VJ சித்ரா மரணம் | கணவர் ஹேம்நாத் கைது!
சென்னை நஸ்ராத்பேட்டை ஓட்டலொன்றில், கடந்த 9ம் திகதி, மர்மமான முறையில் மரணமான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சித்ராவின் மரணம் தொடர்பாக இன்று (திங்கள்) அவரது கணவன் ஹேம்நாத் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சித்ராவின் தற்கொலைக்கு உதவிசெய்தாரென்ற குற்றத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் அறிக்கை தெரிவிக்கிறது. சம்பவம் நடைபெற்ற ஓட்டலில் அன்று சித்ராவுடன் ஹேம்நாத் இருந்தாரெனக் கூறப்படுகிறது. கடந்த ஆறு நாட்களாகப் பொலிசார் ஹேம்நாத்தை விசாரித்த பின்னரே அவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
ஹேம்நாத்-சித்ரா தம்பதிகள் சில மாதங்களின் முன்னர் சட்டப்படி திருமணம் செய்திருந்தார்கள் என்றும், அடுத்த வருடம் தை மாசத்தில் சம்பிரதாயபூர்வமாக திருமண நிகழ்வை வைத்துக்கொள்ளவிருந்ததாகவும் அறியப்படுகிறது.
சம்பவ தினத்தன்று, நிகழ்ச்சி ஒளிப்படப்பின் பின்னர்அதிகாலை 1:00 மணிபோல் சித்ரா ஓட்டலில் அறையை எடுத்துக்கொண்டு அங்கு தங்கியிருந்ததாகவும், அதிகாலை 3:30 மணிபோல் ஓட்டலிலிருந்து பொலிசாருக்கு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசியழைப்பின்போது சித்ராவின் மரணம் பற்றித் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
_____
சம்பவத்தின் பின் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சித்ராவின் மரணம் தற்கொலையெனப் பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது எனினும் சித்ராவின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
