‘To Whom It May Concern’
‘Absence of Malice’ என்ற திரைப்படமொன்றில் ஒரு காட்சி. நிருபராகவிருப்பது பற்றி ஒரு முதிய பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சொல்வார் “செய்தியை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியும். மக்களைத் புண்படுத்தாத வகையில் அச்செய்தியை எப்படிச் சொல்ல வேண்டுமென்றும் எனக்குத் தெரியும். ஆனால் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் எப்படிச் செய்வதென்பது மட்டும் எனக்குத் தெரியாமலிருக்கிறது” என்று.
உண்மை எங்கோ ஒருவரைச் சீண்டும், அவர் குறிவைக்கப்படாதவராக இருப்பினுங்கூட. இதை விளக்க கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாட்டில் ஒரு உபகதையுண்டு.
இஸ்ரேல்-யூதேயா நாட்டு மன்னர்களுக்கிடையே நெடுநாட் பகையினால் அடிக்கடி போர் நடந்து வந்தது. யூதேயா நாட்டு மன்னன் நாள் நட்சத்திரம் பார்த்துப் போர் புரிபவனாகையால் தன்நாட்டிலுள்ள புத்திமான்களை அழைத்து ஆலோசனைகளைக் கேட்ட பின்னரே போருக்குப் போவான். ஒரு தடவை இவ்வாறு ஆலோசனை கேட்டபோது பல புத்திமான்கள் இந்தத் தடவை போரில் அவன் தோற்பான் என்று முன்னுரைத்தார்கள். அவர்களையெல்லாம் சிறையிலடைத்த அரசன் அந்நாட்டின் அதிமதிப்பிற்குரிய புத்திமானை அழைத்து அவரிடமும் ஆலோசனை கேட்டான். அந்த மனிதரும் “நீ கொல்லப்படுவாய் போருக்குப் போகாதே” என்று கூறினார். அக்கூற்றையும் நம்பாத அரசன் அவரையும் சிறையிலடைத்துவிட்டு போருக்குப் போனான். முதல்நாட் போரில் இஸ்ரேலிய மன்னனிடம் தோற்றபின் தன் முகாமுக்குள் முடங்கி அடுத்தநாட் போர் பற்றிய திட்டங்களைத் தீட்டலானான். அப்போது இஸ்ரேலிய போர் வீரனொருவன் தன் நாணில் அம்பேற்றி அந்த அம்பில் To Whom It May Concern’ என்றெழுதிக் குறியெதுவும் வைக்காது எய்தான். அந்த அம்பு யூதேயா அரசனது முகாமின் கூடாரத்தைத் துளைத்து அரசனின் கவசத்தின் இடைவெளியால் புகுந்து அவன் இதயத்தைத் துளைத்ததனால் அவன் இறந்தான்.
இரண்டு விடயங்களை இக்கதையிலிருந்து உய்த்துணரலாம்.
ஒன்று, தன் முன்னால் பல புத்திமான்களைச் சிறையிலிட்டவன் என்று தெரிந்தும் அந்த அதிமதிப்பிற்குரிய புத்திமான் உண்மையைச் சொன்னார். இரண்டு, சொல்ல வந்த விடயம் உண்மையானால், அவ்வுண்மை குறியேதும் வைக்காத போதும் சேர வேண்டிய இடத்தைச் சேரும்.
சமீப காலமாக எனது மனதை நெருடிக் கொண்டிருக்கும் விடயங்களிலொன்று எழுத்து ஊடகம் மற்றும் இதழியல் பற்றியது. அந்த நெருடலுக்கு அடியாதாரம் என் சுய பரீட்சையென்றே சொல்ல வேண்டும்.
