Spread the love

ஒரு அலசல் – சிவதாசன்

நவம்பர் 12 அன்று மாட்சிமை தங்கிய ஜனாதிபதி அமெரிக்கச் செயலிக் கடைகளில் (App stores) Tik Tok, We Chat போன்ற செயலிகளை விற்க முடியாது என தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் கட்டளையிட்டு விட்டார். இதன் நோக்கம் என்ன, விளைவுகள் என்ன என்பதைப் பற்றி அலம்புவதே இக் கட்டுரையின் நோக்கம்.

Tik Tok – சீமான் அண்ணனை வைத்துப் பல இளசுகளும் எதிர்க்கட்சியினரைப் பகிடிவதை செய்யும் காணொளிகள் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் செய்யப்பட்டவை. அமெரிக்காவில் 100 மில்லியன் பாவனையாளர்கள் இதைப் பாவிக்கிறார்கள். ByteDance என்னும் சீன நிறுவனம் இதன் உரிமையாளர்.

WeChat சீனர்களுக்காகச் சீன மொழியில் உரையாடும் ஒரு செயலி. 1 பில்லியன் பேருக்கு மேல் பாவனையாளர்களைக் கொண்டது. பின்னர் ஆங்கிலத்திலும் பாவனையாளர்களுக்கான வசதி செய்யப்பட்டது. இதன் உரிமையாளர், Tencents என்ற சீன நிறுவனம். WeChat உரையாடல்களை சீன அரசு கண்காணித்து அரசுக்கு எதிராக இயங்குபவர்களைக் கண்டுபிடிக்கிறது எனப் பரவலாக நம்பப்படுகிறது.



அநேகமாக எல்லா செயலிகளுமே ஒரு வகையில் அதன் பாவனையாளர்கள் பற்றிய பிரத்தியேக தகவல்களைத் திரட்டுகின்றன. Data mining எனப்படும் தகவல் சேகரிப்பு உலகில் அதிக இலாபமீட்டும் ஒரு வியாபாரம். முகநூல், கூகிள் தேடுதல் போன்ற இலவச வலைத் தளங்கள் தம்மூடாக வேறு நிறுவனங்களின் செயலிகளை வழங்கி அவற்றின் பாவனையாளர்களின் வாழ்வியல், இச்சைகள், உணர்வுகள், பலவீனங்கள் என்று பல பிரத்தியேக அம்சங்களைப் பதிவுசெய்துகொண்டு அவற்றை சம்பந்தப்பட்ட வியாபார நிறுவனங்களுக்கு பெருந்தொகையான பணத்துக்கு விற்பனை செய்கின்றன.

TikTok, WeChat போன்றவை சீன அரசுக்குக் கீழ்ப்பட்டவை என்பதால் அவற்றின் அமெரிக்கப் பாவனையாளர் மூலம் அமெரிக்க பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களைச் சீனா அறிந்துகொள்ள முற்படுகிறது என்பது ஜனாதிபதி ட்றம்பின் குற்றச்சாட்டு. தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் எதைச் செய்தாலும் மக்கள் அதைக் கேள்விக்குட்படுத்த மாட்டார்கள் என்பது, இலங்கை உட்பட, எல்லா நாடுகளிலும் அனுட்டிக்கப்படும் ஒன்றுதானே. இந்தியாவும் இதுபோல 40க்கும் மேலான சீன செயலிகளைத் தடை செய்திருக்கிறது.

சீன-அமெரிக்க வர்த்தகப் பிரச்சினை ஆரம்பித்த நாளிலிருந்து விரிவடைந்துவரும் இந்தப் பிரச்சினை வர்த்தகத்தைத் தாண்டி இப்போது சீன-அமெரிக்க உலக மேலாண்மைக்கான போட்டியாகப் பரிணமித்திருக்கிறது. இதில், முன்னைய அமெரிக்க ஜனாதிபதிகளைப் போலல்லாது, ட்றம்பின் அணுகுமுறை வித்தியாசமானதும் விசித்திரமானதுமாக இருக்கிறது.

ட்றம்பின் குணாதிசயத்தை நன்றாக அவதானித்தால், அவர் தன்னை ஒரு சர்வாதிகாரியாக எண்ணிப் புளகாங்கிதமடையும் ஒருவாராகவே தெரிகிறார். சர்வாதிகாரிகளோடு உறவுகளை மேற்கொள்ள விரும்புவதும், அவர்களைப் புகழ்வதும், அவர்கள் போல் நடந்துகொள்வதுமென்று அவரை அது ஒரு வியாதிபோல் பீடித்திருக்கிறது. சட்டங்களையும், கட்டளைகளையும் காங்கிரசினூடாக விவாதித்து செயற்படுத்தாமல் தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் தனது எண்ணங்களுக்கேற்ப நிறைவேற்றிக்கொள்கிறார். சீனாவின் இரகசியமான உலக மேலாண்மைத் திட்டத்தை முறியடிக்க ட்றம்பின் இப்படியான அதிரடி நடவடிக்கைகள் அவருக்கும், உலகத்துக்கும் ஒருவகையில் பலனளித்து வருவதுபோல்தான் தெரிகிறது.



