UNICOM TIC: யாழ்ப்பாணத்தின் புதிய தொழில்நுட்பத் திறன் வளர்ப்பு நிறுவனம் (Tech Talent Incubator)
வளரும் வடக்கு
ஜெகன் அருளையா

சிலருக்கு 10,000 ரூபா அதிகமாகத் தெரிவதும் சிலருக்கு 1 மில்லியன் ரூபாக்கள் ஒரு பொருட்டல்ல என்பதும் எனக்குத் தெரியாதவையல்ல. ஆனால் பணக்காரருக்கும் ஏழைக்கும் ஒன்று பொதுவான அம்சம்: ஒரு நிமிடத்தில் 60 செக்கன்டுகள்; ஒரு மணித்தியாலத்தில் 60 நிமிடங்கள் இருக்கின்றன என்பது மட்டும் நிச்சயமானது. அப்படியே, கடவுள் கைகொடுத்தால் ஒரு 60 வருடங்கள் வாழ்ந்து எமது குடும்பங்களுக்கும், நண்பர்களுக்கும், எங்கள் வேலைகளுக்கும், எங்கள் சகபாடிகளுக்கும் நாம் நம்பும் விடயங்களுக்குமாக ஏதோ செய்துவிட்டுப் போகிறோம். பெரியவர்களோ சிறியவர்களோ இன்னும் ஒரு வருடத்தில் வயதால் ஒரு வருடம் முதிர்ந்துவிடப் போகிறோம். இக் கட்டுரை மனிதர் தம்மைத் தாமே நம்பவேண்டும் என்ற சுயநம்பிக்கை காரணமாகத் தமது கால நேரத்தைத் தானம் செய்ய முன்வரும் சில மனிதர்களைப் பற்றியது.
2023 நத்தார் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் சாந்த ரூபன் மற்றும் நீல் அந்தோனிப்பிள்ளை ஆகியவர்களை நான் முதன் முதலாகச் சந்தித்தேன். பண்டிகை நாட்களை எனது குடும்பத்தினருடன் கழிப்பதற்காக அப்போது நான் லண்டனில் தங்கியிருந்தபோது ஒருநாள் சாந்தாவும் நீலும் யாழ்ப்பாணத்தில் தாம் மேற்கொள்ளும் புதிய முயற்சி பற்றிப் பேசுவதற்கு என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். யூனிகொம் ரீ.ஐ.சீ. (UNICOM TIC) என்னும் பயிற்சி மற்றும் புதுமை நிலையம் (Training and Innovation Centre (TIC)) ஒன்றை ஆரம்பிப்பதுவே அவர்களின் முயற்சி. பரீட்சையின் பெறுபேறுகளையோ அல்லது ஆங்கிலப் புலமை மற்றும் பொருளாதாரத் தகுதியையோ வைத்துக்கொண்டு ஒருவரது தராதரத்தை மதிப்பிடாமல் அவரது தகுதி, அணுகுமுறை ஆகியவற்றைக் கொண்டு மதிப்பிடுவதன் மூலம் பயிற்சிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்து 9 மாதங்களில் அவர்களை மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் முழுமையான பணியாளர்களாக இணையக்கூடிய தரத்துக்கு தயாராக்கிவிடுவதே சாந்தா, நீலினது நோக்கம்.

