WeChat அமெரிக்கத் தடை | ட்றம்ப் கட்டும் சீனப் பெருஞ்சுவர்
சிவதாசன்
நாளை (செப்.20) முதல் நடைமுறைக்கு வரும் WeChat செயலி தரவிறக்கத் தடையால் சீன அமெரிக்கர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. காணொளிப் பரிமாற்றச் செயலியான TikTok மீதான தரவிறக்கத் தடை நவம்பர் 12 முதல் நடைமுறைக்கு வருகிறது.
பெரும்பாலான சீன-அமெரிக்கர்கள், குறிப்பாகப் புதிய குடியேறிகள், சீனாவிலுள்ள தமது உறவினரோடு தொடர்பு கொள்ளவும், அங்குள்ள வியாபாரிகளோடு வர்த்தகம் தொடர்பான விடயங்களில் உரையாடவும் பெரும்பாலும் WeChat செயலியையே பாவிக்கிறார்கள். இதர செயலிகளான WhatsApp மற்றும் Telegram போன்றவை சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ளன.
ட்றம்ப் நிர்வாகம் திடீரென அறிவித்த இத் தடையால், பலரும் தமது சேகரித்த தகவல்களையும், தொடர்பு இலக்கங்களையும் அவசரம் அவசரமாக வேறு தளங்களுக்கு மாற்றவேண்டி ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான சீன-அமெரிக்க வியாபாரிகள் சீனாவிலிருந்து தங்கள் பண்டங்களை இறக்குமதி செய்கிறார்கள். இதற்கான தொடர்பாடல்கள் அனைத்தும் சீன மொழியில் இருப்பதால் WeChat அவர்களுக்கு இலகுவாக இருக்கிறது.
சீன தொழில்நுட்ப நிறுவனமான Huawei யின் 5G தொலைத் தொடர்பு வலையமைப்பு மற்றும் உபகரணங்கள் அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தருவன எனக்கூறி அமெரிக்காவில் அதன் பாவனையை ட்றம்ப் நிர்வாகம் தடை செய்தது. தற்போது, TikTok, WeChat போன்ற செயலிகளின் தரவிறக்கத்தையும் இதே காரணங்களுக்காகத் தடை செய்துள்ளது.
இச் செயலிகளின் தலைமையகங்கள் சீனாவில் இருப்பதால், அங்குள்ள Server களில் இச் செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் தொடர்பாடல்கள் சேமிக்கப்பட்டு, சீன அரசினால் கண்காணிக்கப்படுகிறது. இந்த Server களை வேறெந்த நாடுகளும் கண்காணிக்க சீனா அனுமதிப்பதில்லை. அமெரிக்காவின் பாதுகாப்பு, தொழில்நுட்ப இரகசியங்கள் போன்ற விடயங்களை இச் செயலிகளினால், சீன அமெரிக்கர்கள் மூலம் சீனா பெற்றுக்கொள்கிறது என ட்றம்ப் நிர்வாகம் நீண்ட காலமாகக் குற்றம் சுமத்தி வருகின்றது.
இத் தடையின் காரணமாக WeChat இன் உரிமையாளரான Tencent Holdings, தனது பிராந்திய தலைமையகத்தைச் சிங்கப்பூருக்கு மாற்றியுள்ளது. இருப்பினும் ட்றம்ப் தனது முடிவில் உறுதியாக உள்ளாரெனத் தெரிகிறது.
அதே வேளை, TikTok என்ற காணொளி பகிரும் செயலியின் தரவிறக்கத் தடை மூலம் அதை அமெரிக்க நிறுவனங்கள் வாங்குவதற்கான அழுத்தத்தை ட்றம்ப் கொடுத்து வருகிறார். ByteDance என்ற சீன நிறுவனத்திற்குச் சொந்தமான TikTok, உலகம் முழுவதும் மிகவும் ஆர்வத்தோடு பாவிக்கப்பட்டுவரும் ஒரு செயலி. இதனால் அந் நிறுவனம் பெருந்தொகையான இலாபத்தை ஈட்டி வருவதால் அந் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனங்கள் ஏதாவது வாங்க வேண்டுமென, இத் தடையின் மூலம் ட்றம்ப் நிர்ப்பந்தித்து வருகிறார். இதன் காரணமாக, Microsoft, Wal Mart ஆகிய நிறுவனங்கள் TikTok கை வாங்குவதற்கு முயற்சி செய்தன. தற்போது Oracle என்ற அமெரிக்க நிறுவனம் Wal Mart உடன் இணைந்து அதை வாங்க போவதாகவும் அதற்கு ட்றம்ப் அனுமதி வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. Oracle நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் ஒருவர் ட்றம்பின் நண்பர் எனவும், அதன் முதன்மை நிர்வாகி ட்றம்பின் 2020 தேதலுக்காக நிதி அன்பளிப்புச் செய்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இத் தடையினால், WeChat பாவனையாளர் அதிகம் இழப்புக்களைச் சந்திக்கப் போவதில்லை எனவும், ஏற்கெனவே இச் செயலியைத் தமது ஃபோன்களில் தரவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் தொடர்ந்தும் பாவிக்கலாம் எனவும் அமெரிக்க நிர்வாகம் சொல்கிறது. தற்போது அமெரிக்காவில் 50 மில்லியன் WeChat பாவனையாளர்கள் உள்ளனர். WeChat இற்கான updates, security patches போன்றவற்றை இவர்கள் இனிமேல் தரவிறக்க முடியாது. எனவே, அமரிக்காவில் மெல்ல WeChat இனிச் சாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tencent நிறுவனத்தின் இன்னுமொரு சீன மொழியிலான குறுந்தகவல் செயலி, QQ வை WeChat பாவனையாளர் பாவிக்கலாம் என ஒரு செய்தி வந்தது. அது இன்னும் ட்றம்பின் கண்ணுக்குப் படவில்லை. ஆனால் இன்னுமொரு குடியரசுக்கட்சி உறுப்பினரான மார்க்கோ ரூபியோ QQ வையும் தடை செய்யும்படி சென்ற வாரம் ட்றம்பிடம் கேட்டிருக்கிறார்.
எப்படியிருந்தாலும், ஃபோன்களில் செயலிகளின் தரவிறக்கத்தைக் கட்டுப்பாட்டை முறியடிக்கும் Sideloading, Jailbreaking எனப் பல மென்பொருட்கள் பல உலாவுகின்றன. இந்த விடயத்தில் சீனாவை (சீனரை) முறியடிக்க முடியாது. இதுவும் ட்றம்பிற்குத் தெரிய வந்தால், இச் செயலிகளின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டியும் நிகழலாம். செயலிகளின் பாவனை முற்றாகத் தடை செய்யப்பட்டால் சீன நிறுவனங்களுக்குப் பேரிழப்புத் தான். ட்றம்ப் ஒரு வியாபாரி. இந் நிறுவனங்கள் அமெரிக்கர்களின் கைகளுக்குக் கொண்டுவரும் ஒரு வர்த்தக தந்திரமே இது. சீன அதிபர் ஜிங்பிங்கும் இன்னுமொரு ட்றம்ப். இருவருமே சுவர்களைக் கட்டுகிறார்கள்.
இது ட்றம்ப் கட்டும் சீனப் (வர்த்தகப்) பெருஞ்சுவரின் ஆரம்பம்..