Opinionமாயமான்

USAID அதிபராகும் டாக்டர் சமாந்தா பவர் | கவனம் ராஜபக்சக்கள் மீது திரும்புமா? – ஒரு பார்வை

மாயமான்

அமெரிக்க செனட் சபையின் ஏகமனதான தெரிவாக டாக்டர் சாமந்தா பவர் அவர்கள், அமெரிக்க வெளிநாட்டு உதவி வழங்கும் USAID நிறுவனத்தின் தலைவராக ஏப்ரல் 16 நியமனமாகியிருக்கிறார். 2009 இறுதிப் போரை நிறுத்துவதற்கு பகீரத முயற்சியெடுத்துத் தோற்றுப் போனவர் டாக்டர் பவர். USAID தலைவராக மட்டுமல்ல அமெரிக்க தேசிய பாதுகாப்பு அவையின் ஆலோசகராகவும் அவர் பணியாற்றவிருக்கிறார். ராஜபக்சக்களுக்கு பவரின் வருகை வயிற்றில் புளி கரைத்தது போலவிருக்கப்போகிறது.

இறுதிப்போர் ஒரு ‘இனத்தின் படுகொலை’ (ethnic slaughter) எனவும் அதைத் தடுத்து நிறுத்த ஐ.நா. தவறிவிட்டது எனவும் ஒபாமா கூறியிருந்தாலும் ஒபாமா அதை நிறுத்த முயற்சி எடுக்கவில்லை என்பதை சாமந்தா பவர் போன்றவர்கள் அப்போது சுட்டிக்காட்டியிருந்தனர். ஆப்கானிஸ்தானில் மறைந்திருந்த அல் கயீதா தலைவர் ஒசாமா பின் லாடனைக் கொலை செய்ய வேண்டாமென்று அப்போதைய உப ஜனாதிபதி ஜோ பைடன் உடபடப் பலர் கோரிக்கை விடுத்திருந்த போதும் அதை மீறி ஒபாமா பின் லாடனைக் கொலை செய்ய உத்தரவிட்டார். அப்படியிருக்க கண் முன்னால் ஒரு இனம் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது அதை நிறுத்தும்படி பலர் வேண்டியும் அதை அவர் செய்யவில்லை என்பது டாக்டர் பவர் போன்றவர்களுக்கு நிச்சயம் எரிச்சலை ஊட்டியிருக்க வேண்டும்.

USAID என்பது அமெரிக்காவின் முதலாம் நிலை வெளிநாட்டு அபிவிருத்தி உதவி நிறுவனம். அதன் உதவிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட, பின் தங்கிய சமூகங்களுக்கு வழங்கப்படுகிறது. மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதத்துக்கெதிரான குற்றச்செயல்களைச் செய்த, செய்துகொண்டிருக்கும் நாடுகளுக்கு செயற்பாட்டாளராகிய பவர் போன்றவர்கள் நிச்சயம் கொடுக்க மாட்டார்கள். பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கும் இலங்கைக்கு எந்த சிறு உதவியும் இப்போது அவசியமானது.

மார்ச் 2021 இல் வெளியிடப்பட்ட 2020 ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை, மனித உரிமைகள் மீறல், சட்டம் ஒழுங்குகள் துஷ்பிரயோகம் ஆகிய விடயங்களில் கோதாபய ராஜபக்சவின் நிர்வாகத்தை மிகவும் காரசாரமாக விமர்சிக்கிறது.

ஒபாமா நிர்வாகத்தில், 2009 முதல் 2013 வரை தேசிய பாதுகாப்பு அலுவலகத்தில் பணியாற்றியபோது, டாக்டர் பவர், தேசீய பாதுகாப்பு அவையின் உறுப்பினராக 2010 இல் இலங்கை சென்றிருந்தார். பின்னர் 2017 வரை ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவராகப் பணியாற்றியிருந்தார். இவரது முயற்சியால் தான் ஐ.நா. மனித உரிமைகள் சபை இலங்கை மீது அதீத கவனம் எடுக்க நேரிட்டது.

“இலங்கை போன்ற நாடுகளில் நடைபெற்ற போர்க்காலக் கொடுமைகளைப் பற்றிக் குரல் கொடுக்கும்படி ஒபாமாவை வெற்றிகரமாக முன்தள்ளினேன்” என இலட்சியவாதியின் படிப்பினை (The Education of Idealist (2019)) என்ற தனது நினைவுக் குறிப்பில் டாக்டர் பவர் குறிப்பிடுகிறார். போர்க்காலத்தில் அமெரிக்கா நடந்துகொண்ட முறை பற்றியும், போரை நிறுத்த ஒபாமா முயற்சியெதையும் எடுக்கவில்லை எனவும் இதனால் பலராலும் அமெரிக்கா விமர்சிக்கப்பட்டதெனவும் அவர் அந்நூலில் குறிப்பிடுகிறார். இதன் பின்னர் ஒபாமா தனது நூலில் அது ஒரு ‘இனத்தின் படுகொலை’ என வர்ணித்திருந்தார்.

USAID என்ற அபிவிருத்தித் திட்டம் மூலம் வருடாந்தம் சுமார் $2 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்க அரசு செலவிடுகிறது. ‘வெளி நாடுகளில் ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றைப் பேணுவதன் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதே’ இதன் நோக்கம். ஆனாலும் ஜோ பைடனின் நிர்வாகத்தில் இது கணிசமாக உயர்த்தப்படுமெனவும், ஊழலையும் எதேச்சாதிகாரத்தையும் ஒழிப்பதற்கு பைடன் நிர்வாகம் உறுதிபூண்டுள்ளதெனவும் கூறப்படுகிறது.

2018 இல் இலங்கையில் சிறிசேன / விக்கிரமசிங்க ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ராஜபக்சக்கள் முயற்சி செய்தபோது இலங்கை மீது குறிவைக்கப்பட்ட தடை நடவடிக்கைகளை (targeted sanctions) மேற்கொள்ளுமாறு, டாக்டர் பவர் சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group (ICG)) விற்கு நவம்பர் 2018 ஆலோசனை வழங்கியிருந்தார். “அரசியலமைப்பு நெருக்கடியினால் ஆபத்து வரப் போவது உறுதி. ராஜபக்சவின் மீள் வருகை இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளை முறியடிக்கும் சாத்தியங்கள் உண்டு. பிரதமராக நியமிக்கப்படவிருக்கும் மஹிந்த ராஜபக்ச ஒரு போர்க்குற்றவாளியென ஆதாரங்களோடு குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர். இலங்கையில் நிறுவனங்கள் வளைகின்றனவே தவிர முறியவில்லை” என பவர் அப்போது தனது ருவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார்.

இந் நிலையில் இலங்கை என்றுமே டாக்டர் பவரின் பார்வைக் குவியத்திலிருந்து அகலப் போவதில்லை என நிச்சயமாக நம்பலாம்.