இன்னுமொரு பத்திரிகைக்கு எழுதிய பத்தியொன்றில், எமது சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட துறைசார் வல்லுனர் பற்றிப் பெயர் குறிப்பிடாதவாறு எழுதியிருந்தேன். பல பொது மக்கள் அவருடைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவந்தது. மிகுந்த ஆதாரங்கள் இருந்தும் அவரது பெயரைக் குறிப்பிடாது அந்தக் கட்டுரையை நான் எழுதியதற்கு காரணம் இவ்விடயத்தால் அவரது தொழில் பாதிக்கப்படக் கூடாது என்பதே. அதே வேளை அவருக்கு இவ்விடயம் போய்ச் சேர வேண்டும். அதனால் அவர் சில வேளைகளில் தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற நினைப்பிலேயே அதை எழுதினேன். எனது அம்பும் To Whom It May Concern’ என்றவாறு அந்த விடயத்தை அவருக்குக் கொண்டு செல்லுமென்ற நினைப்பிலேயே அக்கட்டுரையை நான் எழுதியிருந்தேன்.
இரு வாரங்களில் அத்துறைசார்ந்த இன்னுமொரு வல்லுனர் தொலைபேசியில் அழைத்துக் கேட்டார் “நீங்கள் எழுதிய கட்டுரை என்னைக் குறிவைத்து எழுதப்பட்டதா?” என்று. “பாவிக்கப்பட்ட சொற்கள் எனக்கென்றே எழுதப்பட்டவை போல இருக்கின்றன” என்று அவர் மேலும் சொன்னார்.
“இல்லை, உங்களைக் குறிப்பிடவில்லை, வேண்டுமென்றால், அடுத்த இதழில் சம்பந்தப்பட்டவர் நீங்களில்லை என்று உங்கள் பெயரைப் போட்டு ஒரு பத்தி எழுதிவிடுகிறேன்” என்று ஆறுதல் கூறினேன்.
“தேவையில்லை” என்பதோடு எங்கள் உறவு திசை மாறியது.
செய்தியை எழுத எனக்குத் தெரிந்திருந்தது. மனதைப் புண்படுத்தாது (தொழிலைப் பாதிக்காது) எனக்கு எழுதத் தெரிந்திருந்தது. சரியாக (யாரையுமே புண்படுத்தாது) இரண்டையும் ஒன்றாகக் கொடுக்க என்னால் முடியாமற் போய்விட்டது.
‘To Whom It May Concern’ didn’t work, miserably failed, in my case!
ஆதாரங்களிலிருந்ததனால் சம்பந்தப்பட்டவரைப் பெயரோடு அறிவித்திருக்கலாம். அல்லது அவ்விடயத்தைப் பற்றி எழுதாமலே இருந்திருக்கலாம். சம்பந்தப்பட்டவரையா அல்லது சமூகத்தையா நான் பாதுகாப்பது? தேர்வு என்னுடையது. பேசாமல் ஒதுங்கிக் கொண்டு வருமானத்தை வளர்த்துக் கொள்ளலாம். பத்திரிகையாளனுடைய கடமையில் உறுதியான நம்பிக்கையுள்ளதால், அது இயலாதது.
நேற்று, இரண்டு தமிழ் இணையத் தளங்களைப் பார்த்தேன். குமரிக் கோட்டை மீண்டும் கொடுங்கடல் கொண்டதால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டன. இதர மக்களைப்போல் செய்திகளை உடனுக்குடன் அறிய எனக்கும் ஆவல். மக்கள் மிகவும் நொந்துபோயிருக்கிறார்கள். ஆனால் இவ்விரு இணையத் தளங்களும் மக்களின் பலவீனங்களில் குதிரையோடியிருந்தன. இயற்கையின் கொடுமைகள் போதாதென்று செய்திகளால் இரணக் கோடுகள் கிழித்திருந்தன. நெருடல் பிராண்டலாக மாறுவதற்குள் தளத்தை மாற்றிக் கொண்டேன்.
என்னைவிட அவர்கள் எதையும் வித்தியாசமாகச் செய்யவில்லை.
தீர்ப்பு?
அம்புகளில் விலாசங்களை இணைப்பது. செய்திகளை ஆதாரங்களோடு தரவேண்டியது.
-சரியாக வில் வித்தையைக் கற்றுக்கொள்ளும்வரை.
இக் கட்டுரை ‘தாயகம்’ ஜனவரி 2005 இதழில் பிரசுரமானது