ஆரம்பத்தில் இதில் எனக்கு நம்பிக்கை அதிகம் இருக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். சாந்தாவும் நீலும் யாழ்ப்பாணத்தில் பிறந்து கொழும்பில் பால்ய நண்பர்களாகி இப்போது பிரித்தானியாவில் உயர் பதவிகளை வகித்து வருபவர்கள். சாந்தா ஒரு தொழில்நுட்ப நிறுவனங்களின் குழுமத்தின் முதன்மை நிர்வாகி மட்டுமல்ல கைதேர்ந்த ஒரு தொழில் முனைவருங்கூட. நீல் தொழில்நுட்பத் துறையில் ஒரு மூத்த நிர்வாகியாகவிருந்து பின்னர் அவரது மனதின் கட்டளையை ஏற்று, தனது 30 களில் மருத்துவராக மாறியவர். பின்னர் மானிட சேவையினால் உந்தப்பட்டு எல்லைகளற்ற மறுத்துவர்கள் அமைப்பு உள்ளிட்ட மனித நேய அமைப்புகளில் இணைந்து போர், சீரழிவு மண்டலங்களில் பணிவிடை செய்து வந்தவர். இப்போது பிரித்தானியாவின் தேசிய மருத்துவ சேவையில் இணைந்து மருத்துவராகப் பணியாற்றுகிறார்.
இவ்விருவருமே இலக்கைக் குறியாகக் கொண்டு பணிபுரிபவர்களுடன் இலக்கைக் குறியாகக்கொண்டு செயற்படும் சூழல்களில் பணியாற்றப் பழகியவர்கள். இலக்கை அடைவதற்கான முனைப்புடன் கருமமாற்றுபவர்கள் தாமே அதை அடைவதற்கான வழிவகைகளையும் தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள் என்பது இவ்விருவரின் நம்பிக்கையும்கூட. முற்றிலும் மாறுபட்ட சூழலைக் கொண்ட யாழ்ப்பாணத்தில் வெற்றியையே அனுபவித்திராத, வேலைகளில் பரிச்சயமில்லாத, தாம் செய்த கடும் பணிகளுக்கு சன்மானமே வழங்கப்படாத சிலரை இவ்விருவரும் தேர்ந்தெடுத்தார்கள். விரைவிலேயே இவர்களில் பலர் பயிற்சியை விட்டுவிட்டு ஓடிவிடப் போகிறார்கள் என்றே எனது மனம் சொல்லியது. அரைவாசி வகுப்பு வெறிச்சோடிக் கிடக்குமெனவே நான் எதிர்பார்த்தேன்.
ஆனால் நான் எண்ணியது முற்றிலும் தவறு. நான் இழைத்த தவறுக்காகப் பெரிதும் மகிழ்ந்தேன். 9 மாதப் பயிற்சியின் 4 மாதங்கள் கடந்துவிட்டது; பயிற்சியை ஆரம்பித்த 120 மாணவர்களில் ஆக 5 பேர் மட்டுமே பயிற்சியைத் தொடராது விலகிக்கொண்டிருந்தார்கள். இந்த 5 பேரில் ஒருவர் அவரது குடும்பத்தின் வற்புறுத்தலுக்கிணங்கி அரச சேவையொன்றில் இணைந்து கொண்டார். அவ்வளவுதான்.
‘யூனிகொம் ரீஐசீ’ வெட்டாத, துலக்காத வைரக்கல்லில், துலக்கப்படாத திறமைகளைத் தேடுகிறது எனவே நான் எண்ணுகிறேன். நான் படித்த பள்ளிகளில் எனது தகமைத் தொகுப்பை (Curriculum Vitae) எப்படித் தயாரிப்பது என்றும், நேர்முகப் பரீட்சைகளில் எப்படிப் புத்திசாலியாகக் காட்டிக்கொள்ளவேண்டுமென்றுமே கற்பிக்கப்பட்டேன். சிறந்த பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும் சந்தர்ப்பங்களும் என் முன்னால் பரவிக்கிடந்தன. என் சக மாணவர்கள், என்னைச் சுற்றியிருந்தவர்கள் வெற்றிகளைத் தேடிக் கடுமையாக உழைத்தார்கள். ஆனால் உண்மையான, நேர்மையான முயற்சியின் பலனை நான் என்னுள்ளும், என்முன்னாலும், என்னைச் சுற்றியும் இருந்தவர்களைப் பார்த்து உணர்ந்து அனுபவித்தவன்.

