Science & TechnologySri Lanka

Yarl IT Hub இன் ஏற்பாட்டில் இளம் தொழில் முனைவோருக்கான பட்டறை

ஜெகன் அருளையா

சென்ற ஞாயிறு (நவம்பர் 19) எனது நாண்பர்கள் ஷான் நந்தகுமார், ஜஸ்டின் குமார் ஆகியோர், யாழ்ப்பாணத்தில் Yarl IT Hub இனால் ஒழுங்கு செய்யப்பட்ட இளம் தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு பட்டறையில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.

இருவருமே அமெரிக்காவில் தமது பணிகளை ஆரம்பித்து வெற்றிகரமான தொழில்களை நடத்திக்கொண்டிருப்பவர்கள். நந்தா பல தொழில்நுட்ப ஆரம்ப முயற்சிகளுக்கு வித்திடும் நிறுவனமொன்றின் முதன்மை நிதி அதிகாரியாக (CFO) இருக்கிறார். ஜஸ்டின் அமெரிக்கா, மலேசியா, இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பல தொழில்களை உருவாக்கி நிர்வகித்து வருகிறார்.

இப்பட்டறையில் பேசிய நந்தா, தொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கு முன்பான, சந்தையைக் கற்றுத் தேர்தல், வணிக சாத்தியம், நிதி மற்றும் வணிகத்துக்கான திட்டமிடல் போன்ற தயாரிப்புகள் பற்றி மிகவும் தெளிவாகப் பேசியிருந்தார். இதே போன்று ஜஸ்டினும், வடக்கின் தொழில்முனைவோர் சமூகம் இதுவரை கேட்டிராத வகையில், தொழிலொன்றை ஆரம்பிப்பது முதல் இலாபகரமாக நடத்துவது வரையிலான முனைப்புகளில் ஏற்படக்கூடிய தடங்கல்கள், சிரமங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.

ஒரு தொழிலை இலகுவாகச் செய்யமுடியுமானால் அதைப் பலரும் செய்துவிடுவார்கள். அதனால் போட்டிகள் அதிகமாகிவிடும். குறிப்பாக எமது அயல்நாடான இந்தியாவுடன் போட்டி போடுவது இலகுவான காரியமல்ல. தனது வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தையும் முதலீடு செய்யும் ஜஸ்டின் கூட தனது IT தேவைகளை இந்தியாவிலேயே பூர்த்தி செய்கிறார். திறமை, மலிவு, விரைவான சேவை ஆகியவற்றை அவர் அங்கிருந்துதான் பெறுகிறார்.

இது எமது தொழில் முனைவோருக்கு மிகவும் அவசியமானது. இதன் மூலம் அவர் புதிய முனைவோரை அச்சுறுத்துவதாக எடுத்துக்கொள்ளலாகாது. மாறாக நிதர்சனத்தை எல்லோரும் தெரிந்துகொண்டே தொழில் முயற்சிகளில் இறங்கவேண்டும். பறந்து வந்து தமது புத்திமதிகளை அள்ளி வீசி அனுபவமற்ற முனைவோரை உருவேற்றி ‘எதுவானாலும் செய்து பாருங்கள்’ என்றுவிட்டுப் பறந்து விடும் பேச்சாளர்களைப் பின்பற்றாது பணத்தையும், நேரத்தையும் முதலிடுவதற்கு முன் சரியான திட்டமிடுதலின் அவசியம் பற்றி ஜஸ்டின் விளக்கமளித்தார்.