TikTok விடயத்தில், அந் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்று வாங்க வேண்டுமென்றும் அல்லாதபோது அதை அமெரிக்காவில் தடை செய்துவிடுவேன் என அவர் ஆகஸ்ட் மாதமே அச்சுறுத்தியிருந்தார். அதன் பிரகாரம், அதை Microsoft மற்றும் Walmart ஆகிய நிறுவனங்கள் வாங்குவதாக இருந்தது. இப்போது TikTok உரிமையாளரான ByteDance, Microsoft இற்கு விற்க மாட்டேன் என்று மறுத்துவிட்டதாகவும் அதனால் Oracle என்ற இன்னுமொரு அமெரிக்க நிறுவனமும் Walmart டும் சேர்ந்து TikTok கை வாங்க முடிவுசெய்துள்ளதாகவும் தெரிகிறது.

ஆனால் ட்றம்ப் ஏற்றுக்கொள்ளாமல் அங்கு எந்தவித ஒப்பந்தமும் செய்ய முடியாது. தற்போதுள்ள நிலையில் ByteDance பெரும்பான்மைப் பங்குதாரராய் இருப்பதை ட்றம்ப் விரும்பவில்லை. அத்தோடு ட்றம்ப் மேலுமிரு நிபந்தனைகளையும் விதித்திருக்கிறார். அதாவது TikTok கின் தலைமையகம் அமெரிக்காவில் இருக்க வேண்டும், அதன் தரவுகளை ஆராயும் பொறுப்பு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். (TikTok செயலி மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் தற்போது சீனாவிலுள்ள server இல் தான் சேமிக்கப்படுகிறது). இந்த நிபந்தனைகளுக்கு இணங்காவிட்டால் ‘டீல்’ இல்லை. செப்டம்பர் 20 வரை ட்றம்ப் அவகாசம் கொடுத்திருக்கிறார். WeChat இற்கும் இதே நிபந்தனைகள் தான்.

இதில் விசித்திரம் என்னவென்றால், ஒரு அமெரிக்க ஜனாதிபதி தனது சுய விருப்பத்துக்கேற்ப இன்னுமொரு நாட்டின் நிறுவனத்தை கட்டாயத்தின் பேரில் விற்பனை செய்யத் தூண்டுமளவுக்கு பலமானவராக இருக்கிறார். எந்தவொரு நாடும் அவர் எண்ணத்துக்கு இசையாதபோது இராணுவ நடவடிக்கை என்று எதுவுமில்லாமல் வெறும் வர்த்தகத் தடை, பயணத் தடை என்று மிரட்டித் தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்.

TikTok விடயத்தில் ByteDance தனது பெரும்பான்மை பங்குகளை விட்டுக்கொடுக்காது என்பது உறுதி ஆனால் தரவுகள் மீதான security code ஐ பாவிக்கும் உரிமையை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதன் மூலம் ஒரு சமரசத்துக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதிலும் ட்றம்ப் வெற்றி பெற்றதாக உணரவைக்கப்படும்போதுதான் ‘டீல்’ வெற்றிகரமாக நிறைவேறும்.



நாளை (ஞாயிறு 20) இலிருந்து அமெரிக்க செயலிக் கடைகளில் (App Stores) இருந்து TikTok கையோ அல்லது WeChat ஐயோ தரவிறக்க முடியாது என்பது ட்றம்பின் கட்டளை.

இதற்குள் இன்னுமொரு கிசு கிசு. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதுபோல, Oracle நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் லறி எலிசன் ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரும் ஆதரவாளருமானவர். அதன் CEO காட்ஸ், ஜனாதிபதியின் இரண்டாவது வருகைக்காய்ப் பெருந்தொகையான பணத்தை அன்பளிப்புச் செய்தவர். TikTok ஐத் தடை செய்யப்போவதாக அறிவித்த மறுநாள் அதை வாங்குவதற்கான திட்டத்துடன் Oracle வருகிறது. தற்செயல் நிகழ்வு?

சீனாவின் உலக மேலாண்மைக்கு எப்படி Huawei போன்று பலவகையான தொழில்நுட்பங்களையும் பாவிக்க முயல்கிறதோ அவற்றை வைத்தே அதை அழிக்க முற்படும் ட்றம்பின் தற்செயல் நிகழ்வுகளும் சில வேளைகளில் necessary evils என்ற வகைக்குள் அடக்கிவிட்டுப் போகவேண்டியதுதான்.

பாம்பின் காலைப் பாம்புதான் அறியும்.

Print Friendly, PDF & Email