ரீ.ஐ.சீ. பயிற்சிக்காக மாணவர்களைத் தேடும்போது இப்படியான அனுகூலங்கள் அதற்கு இருக்கவில்லை. இப்போது அவர்கள் வடக்கு கிழக்கின் பின்தங்கிய கிராமங்களைக் குறிவைக்கிறார்கள். இதர மாகாணங்களிலும் தமது நிறுவனத்தை விஸ்தரிக்கவேண்டுமென்பது அவர்களுடைய விருப்பம். வாழ்க்கையில் ஒரு பத்திரத்தைத் தானும் நிரப்பிய அனுபவமில்லாத பலரை ரீ.ஐ.சீ. பயிற்றுவித்திருக்கிறது. வறுமை, சாதி, சந்தர்ப்பமின்மை, ஆர்வமின்மை, சுற்றியுள்ளவர்களின் விதம் விதமான எதிர்பார்ப்புகள் என்று பல காரணிகளால் பலரது வெற்றிகள் தடுக்கப்படுகின்றன. மூடப்பட்ட இவர்களின் கதவுகளை உதைத்துத் திறந்து அவர்களை வெளியே கொண்டுவந்து அவர்களின் வாழ்வை மட்டுமல்லாது அவர்களது குழந்தைகளது வாழ்வையும் முன்னேற்ற ரீ.ஐ.சீ. முனைகிறது. இதன் மூலம், தமது பெற்றோருக்கு மறுக்கப்பட்ட, ‘நாம் கற்றோர் குடும்பங்களில் பிறந்தோம்’ என்ற மகிழ்ச்சியை அவர்களின் அடுத்த சந்ததியாவது பெறக்கூடிய வாய்ப்பை இது அளிக்கும்.
ரீ.ஐ.சீ. எதைச் செய்ய விரும்புகிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, நுவரேலியா என்று பல மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை வைத்தது. மாணவர்கள் தமக்குத் தேவையான பத்திரங்களை எப்படி நிரப்பவேண்டுமென அவர்களுக்குப் பயிற்சிகள் தரப்பட்டன. இப்படி நிரப்பப்பட்ட 3,000 விண்ணப்பங்களிலிருந்து தெரிவாகிய 120 மாணவர்கள் பயிற்சியில் இணைக்கப்பட்டார்கள். இந்த 120 பேர்களும் தமது வாழ்க்கையின் இடிபாடுகளைத் தாண்டி சிறந்த மென்பொருள் விற்பன்னர்களாக வெளிவந்துள்ளதை ரீ.ஐ.சீ. கண்கூடாகக் கண்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் இவர்களில் சிலர் தாமே தொழில் முனைவோர்களாகி முதலாளிகளாகவும் ஆகலாம், யார் கண்டது?
ரீ.ஐ.சீ. யின் இம்முயற்சியின்போது க.பொ.த. சாதாரணம் முதல் பல்கலைக்கழகத் தராதரம் வரையில் விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. பெரும்பாலானோரின் வயது 18-23 வரையில் இருந்தாலும் சிலர் 35 வயதுக்கு மேலாகவும் இருந்தனர். பெரும்பாலானோரது குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழேதான் இருந்தன. பிரித்தானியாவில் தர்ம ஸ்தாபனமாகப் பதிவுசெய்யப்பட்ட புளொஸ்ஸம் ட்றஸ்ட் யூ.கே. (Blossom Trust U.K.) என்ற அமைப்பு இம்மாணவர்களுக்கு மாதாந்த உதவிப்பணத்தை வழங்குகிறது.
