை ஆனால் திறமைகளைப் பறிக்கத் தயாரக இருப்பவர்கள். சிலவேளைகளில் இத் திறமைசாலிகள் மீது அவர்கள் முதலீடு செய்யவோ அல்லது தமது நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ளவோ வாய்ப்புண்டு.

YGC யைப் பொறுத்தவரை, உங்கள் எண்ணக்கரு இடைவிருத்தி நிலையிலோ அல்லது ஏற்கெனவே இயங்கும் ஒரு நிறுவனமாகவோ இருக்கலாம். நடுவர்களுக்கு நீங்கள் காட்சிப்படுத்த வேண்டியதெல்லாம், உங்கள் எண்ணக்கருவின் தற்போதய நிலை என்ன அல்லது அது எங்கே போகவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை மட்டுமே. சிலவேளைகளில் உங்கள் எண்ணக்கரு, தயாரிப்பு நிலையில் இருக்கும், இறுதிப் பண்டத்தின் முன் மாதிரியாகக்கூட (prototype) ஆகவும் இருக்கலாம். இந்த காட்சிப்படுத்தலில் உங்கள் பண்டங்கள் மட்டுமல்ல விருத்தியடைவது, நீங்களும் சேர்ந்தே தான்.

Phase 1, Phase 2 நிகழ்வுகளின்போது பல்வகையான தொழில்நுட்பத் துறைகளிலும் சாதனைகளைப் படைத்துவரும் விற்பன்னர்கள் உங்கள் எண்ணக்கருக்கள் செயல்வடிவம் பெற இலகுவான வழிகளைக் காட்டுவார்கள். சந்தைப்படுத்தும் நிபுணர்கள், வாடிக்கையாளர்களின் தேவைகள் என்ன அவர்களை எப்படி வளைத்துப் போடுவது என்பதுபற்றி போதிப்பார்கள். முகாமைத்துவத்தில் அனுபவஸ்தர்கள், உங்கள் முயற்சிகளில் தோல்வி என நீங்கள் நினைக்கும் தருணங்களை அவை தோல்விகள் அல்ல புதிறக்கப்படும் புதிய பாதைகள் என ஊக்குவிப்பார்கள். இந்நிபுணர்கள் எல்லோரும் பல தவறுகளைச் செய்தவர்களும், பல இழப்புகளைச் சந்தித்தவர்களும் தான். தாங்கள் இழைத்த தவறுகளை நீங்கள் இழைக்கக்கூடாது என்பதை அவர்கள் காட்டித்தருகிறார்கள்.

YGC திறமைப் போட்டியில் கலந்துகொள்வதன் மூலம் பயிற்சியையும், நிபுணத்துவ ஆலோசனைகளையும் இலவசமாகப் பெற முடியும். சந்தர்ப்பங்கள் தேடிவரும்போது அவற்றை விடாமல் பற்றிக்கொள்பவனே உண்மையான தொழில் முனைவர்.

YGC, நீங்கள் தெரிவுசெய்யும் சகாக்களுடன் நெருக்கமாகவும் இறுக்கமாகவும் பணி புரிய உதவி செய்கிறது. சகல வழிகளிலும் ஒத்துழைப்பை நல்கக்கூடிய ஒரு குழுவின் முக்கியத்துவம் பற்றி அது உணர்த்தும். ஒரு நல்ல கிரிக்கெட் குழுவைப் 11 திறமையான பந்துவீச்சுக்காரர்களை மட்டும் கொண்டு உருவாக்கிவிட முடியாது. அதே போல ஒரு நல்ல தொழில்நுட்பக் குழுவை மதிநுட்பம் மிகுந்தவர்களை மட்டும் கொண்டு உருவாக்கிவிட முடியாது. நுணுக்கமான விடயங்களை அணுகுவதற்கு மதிநுட்பம் அவசியம். அதே வேளை, ஒரு குழுவை வெற்றிகரமாகக் குலையாமல், சிதறாமல் கொண்டு நடத்த ஒரு சிறந்த தலைவர் தேவை. குழு மனமுடைந்து போயிருக்கையில் அது மனம் துவளாது பார்த்துக்கொள்ள ஒரு கோமாளியும் அங்கிருக்க வேண்டும். இதுவெல்லாவற்றையும்விட, நடுவர்களுக்கு உங்கள் காட்சிப்படுத்தலைத் திறமையாகச் செய்யவல்ல ஒருவரும் உங்கள் குழுவில் இருக்க வேண்டும்.Yarl Geek Challenge judging panel of yesteryear