மார்ச் 2024 இல் ரீ.ஐ.சீ. ஆரம்பிக்கப்பட்டது. வடமாகாண கூட்டுறவுச் சங்கங்கள் ஒரு காலத்தில் மிகவும் பலம் வாய்ந்தவையாகவிருந்தவை. அவற்றின் சில அலுவலகங்களுக்கும், பண்டசாலைகளுக்கும், இலாபமின்றி இயங்கிக்கொண்டிருக்கும் சிலவற்றிற்கும் நான் சென்று பார்த்தேன். போரினால் மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவை பாவிப்பாரின்றி அஸ்தமனமாகிக்கொண்டிருந்தவை. யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து இரண்டு நிமிட நடையில் இருந்த இப்படியொரு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான ஒரு-தளக் கட்டிடத்தின் 4,000 சதுர அடி பரப்பளவை ரீ.ஐ.சீ. வாடகைக்கு எடுத்தது. நவீன தளப் பிரிகைகள், தளபாடங்கள், புதிய கணனிகள் என அது புதுப் பொலிவைப் பெற்றது. தகமையுள்ள ஆசிரியர்களும், நிர்வாகிகளும் பணிகளில் நியமிக்கப்பட்டனர். சாந்தாவோ அல்லது நீலோ யாழ்ப்பாணத்தில் இருக்கவேண்டுமென்பது தீர்மானமானது. இந்த இரு உயரதிகாரிகளும் தமது நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்வது பெறுமதியானது என நம்புவார்களானால் இம்மாணவர்களும் தமது நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்வது பிரயோசனமானது என நம்பினார்கள்.
முன்னாள் போர்க்களங்களான வடக்கும் கிழக்கும் தமக்குக் கிடைத்த கணிசமான உதவிகளைத் துஷ்பிரயோகம் செய்துவிட்டன. “என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்” என்ற ரீதியில் கொடுக்கப்பட்ட பல மில்லியன் டாலர்கள் வீணடிக்கப்பட்டன. அவற்றுக்கு என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பார் யாருமில்லை. அனைத்துலக தொண்டு நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், தனிப்பட்ட புலம்பெயர்ந்த நல்மனிதர்கள் வாரி வழங்கிய நன்கொடைகளால் எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. அதை எப்படி நானறிவேன்? என உங்களில் சிலர் கேட்கலாம். போர் முடிந்து 15 வருடங்களாகியும் பணத்திலும், சந்தர்ப்பத்திலும் வடக்கு இன்னமும் ஏழ்மை நிலையில் தான் இருக்கிறது. சாந்தாவுக்கும் நீலுக்கும் கனவிலும் ரீ.ஐ.சீ. யே நினைப்பாகவிருக்குமென்பதை நாம் இங்கு மறந்துவிடக் கூடாது.
2024-2025 ஆண்டுகளுக்கான மூலதனம் மற்றும் இயங்கு செலவுகளுக்கான நிதியை ரீ.ஐ.சீ ஏற்கெனவே திரட்டிவிட்டது. மாணவர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. அதுவெல்லாம் புலமைப் பரிசிலாக வழங்கப்படும். எனவே இங்கு கற்பதற்கு மாணவர்களுக்கு தடையென்று எதுவுமே இருக்கமுடியாது.
சாந்தாவைப் பொறுத்தவரையில் தான் அனைத்தும் தெரிந்த ஒருவரில்லை என்பதை விநயமாக ஏற்றுக்கொள்பவர். 9 மாதங்களில் தமது மாணவர்களைப் பண்பட்ட வல்லுனர்களாக மாற்றும் வித்தையை ரீ.ஐ.சீ. இன்னும் கற்றுக்கொண்டுதானிருக்கிறது. தொழில்நுட்பம் மட்டுமல்ல தொடர்பாடல், தன்னம்பிக்கை ஆகியனவும் இன்னமும் சவால்களாகவே இருக்கின்றன. மண்ணை உழுது கொண்டிருந்தவர்களுக்கும், கட்டுமானப் பணிகளிலும் கடைகளிலும் வேலை செய்தவர்களுக்கும் திடீரென சர்வதேச அரங்குகளில் உயர்மட்ட விற்பன்னர்களோடு பணி புரிவதென்பது இலகுவானதல்ல.