YGC திறமைப் போட்டியின் முடிவில் நடுவர்கள் விருதுகளை வழங்குவார்கள். ஆனால் அவர்கள் தரும் பரிசுகள்தான் உண்மையானவை என்பதல்ல. நீங்கள் அடையும் தன்னம்பிக்கையும், அனுபவமுமே YGC உங்களுக்குத் தரும் உண்மையான பரிசு. சவால்கள் மிக்கதும் சுராஸ்யங்கள் நிறைந்ததுமான தொழில் முனைவு வாழ்வை முன்னகர்த்தத் தேவையான தன்னம்பிக்கையைத் தரப்போவது உங்கள் வேட்கை, நடத்தை, பிரயோகம் ஆகியனவையே. பொதுச் சேவையில் இணைவது, சில தசாப்தங்கள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறுவது என்பதை வெற்றி என்று சொல்ல முடியாது.

கடந்த 8 வருடங்களில், பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இலங்கையில் தங்களது தொழில் முனைப்பு விடயங்களில் தினவு எடுத்து வருவதை YGC கண்டு வருகின்றது. இக் காலத்தில் YGC விருதுகளைப் பெற்ற 25 பயனாளிகள் வியாபார முயற்சிகளை ஆரம்பித்து 200 பேர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள். Senzmate  மற்றும் Arima போன்ற நிறுவனங்கள் YGC மூலாமாகப் பயனடைந்தவை. இவை பற்றி நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். இவர்களும், இவர்களைப் போல் இன்னும் பல நிறுவனங்களும் இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்து முதலீடுகளையும் பெற்று, சேவைகளையும் வழங்கி வருகிறார்கள். YGC இல் சமர்ப்பிக்கப்பட்ட எல்லா எண்ணக்கருக்களும் வெற்றிகரமாகச் செயல்வடிவம் பெற்றனவென்று கூற முடியாது. ஆனால் அவர்களுக்கு வெற்றிகரமான மாற்றுத் திட்டங்களை YGC வழங்கியிருக்கிறது. தமது சுய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க முடியாதோர் இதர தொழில்நுட்ப முயற்சிகளோடு பங்குதாரர்களாகிச் செயற்படுகிறார்கள். சிலர் வேறு நிறுவனங்களின் கீழ்ப் பணிபுரிந்து அனுபவங்களைப் பெற்ற பின்னர் தமது சுய முயற்சிகளை ஆரம்பிக்கலாம்.

YGC திறமைப் போட்டியில், நீங்கள் தான் பண்டம். அதையேதான் பல்கலைக் கழகங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் விற்கப்போகிறீர்கள். உங்கள் குழுவில் உள்ளவர்களே உங்கள் தொழில் முயற்சிகளில் இணையலாம். எனவே, நீங்கள் தான் பண்டம். நீங்கள் உங்களையே விற்றுக்கொள்ளும் தன்நம்பிக்கையை வெளிக்கொணரும் நிகழ்வே இந்த YGC திறமைப் போட்டி.

2019 YGC திறமைப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான குழுக்கள் சாதித்த விடயங்கள் பற்றித் தெரிந்துகொள்ள: https://www.readme.lk/top-10-ideas-yarl-geek-challenge-season-8/

YGC திறமைப் போட்டியில் கலந்து கொள்வதற்கான தகவல்களைப் பெற: http://yarlithub.org/ygc