ரீ.ஐ.சீ.யின் முக்கிய சவால்களிலொன்று தமது மாணவர்களை வேலைகமர்த்த வல்ல நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது. ரீ.ஐ.சீ. கற்கை நெறியை முடித்துக்கொண்டு வருட முடிவில் வெளியேறும் பட்டதாரிகள் தமது பயணத்தின் அடுத்த கட்ட சவாரியை மேற்கொள்வதற்கு உதவிசெய்யும் வகையில் வடக்கிலும் ஏனைய இடங்களிலுமுள்ள மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இவர்களை உள்வாங்கத் தயாராக இருக்கவேண்டும்.
ரீ.ஐ.சீ. யின் கற்கைநெறிகள் பற்றிக் கேட்டேன். full-stack development, specifically JavaScript, C#, .NET Core, Angular, Azure. Business analysis, database technology, deployment, version control, and best practices என அவர்களது மொழியில் பதில் வந்தது. மென்பொருள் உருவாக்கத் துறையின் எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ளும் வகையில் ஒரு full-stack மென்பொருள் படைப்பளியாவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றவர்களாக தமது மாணவர்கள் வெளியேறவேண்டுமென்பதே ரீ.ஐ.சீ. யின் இலக்கு.
நிறுவனங்களுக்கு பணியாளர்களைச் சேர்க்கும் நிறுவனங்கள் ரீ.ஐ.சீ. யால் பயிற்றப்பட்ட பட்டதாரிகளைத் தெரிவுசெய்வார்களேயானால் அவர்கள் பணிபுரியப்போகும் நிறுவனங்களுக்கும், இப்பட்டதாரிகளுக்கும் சிறந்த சேவைகளைச் செய்தவைகளாகப் பார்க்கப்படும் என்பதோடு எதிர்காலமற்ற கடைநிலை ஊழியர்களாகத் தொலைந்துபோகவிருந்த ஒரு சமூகத்திற்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொடுத்த பெருமையையும் பெறுமென எதிர்பார்க்கலாம்.
யூனிகொம் ரீ.ஐ.சீ. போன்றதொரு நிறுவனத்தால் கதவை மட்டுமே திறந்துவிட முடியும். அக்கதவினூடு ஆற்றலுடன் கடந்துசெல்ல பயிற்சியாளர்களால் மட்டுமே முடியும். இப்படியான ரீ.ஐ.சீ பட்டதாரிகளை இனம்கண்டு அவர்களை உள்வாங்கும் தகமைகளும் சில நிறுவனங்களுக்கு மட்டுமே உண்டு.
2024-2025 ஆண்டுகளுக்கான நிதித் தேவைகள் மட்டுமே இப்போதைக்கு ரீ.ஐ.சீ. யிடம் கைவசம் இருக்கிறது. ரீ.ஐ.சீ. யின் இந்த பரீட்சார்த்த மாதிரி வெற்றிபெற்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் வடக்கில் இதை மேலும் தொடர்ந்து நடத்தவும் இதர மாகாணங்களுக்கு விஸ்தரிக்கவும் புரவலர்கள் தேவைப்படுவார்கள்.
ரீ.ஐ.சீ. பட்டதாரிகளை உள்வாங்க விரும்பும் நிறுவனங்கள் UNICOM TIC நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட முடியும். அதற்கான ஒழுங்குகளைச் செய்வதற்கு +94 77 922 9555 (telephone and WhatsApp) என்ற இலக்கத்தில் அழைக்கலாம்.
( — இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் பிரித்தானியாவிற்குத் தனது பெற்றோருடன் இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தஙகளுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக இலஙகையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனஙகளில் பணியாற்றியவர். 2015 இல் ஜெகன் யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். jekhan@btinternet.com – தமிழாக்கம்: சிவதாசன் tam@veedu.com)
